மிஸ் இந்தியா-அமெரிக்கா பட்டத்தை வென்ற பல்கலைக்கழக மாணவி
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகின்றனர். அவர்கள் ஆரம்பித்த இந்திய விழாக்குழு சார்பாக ஆண்டுதோறும் அழகிப்போட்டி நடத்தப்படும். இந்த போட்டியின் மூலம் இந்தியாவை கடந்து இந்திய பெண்கள் அழகிகளாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இளம் அழகி, திருமணம் ஆன மற்றும் திருமணம் ஆகாத பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படும்.
இந்த ஆண்டு நடத்தப்பட்ட மிஸ் இந்தியா-அமெரிக்கா பட்டத்தை வாஷிங்டனைச் சேர்ந்த ஸ்ரீ ஷைனி தட்டிச் சென்றார். இவர் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார். தனது வெற்றி குறித்து ஸ்ரீ ஷைனி பேசுகையில், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மனித கடத்தலை தடுத்தல் மற்றும் அது குறித்த விழிப்புணர்வுகளை மக்களிடையே ஏற்படுத்துவதே தனது நோக்கம் எனக் கூறினார்.
திருமணம் ஆன பெண்களுக்கிடையே நடத்தப்பட்ட மிஸ் இந்தியா-அமெரிக்கா பட்டத்தை கவிதா மல்கோத்ரா பெற்றார். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிரேர்னா மற்றும் ஐஸ்வர்யா பெற்றனர்.
இளம் வயதினருக்கான மிஸ் டீன் இந்தியா-அமெரிக்கா பட்டத்தை நியூஜெர்சி மாகாணத்தைச் சேர்ந்த ஸ்வப்னா மன்னம் தட்டிச்சென்றார். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை சிம்ரன் மற்றும் கிரித்திகா பெற்றனர்.
இந்த போட்டியில் 12 மாநிலங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ஹாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.