முதுமை என்றால் எந்த வயது?

முதுமை என்றால் எந்த வயது?
Guz_90_Anniversary_Oldest_Married-007.JPG
நாற்பது வயது என்பது இளமையில் முதுமை. ஐம்பது வயது முதுமையில் இளமை’ என்கிறார் ஹோசா பாலோ. ஆனால், இளமையைக் கொண்டாடும் சமூகம் முதுமை என்றால் முகம் சுளிக்கிறது.

முகத்தில் சுருக்கம், உடலில் குடிகொள்ளும் நோய்கள், தள்ளாடும் நடை, பெற்ற குழந்தைகளின் புறக்கணிப்பு, தனிமை இப்படி நீளும் பட்டியலில் முதுமைக்கு எது பெருமை என்று தானே எண்ணுகிறீர்கள். ஆனால், நான் பயணித்த சில நாடுகளில் சந்தித்த முதியவர்கள், முதுமையைப் பற்றிய எண்ணங்களை மாற்றிவிட்டனர்.

மலை முழுக்க நெல்

சீனாவின் மிகப் பிரபலமான குபின் சுற்றுலாத்தலத்துக்கு அருகாமையில் இருக்கும் லாங் ஷெங்கிலிருந்து 27 கி.மீ. தொலைவில் இருக்கிறது லாங்ஜி என்கிற கிராமம், இங்கு டிராகன் பேக்போன் ரைஸ் டெரஸ் என்கிற நெல் வயல்கள் புகழ்பெற்றவை.

கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டரிலிருந்து 11,000 மீட்டர்வரை உயர்ந்திருக்கும் மலைகள், குன்றுகளில் மொத்தம் 16,308 ஏக்கர் பரப்புக்குச் சுற்றிச் சுழன்று உச்சிவரை செல்லும் வயல்வரப்புகளில் நெல்லை விதைத்து வளரச் செய்துள்ளனர். 1271-1368-ல் யுவான் வம்ச ஆட்சி காலத்தில் தொடங்கிய இந்தச் சிரமமான வேலை 1644-1911-ல் குவிங் வம்ச ஆட்சிவரை நீடித்திருக்கிறது. இந்தப் பகுதியில் வாழும் ஸுவாங் மக்களின் கடின உழைப்பே இந்தச் சாதனையைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது.

அசந்துபோனேன்

இந்த மலைகளில் ஒன்றில் ஏறிக் குன்றுகளில் பயிர் செய்யப்பட்டிருக்கும் நெற்கதிர்களையும் அவற்றைத் தாங்கி நிற்கும் டிராகன் முதுகெலும்பு வயல்களையும் பார்க்க நானும் என் கணவரும் ஏறிக்கொண்டிருந்தோம்.

இது மிக உயரமான மலை, உங்களால் ஏற முடியாது என்று ஆட்களைச் சுமந்து செல்லும் டோலிகளை தூக்கிக்கொண்டு கிராமத்து ஆட்கள் ஓடிவந்தனர். அதைத் தள்ளி வைத்துவிட்டு, நாங்கள் ஏறத் தொடங்கினோம். பாதித் தொலைவு ஏறியவுடன் மூச்சிரைக்க ஆரம்பித்தது. சிறிது சிரமப்பட்டு ஏறினோம். ஆனால், எங்களைப் பின்தள்ளி விட்டு ஏழு, எட்டு லாங்ஜி கிராமத்துப் பெண்கள் குடுகுடு என்று மேலே ஏறிச் சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் தாவித்தாவி ஏறிக்கொண்டிருந்ததைப் பார்த்து அசந்து போனேன்.

“இதற்கே இப்படி ஆச்சரியப்படுகிறீர்களே, அவர்களுடைய வயதைக் கேட்டால் என்ன சொல்வீர்கள்?” என்று தன் தோள்களைக் குலுக்கிக்கொண்டே சொன்னார் எங்களுடன் வந்த சுற்றுலா வழிகாட்டி.

“அவர்களுக்கு ஒரு அறுபது வயது இருக்குமா?” என்று தயங்கியபடியே நான் சொன்னேன். அதற்குக் கைகளைக் கொட்டிச் சிரித்த அந்த வழிகாட்டியைக் கேள்விக்குறியுடன் பார்த்தேன்.

“அவர்கள் அனைவரும் 90 வயதைக் கடந்தவர்கள்” என்றாரே பார்க்க வேண்டும். “என்ன உண்மையா, இந்த வயதிலும் இப்படி ஒரு வேகமா” என்று அசந்து போனேன்.

“லாங்ஜி மக்களின் வாழ்க்கைமுறையும் சுற்றுச்சூழலும்தான் அவர்களுடைய ஆரோக்கியத்துக்கும் நீண்ட ஆயுளுக்கும் அடிகோலியிருக்கிறது” என்றார்.

முதுமையிலும் இளமை

வயதைத் தள்ளி வைத்துவிட்டு எப்பொழுதும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வது, ஆவியில் வேக வைத்த காய்கறிகள், அவித்த பருப்பு வகைகள், அரிசி உணவு, எண்ணெயில் பொரித்து எடுக்காத மீன் வகைகள், சொந்தப் பந்தங்களுடன் கூடி வாழ்வது, இயற்கையோடு இயைந்த வாழ்க்கை, போதும் என்ற மனம், போட்டி – பொறாமை அற்ற மகிழ்ச்சியான வாழ்க்கை போன்றவை இவர்களிடையே நோய்களையும் வயோதிகத்தையும் விரட்டி முதுமையிலும் இளமையாக வைத்திருக்கிறது.

ஜப்பான் நாட்டிலும் எண்பது வயதைக் கடந்த முதியவர்கள் வேகமாகச் சைக்கிள் ஓட்டிப்போவதைப் பார்த்திருக்கிறேன். அத்துடன் பூங்காக்களில் தாய்ச்சி எனப்படும் உடற்பயிற்சியைச் செய்துகொண்டிருப்பார்கள்.

ஐரோப்பிய நாடுகளில் முதிய பெண்கள் நேர்த்தியாக உடை அணிந்துகொண்டு, கேளிக்கை இடங்களில் இளைஞர்களுக்கு இணையாக விளையாடி மகிழ்கிறார்கள். அவர்கள் அடிக்கடி மேற்கொள்ளும் ஹெல்த் செக்கப் மூலம் கிடைக்கும் தெளிவு, செயல்படுவதற்கான சக்தியைத் தருகிறது.

ஒளிரும் தன்னம்பிக்கை

நியூயார்க் நகரத்தில் ஓர் உணவகத்தில் எண்பது வயதைக் கடந்த ஒரு பெண், முதுகில் ஆக்சிஜன் சிலிண்டரைச் சுமந்தபடி உட்கார்ந்து உணவு அருந்திக்கொண்டிருந்ததைப் பார்த்து அசந்து போனேன்.

மெதுவாக அவரிடம் சென்று அவரின் மனோதிடத்தைப் பாராட்டினேன். “நான் என்னுடைய வாழ்க்கையை, அதனுடைய கடைசி விநாடிவரை மகிழ்ச்சியாகக் கழிக்க விழைகிறேன்” என்றார்.

இப்படிப்பட்ட மனோபாவம் இருந்தால், முதுமையும் அதைத் தொடரும் இன்னல்களும் சூரியனைக் கண்ட பனியாக மறைந்துபோகும். முதுமையிலும் இனிமை காணலாம்.

Leave a Reply