முடிவுக்கு வந்தது லாரிகள் வேலைநிறுத்தம்
கடந்த 8 நாள்களாக அகில இந்திய அளவில் நடைபெற்று வந்த லாரி உரிமையாளா்களின் வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று இரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தியா முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் லாரிகள் ஓடத்தொடங்கியது.
பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவேண்டும். சுங்க கட்டணத்தை ரத்து செய்து விட்டு ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் சுங்க கட்டணத்தை வசூலிக்க வேண்டும். 3ம் நபருக்கான காப்பீட்டுத் தொகையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு வாரத்திற்கு மேலும் அகில இந்திய அளவில் லாரி உரிமையாளா்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
நாடு முழுவதும் லாரிகள் இயங்காததால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வேறு இடத்திற்கு கொண்டு செல்வதில் தேக்கம் ஏற்பட்டது. காய்கறிகளின் வரத்து தடை பட்டதால் சந்தைகளில் காய்கறிகளின் விலை கடுமையாக உயரத் தொடங்கி உள்ளது.
இந்நிலையில் தலைநகா் டெல்லியில் லாரி உரிமையாளா்கள் சங்கத்தினர் மற்றும் மத்திய அரசு அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளதாக அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து கடந்த 8 நாள்களாக நடைபெற்று வந்த வேலைநிறுத்தப் போராட்டம் திரும்ப பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.