மீண்டும் வருமா டீஸர் வீட்டுக் கடன்?

மீண்டும் வருமா டீஸர் வீட்டுக் கடன்?

houseநிலையான வட்டி விகித வீட்டுக் கடன், மாறுபடும் வட்டி விகித வீட்டுக் கடன்களைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். டீஸர் வீட்டுக் கடன் பற்றி கேள்விப்பட்டிருக்கிறார்களா? இப்போது நடைமுறையில்லாத வீட்டுக் கடன் திட்டம் அது. இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக யார் வருகிறார் என்பதைப் பொறுத்து இந்த வீட்டுக் கடன் திட்டம் மீண்டும் வரலாம்.

அதென்ன டீஸர் வீட்டுக் கடன்?

இப்போது வீட்டுக் கடன் எப்படி வழங்கப்படுகின்றன? பெரும்பாலும் மாறுபடும் வட்டி விகிதத்தில் (ஃப்ளோட்டிங் ரேட்) வழங்கப்படுகின்றன. டீஸர் வீட்டுக் கடன் கடன் திட்டம் என்பது முதல் இரண்டு ஆண்டுகள் குறைந்த வட்டியில் தவணைத் தொகை (இ.எம்.ஐ.) வசூலிக்கப்படும். அடுத்த இரண்டு ஆண்டுகள் அதைவிட கொஞ்சம் கூடுதலாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு தவணைத்தொகை வசூலிக்கப்படும்.

அதன்பிறகு மாறுபடும் வட்டி விகிதத்தில் வீட்டுக் கடனுக்கான தவணைத் தொகையை வசூலிப்பார்கள். இப்படி இருவித வட்டி முறையில் வழங்கப்படும் கடன் டீசர் லோன் (teaser loans) என்று அழைக்கப்படுகிறது. இதை ‘அண்டர்ஸ்டேண்டிங் பார்ட் ஃபிக்ஸ்டு லோன்’ என்றும் சொல்கிறார்கள். இந்தக் கடன் திட்டம் அமெரிக்காவில் வழங்கப்படும் டீஸர் கடனை வைத்து இந்தியாவில் உருவாக்கப்பட்டது.

பொதுத்துறை வங்கிகளில் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) கடந்த 2009-ம் ஆண்டில் இந்த வீட்டுக் கடன் திட்டத்தை அறிமுகபடுத்தியது. முதன் முதலாக அறிமுகப்படுத்தியபோது முதல் ஆண்டு 8 சதவீத வட்டி விகிதமும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு 9 சதவீதம் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதமாக நிர்ணயிக்கப்பட்டது. நான்காம் ஆண்டு முதல் அன்றைய நிலவரத்துக்கு ஏற்ப வழக்கமான மாறுபடும் வட்டி விகிதம் வீட்டுக் கடனுக்கு வசூலிக்கப்பட்டது. எஸ்.பி.ஐ.-யின் இந்தத் திட்டத்தைப் பார்த்த பிற வங்கிகளும் டீஸர் வீட்டுக் கடன்களை வழங்க ஆரம்பித்தன.

இந்த டீஸர் வீட்டுக் கடன் அந்தக் காலகட்டத்தில் அதிகமாக வழங்கப்பட்டது. ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்த வட்டி விகிதத்தால் செலுத்தப்படும் தவணைத் தொகையும் அதிகமானது. இதனால் டீஸர் வீட்டுக் கடன் வாங்கியவர்கள் செய்வதறியாமல் திகைத்தார்கள்.

விருப்பமில்லாமல் அல்லது செலுத்த முடியாத அளவுக்கு வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டது விவாதப் பொருளானது. ஒருவருக்கு வாங்கிய வீட்டுக் கடனை 5 முதல் 10 ஆண்டுகளுக்குள் முழுமையாக அடைக்கும் திட்டமிருந்தால், அதிகபட்ச வட்டி விகிதத்துடன் அடைக்க வேண்டிய நிலையும் இந்த வீட்டுக் கடன் திட்டத்தால் ஏற்பட்டது. இது பெரிய சிக்கலாக உருவெடுக்க ஆரம்பித்தது.

ஆளுநர் கையில் முடிவு

உயரும் வட்டி விகிதத்தால் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு தவணைத் தொகை செலுத்துவதில் சிக்கல் ஏற்படும் என்பதை உணர்ந்த ரிசர்வ் வங்கி, 2011-ம் ஆண்டு ஏப்ரலில் டீஸர் வீட்டுக் கடனுக்கு தடை விதித்தது. தற்போது இந்தியாவில் டீஸர் வீட்டுக் கடன் திட்டம் எங்கும் இல்லை. ஆனால், தற்போது எஸ்.பி.ஐ.-யின் தலைவராக உள்ள அருந்ததி பட்டாச்சார்யா, டீஸர் வீட்டுக் கடனை திரும்பவும் கொண்டு வர அனுமதி அளிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜனிடம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோரிக்கை விடுத்தார்.

இந்தத் திட்டத்துக்கு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிப்பதாக ரிசர்வ் வங்கியும் அறிவித்திருந்தது. டீஸர் கடன் ரத்து செய்யப்பட்டபோது, இந்தியாவின் பொருளாதாரம் மந்தமாக இருப்பதாகவும், பண வீக்கம் அதிகமாக இருப்பதாகவும் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. தற்போது இந்திய பொருளாதாரம் மேம்பட்டிருப்பதால் டீஸர் கடனுக்கு அனுமதி கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தற்போது வரை டீஸர் வீட்டுக் கடனுக்கு அனுமதி வழங்கப் படவில்லை. இந்தச் சூழ்நிலையில் தற்போதைய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜனின் பதவிக்காலம் செப்டம்பர் மாதத்தில் நிறைவடைகிறது. மீண்டும் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருக்க விருப்பமில்லை என்று ரகுராம் ராஜன் தெரிவித்துவிட்டார். எனவே அடுத்த ரிசர்வ் வங்கியின் ஆளுநராக யார் வருவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் தற்போதைய எஸ்.பி.ஐ. தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ், ஆர்பிஐ முன்னாள் துணை ஆளுநர் சுபீர் கோகர்ண் ஆகியோர் பெயர்கள் முக்கியமாகப் பரிசீலிக்கப்படுவதாகத் தெரிகிறது. இதில் அருந்ததி பட்டாச்சார்யாவின் பெயர் முன்னணியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஒரு வேளை ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநகராக அருந்ததி பட்டாச்சார்யா நியமிக்கப்பட்டால், டீஸர் வீட்டுக் கடன் திட்டம் திரும்பவும் வரக்கூடும் என்று வங்கியாளர்கள் கூறுகிறார்கள். ஏற்கெனவே டீஸர் வீட்டுக் கடன் வழங்க அனுமதி வழங்க வேண்டும் என்று அருந்ததி கூறியவர் என்பதால் இந்த வீட்டுக் கடன் திட்டத்துக்கு அனுமதி வழங்க அதிக வாய்ப்புகள் உண்டு என்றும் அமெரிக்கா டீஸர் வீட்டுக் கடன் போல் இல்லாமல் இந்தியாவுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்படலாம் என்றும் தகவல்கள் உலா வருகின்றன.

இந்த வீட்டுக் கடன் வருமா, வராதா என்பதற்கு இன்னும் கொஞ்ச காலம் பொறுத்திருக்க வேண்டும்!

உயரும் வட்டி விகிதத்தால் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு தவணைத் தொகை செலுத்துவதில் சிக்கல் ஏற்படும் என்பதை உணர்ந்த ரிசர்வ் வங்கி, 2011-ம் ஆண்டு ஏப்ரலில் டீஸர் வீட்டுக் கடனுக்குத் தடை விதித்தது. தற்போது இந்தியாவில் டீஸர் வீட்டுக் கடன் திட்டம் எங்கும் இல்லை.

Leave a Reply