முதுநிலை மருத்துவப் படிப்பில் கூடுதலாக 100 இடங்கள்?

முதுநிலை மருத்துவப் படிப்பில் கூடுதலாக 100 இடங்கள்?

தமிழகத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் கூடுதலாக 100 இடங்களைப் பெற விண்ணப்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள்ஆராயப்பட்டு வருகின்றன.

இளநிலை, முதுநிலை, உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அதிக இடங்களைப் பெற்றுள்ள மாநிலங்களில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. இங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலைப் படிப்புகளுக்கு கூடுதல் இடங்களைப் பெறுவதற்கான சாத்தியங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மருத்துவக் கல்வி இயக்ககத்தில் புதன்கிழமை நடைபெற்றது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இந்திய மருத்துவக் கவுன்சில் ஒருங்கிணைப்பு அதிகாரிகளுடன் மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எட்வின் ஜோ ஆலோசனை நடத்திய பிறகு கூறியது:
தளர்த்தப்பட்டுள்ள விதிமுறைகள்: கூடுதல் இடங்களைப் பெறுவதற்கான இந்திய மருத்துவக் கவுன்சிலின் (எம்.சி.ஐ.) விதிமுறைகள் அண்மையில் தளர்த்தப்பட்டுள்ளன. எம்.சி.ஐ. அதிகாரிகள் ஆய்வு நடத்திய பின்னரே கூடுதல் இடங்களுக்கான அனுமதி அளிக்கப்படும். ஆனால், தற்போது கூடுதல் இடங்களைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை அந்தந்த மாநிலங்கள் ஆராய்ந்து, விண்ணப்பிக்க வேண்டும்.

அதன்படி, கூடுதல் இடங்களுக்கான அனுமதி வழங்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறும். மாணவர் சேர்க்கை நடைபெற்றதற்கு அடுத்த ஆண்டு எம்.சி.ஐ. அதிகாரிகள் ஆய்வுக்கு வருவர். அப்போது மருத்துவக் கல்லூரிகளில் ஆசிரியர்-மாணவர் விகிதம், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள தொழில்நுட்ப வசதிகள், உட்கட்டமைப்பு வசதிகள் ஆகியவை சரியான வகையில் பூர்த்தி செய்யப்பட்டிருந்தால், அளிக்கப்பட்ட அனுமதி நீட்டிக்கப்படும். இல்லையென்றால் அனுமதி ரத்து செய்யப்படும்.

கூடுதல் இடங்கள்: இதனால் தமிழகத்தில் கூடுதல் இடங்களைப் பெறுவதற்கான சாத்தியங்கள் ஆராயப்பட்டு கல்லூரிகள் கண்டறியப்பட்டுள்ளன.

அண்மையில் தொடங்கப்பட்ட புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி தவிர்த்து மீதம் உள்ள 24 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் கூடுதலாக 100-க்கும் மேற்பட்ட இடங்களைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது.

எனவே, இதுதொடர்பாக தமிழக அரசுக்கு தகவல் அளிக்கப்பட்டு, கூடுதல் இடங்களைப் பெறுவதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்படும். அனுமதி கிடைக்கும் பட்சத்தில் அடுத்த கல்வியாண்டில் (2019-2020) கூடுதல் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்றார் அவர்.
தமிழகத்தில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் புதிதாக 32 முதுநிலை இடங்கள், மேலும் 6 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 56 முதுநிலை இடங்களுக்கும் இந்திய மருத்துவக் கவுன்சில் அண்மையில் அனுமதி அளித்துள்ளது. அதன் அடிப்படையில், தற்போது தமிழகத்தில் முதுநிலை மருத்துவ இடங்களின் எண்ணிக்கை 1,641- ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply