மீன் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு சென்றாரா முதல்வர்? பாஜகவினர் ஆவேச எதிர்ப்பு

மீன் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு சென்றாரா முதல்வர்? பாஜகவினர் ஆவேச எதிர்ப்பு

கர்நாடக முதல்வர் சித்தராமையா மீன் சாப்பிட்டுவிட்டு மங்களூருவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, தர்மஸ்தாலா கோவிலுக்கு சென்றதாக பாஜகவினர் புகார் கூறி வருகின்றனர். அசைவம் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு சென்ற முதல்வருக்கு பாஜக கர்நாடக மாநில தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருவதை அடுத்து இதுகுறித்து முதல்வர் சித்தராமையா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

நான் கடந்த 22ஆம் தேதி மங்களூருவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, தர்மஸ்தாலா கோவிலுக்கு சென்றேன். நான் கோவிலுக்கு சென்ற போது மீன் சாப்பிட்டு விட்டு தான் சென்றேன். தர்மஸ்தாலா கோவிலின் அதிகாரி வீரேந்திர ஹெக்டே கேட்டு கொண்டதன்பேரில் தான் நான் அவசரமாக கோவிலுக்கு சென்றேன். ஆனால் கோவிலின் கருவறைக்குள் நான் செல்லவில்லை. ஆனால் நான் மீன்சாப்பிட்டு கொண்ட வி‌ஷயத்தை கையில் எடுத்து கொண்டு, பா.ஜனதாவினர் அரசியல் செய்கிறார்கள். அவர்கள் மாநில அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். அவர்களுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டியது இல்லை.

கடவுள் பற்றி தெளிவான விழிப்புணர்வு இல்லாதவர்கள் சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அசைவத்தை சாப்பிட்டால், அந்த உணவு 48 மணி நேரம் நம் உடம்பில் தான் இருக்கும். இதனால் அசைவம் சாப்பிட்ட மறுநாள் கோவிலுக்கு செல்லாமல் இருக்க முடியுமா? ‘நான் ஏழையய்யா‘, ‘என் காலே கம்பம்‘, ‘உடலே கோவில்‘, ‘தலையே கவசம்‘ என்று 850 வருடங்களுக்கு முன்பே பசவண்ணவர் கூறியுள்ளார். இது என்னை பற்றி குறைகூறுபவர்களுக்கு தெரிந்தால் போதும். மனதில் நல்ல எண்ணம் கொண்டு கோவிலுக்கு செல்பவர்களுக்கு கடவுள் நிச்சயமாக நல்லதை தான் செய்வார்’ என்று முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

 

Leave a Reply