முகங்கள்: நீரோடைபோல வாழ வேண்டும்!
ஏராளமான திறமைகள் இருந்தும் அவற்றை வெளிப்படுத்த முடியாமல் வீடு என்ற கூண்டுக்குள் பெண்கள் அடைபட்டுக் கிடக்கின்றனர். கூண்டுப் பறவை தன் சிறகுகளை விரித்து வானில் பறந்து செல்வதுபோல் பெண்களும் தங்களின் திறமைகளை வெளிப்படுத்திதான் ஆக வேண்டும்.
அப்படிக் கூண்டை விட்டு வெளியே வந்த ஒரு பறவை போல இருக்கிறார் சென்னை விருகம்பாக்கத்தில் வசித்துவரும் சுப்புலட்சுமி. எம்.காம்., எம்.ஏ. முடித்து, மாநிலக் கூடைப்பந்து விளையாட்டு வீராங்கனையாக இருந்தவர். பெரும்பாலான பெண்களைப் போல் திருமணத்துக்குப் பிறகு வீடே உலகம் என்று தன் வாழ்க்கையைச் சுருக்கிக்கொண்டார்.
“நம்மை நாமே காப்பாற்றிக் கொள்வதற்கான சூழ்நிலை வாழ்க்கையில் ஏற்படும். எனக்கும் அது போன்ற சூழல் ஏற்பட்டது. ஆபீஸுக்குப் போய் வேலை செய்த அனுபவம் எனக்கு இல்லை. ஆனால் கண்டிப்பா உழைச்சே ஆகணும்ங்கற கட்டாயம் ஏற்பட்டது. இரண்டு மகள்களைக் காப்பாற்றணும். 35 வயதில் யாரிடம் போய் வேலை கேட்பது? அதனால் சுயதொழில் ஆரம்பிப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. நகைகளை விற்ற பணத்தையும் சேமிப்பையும் வைத்து, இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தரும் (job opportunity) நிறுவனத்தைத் தொடங்கினேன்.
தோழிகளின் உதவியால் பல இளைஞர்களுக்கு வேலை வாங்கிக் கொடுக்க முடிந்தது. பிறகு குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்காகச் சட்ட உதவி மையம் நடத்தினேன். சட்ட உதவி போல் பொருளாதார உதவியும் பெண்களுக்கு முக்கியத் தேவையாக இருந்தது. இதற்காகப் பெண்களுக்குச் சுயதொழிலைக் கற்றுத் தரும் ‘சகி’ என்ற அமைப்பை ஆரம்பித்தேன்” என்று சொல்லும் சுப்புலட்சுமி, இன்றுவரை பொருளாதாரத் தேவைக்காக யாரையும் சார்ந்து இருந்ததில்லை என்று பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார்.
இவரது ‘சகி’ அமைப்பு மூலம் பெண்களுக்குத் தையல், எல்.இ.டி. விளக்குத் தயாரிப்பு ஆகியவற்றைக் கற்றுத்தருகிறார்கள். தவிர ஊறுகாய், பலகாரங்கள், கலவை சாதப் பொடி வகைகள், வேதிப் பொருட்கள் சேர்க்காத ஜுஸ் வகைகள், ஜாம் போன்ற உணவுப் பொருட்களைச் செய்யவும் பயிற்சியளிக்கிறார்கள்.
இந்த அமைப்பு மூலம் சுயதொழில் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் பெண்களும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களும் பயிற்சி பெற்றுவருகிறார்கள். பயிற்சிக் காலத்திலேயே ஊதியம் கிடைக்கும் வகையில், அவர்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களை சகி அமைப்பு மூலம் விற்பனை செய்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட தொகை ஊதியமாக வழங்கப்படுகிறது.
“மனைவி, குழந்தைகளைப் பற்றி யோசிக்காமல் ஆண்கள் சுயநலமாகச் சென்றுவிடுகிறார்கள். சிலர் எதிர்பாராத விதத்தில் இளம் வயதிலேயே மரணமடைந்துவிடுகிறார்கள். வாழ்க்கையில் திடீரென்று ஏற்படும் இந்தச் சூழ்நிலையிலிருந்து எப்படி வெளியே வர வேண்டும் என்று தெரியாமல் பல பெண்கள் நிலைகுலைந்து போய்விடுகிறார்கள். அந்தச் சமயத்தில் அவர்களுக்கு ஒரு வழிகாட்டி தேவை. அந்த வழிகாட்டியாக நான் இருப்பதை என் கடமையாகப் பார்க்கிறேன்.
வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல நாம் உழைத்துதான் ஆக வேண்டும் என்ற மனநிலை உண்டாக வேண்டும். உழைப்பு அவர்களை வேறு ஒரு நிலைக்குக் கொண்டுசென்றுவிடும். ஓடிக்கொண்டே இருந்தால்தான் நீரோடை சுத்தமாக இருக்கும். அதுபோல வாழ்க்கையில் எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் எந்த இடத்திலும் தேங்கி நிற்கக் கூடாது” என்று அழுத்தமாகச் சொல்கிறார் சுப்புலட்சுமி.