முதலமைச்சரை கொல்ல போதை மருந்து மாபியாக்கள் திட்டம்: அதிர்ச்சி தகவல்
போதை மருந்து மாபியாக்கள் திரிபுரா முதல்வரை கொலை செய்ய தீட்டிய திட்டம் தற்போது தெரியவந்துள்ளதால் திரிபுரா முதல்வருக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
போதை கும்பலுக்கு எதிராக திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேவின் அதிரடி நடவடிக்கைகளால் போதை மருந்து கடத்தல் கும்பல்கள் கடும் ஆத்திரம் அடைந்துள்ளனர். அத்துடன் அவரை கொலை செய்யவும் திட்டம் தீட்டியுள்ளனர். போதை மருந்து மாபியாக்கள் மியான்மரில் ஒன்று கூடி, முதல்வரை கொலை செய்வற்கு கூலிப்படையை நியமிப்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து முதல்வருக்கான பாதுகாப்பை அதிகரிக்கும்படி திரிபுரா அரசுக்கு மத்திய உள்துறை அறிவுறுத்தியது. முதல்வருக்கு தற்போது ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. மத்திய உள்துறை அறிவுறுத்தலைத் தொடர்ந்து, இசட் பிரிவு பாதுகாப்பு அளிப்பதற்கான நடைமுறைகள் தொடங்கி உள்ளன. இதுதவிர உளவுத்துறை தகவல்களையும் உடனுக்குடன் பெற்று அதன் அடிப்படையில் கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்திற்குள் மட்டுமின்றி மாநிலத்திற்கு வெளியிலும் அவருக்கு பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பாஜக மாநில பொதுச்செயலாளர் ரஜிப் பட்டாச்சார்ஜி கூறினார்.