‘மீ டூ’ விவகாரம்: மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா

‘மீ டூ’ விவகாரம்: மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா

பெண் பத்திரிகையாளர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி எம்.ஜே.அக்பர் மீது ‘மீடு’ புகார் எழுந்த நிலையில் இன்று அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் உள்பட 10க்கும் மேற்பட்ட பெண் பத்திரிகையாளர்கள் எம்.ஜே.அக்பர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கி வந்தனர். இதில் பிரியா ரமணி, கசாலா வகாப், ஷுமா ரகா, அஞ்சு பாரதி உள்ளிட்ட பிரபல பத்திரிகையாளர்களும் அடங்குவர். இந்த நிலையில், மந்திரி அக்பர் மீது இன்று கூடுதலாக 2 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்து உள்ளனர்.

பெண் பத்திரிகையாளரான துஷிடா பட்டேல் மற்றும் பெண் தொழிலதிபரான சுவாதி கவுதம் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர். இதனால் அக்பருக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ள பெண்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

‘ஆசின் ஏஜ் ‘ பத்திரிகையில் பணிபுரிந்த 17 பெண் பத்திரிகையாளர்கள், இணைந்து பிரியா ரமணிக்கு ஆதரவாக குரல் எழுப்பி உள்ளனர். அக்பருக்கு எதிரான சாட்சியங்களை கேட்க இந்த பத்திரிகையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர், அவர்களில் சிலர் மந்திரியின் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர், மற்றவர்கள் அதை சாட்சியாகக் கொண்டுள்ளனர். இவர்கள் 17 பேரும் இணைந்து கூட்டாக அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.

இந்த நிலையில் மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்து உள்ளார்.

Leave a Reply