முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார்.
இந்திய தேர்தலில் பெரும் புரட்சிகளை செய்த இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் சென்னையில் நேற்று இரவு 11 மணிக்கு காலமானார். திருநெல்லை நாராயண அய்யர் சேஷன் அல்லது டி. என். சேஷன் என்று நாடு முழுக்க இவர் அறியப்பட்ட இவருக்கு வயது 87. வயோதிகம் காரணமாக வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வந்த டி.என்.சேஷன் நேற்றிரவு காலமானதை அவரது உறவினர்கள் உறுதி செய்தனர்.
தேர்தல் கமிஷனுக்கு இவ்வளவு அதிகாரம் உள்ளது என்பதை நாட்டிற்கு உணர்த்தி அதன்மூலம் தேர்தல்களை மிகச் சிறப்பாகவும் நேர்மையாகவும் நடத்த முடியும் என்று நிரூபணம் செய்து காட்டியவர் டி.என்.சேஷன் என்று புகழப்படுகிறார். மேலும் தூய்மையான, நல்ல அதிகாரி, யாருக்கும் தலைசாய்க்காத நேர்மை, அரசியல்வாதிகளுக்கு அடிபணியாமல் பணி செய்த துணிவு ஆகியவை அவரது சாதனை ஆகும்.
டி.என்.சேஷன் மறைவிற்கு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் உள்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.