முதியவர் உயிரைக் காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்: ஹாங்காங்கில் சுவாரசியம்

முதியவர் உயிரைக் காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்: ஹாங்காங்கில் சுவாரசியம்

டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் உடல்நலம் கெடுகிறது என்று ஒரு பக்கம் விமர்சனங்கள் எழுந்தாலும், 76 வயது முதியவர் ஒருவரின் உயிரை நவீன தொழில்நுட்பம் காப்பாற்றியுள்ளது. இதய நோய் இருக்கும் அனைவரும் ஆப்பிள் வாட்ச் பயன்படுத்த வேண்டும் என்று அவரும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

காஸ்டன் டி அகினோ ஒரு வைர வியாபாரி. ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள் சர்ச்சில் அமர்ந்திருந்தார். அப்போது அவரது ஆப்பிள் வாட்சில் இருந்த எச்சரிக்கை மணி ஒலித்தது. அகினோவின் இதய துடிப்பு அதிகமாக இருப்பதாக அந்த எச்சரிக்கை செய்தி தெரிவித்தது.

இத்தனைக்கும் அகினோ எந்த அசௌகரியத்தையும் உணரவில்லை. ஆனால் அவர் அந்த எச்சரிக்கை செய்தியை ஒதுக்கிவிடாமல் அன்றைய தினம் தனது குடும்பத்துடனான மதிய உணவை தவிர்த்துவிட்டு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

அவரது இந்த முடிவு, அவர் உயிரைக் காப்பாற்றிய முடிவாக மாறியது. பரிசோதனைகள் செய்து பார்த்ததில் அவரது இதய தமனிகளில் அடைப்பு இருந்தது தெரியவந்தது.

ஆப்பிள் வாட்சின் துல்லியமான கணிப்பை வியந்த மருத்துவர்கள், அகினோவுக்கு ஆன்ஜியோ பிளாஸ்டி சிகிச்சை மூலம் அடைப்பை நீக்கினார்கள். அடுத்த நாளே அகினோ வீட்டுக்கு சென்றுவிட்டார்.

தன்னை ஆப்பிள் கருவிகளின் ரசிகன் என்று சொல்லிக்கொள்ளும் அகினோ, ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக்குக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில் ஆப்பிள் வாட்ச் தன் உயிரைக் காப்பாற்றிய கதையை குறிப்பிட்டு, “என் வாட்ச் எச்சரிக்கை தந்தது இதுதான் முதல் முறை. எனக்கு வலியோ, மயக்கமோ இல்லை. ஆனாலும் எந்த தருணத்திலும் நான் பாதிக்கப்பட்டிருப்பேன். ஆப்பிள் வாட்ச் மூலமாக என் உயிர் காப்பாற்றப்பட்டது. இதய பிரச்சினைகள் இருக்கும் அனைவரும் ஆப்பிள் வாட்ச் பயன்படுத்த வலியுறுத்தப்பட வேண்டும்” என்று எழுதியுள்ளார்.

அகினோவுக்கு பதில் எழுதியுள்ள குக், “காஸ்டன், நீங்கள் மருத்துவ உதவியை நாடி தற்போது நலமாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் நேரத்தை ஒதுக்கி இந்த சம்பவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி. இன்னும் சிறப்பாக செயல்பட இது எங்களுக்கு உந்துதலாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply