முறுக்குக் கம்பிகள் தரமானவையா?

முறுக்குக் கம்பிகள் தரமானவையா?

iron rodரயில்வே மேம்பாலம் அருகில் எப்போதாவது நின்று பார்த்திருக்கிறீர்களா? வாகனங்கள், ரயில்கள் விரைந்து செல்லும்போது பாலம் முழுமைக்கும் அதிரும். பாலத்தின் மேல் நிற்கும் நீங்கள் பாலம் உடைந்து போய்விடும் என்ற அளவுக்குப் பயந்துபோய்விடுவீர்கள். பாலம் தரக் குறைவாகக் கட்டப்பட்டுள்ளதாக நினைத்து நாட்டின் லஞ்சம், லாவண்யத்தைப் பற்றிப் புகார் சொல்லத் தொடங்கிவிடுவோம். உண்மையில் அந்தப் பாலம் பலவீனமானதா?

இல்லை. பாலம் சரியாகத்தான் கட்டப்பட்டுள்ளது. அதற்கான சாட்சிதான் இந்த அதிர்வு. அதாவது பாலத்தின் மீது பேருந்து, லாரி போன்ற வாகனங்கள் செல்லும்போது அது விரைப்பாக நின்றால் உடைந்துபோய்விடும். சற்றுத் தளர்வாக இருக்கும்போதுதான் பாலத்தால் பாரத்தை தாங்கிக்கொள்ள முடியும். ஓரளவு புரியும்படி சொன்னால், ஊசி போடும்போது விரைப்பாகக் கையை வைக்கக் கூடாது என்கிறார்களே அதுபோலத்தான்.

அப்படியானால் பளு தாங்கக்கூடிய ஒரு பொருளுக்குத் தளர்வுத்தன்மை அவசியம் எனத் தெரியவருகிறது. நமது வீட்டின் பாரத்தைத் தாங்கக்கூடிய கட்டுமானக் கம்பிகளுக்கும் அது அவசியம் என்பதையும் இப்போது புரிந்துகொண்டிருப்பீர்கள். கட்டுமானக் கம்பிகளைத் தரை ஊன்றிக் கொஞ்சம் வளைத்துப் பார்க்க வேண்டும். போதிய அளவிலான தளர்வுத்தன்மை இருந்தால்தான் அது கட்டிடத்துக்குப் பயன்படும்.

கட்டுமானக் கம்பியில் இரண்டு அடி நீளமுள்ள கம்பியைக் கையில் எடுத்து மறு முனையைத் தரையில் தட்டிப் பார்த்தால் கம்பியில் அதிர்வு ஏற்படும். அப்படி ஏற்பட்டால் அது கட்டுமானத்துக்கு உகந்த கம்பி.

டி.எம்.டி. முறுக்குக் கம்பி என்றால் என்ன?

டிஎம்டி முறுக்குக் கம்பி என்று விளம்பரங்களில் பார்த்திருப்பீர்கள். வெப்ப இயக்கவியல் சோதனைக்கு (Thermo-Mechanical Treatment-TMT) ஆளான கம்பிகள்தான் டிஎம்டி கம்பிகள் என அழைக்கப்படுகின்றன. இந்தச் சோதனையின்போது கம்பியை அதிகபட்ச வெப்பநிலையில் வைத்தும், குளிர்வித்தும் அதனுடைய தரத்தைச் சோதிப்பார்கள். அதன் மீது பாரத்தைச் செலுத்தி அதன் தாங்குதிறனையும் சோதிப்பார்கள். இந்தச் சோதனைகளுக்கு உட்படுத்திய கம்பிகள்தான் தரமானவையாக இருக்கும்.

இந்த டிஎம்டி சோதனை முக்கியமானது. நமது கட்டுமானக் கம்பிகளுக்கு அவ்சியமானது. அதனால் வாங்கக்கூடிய கம்பிகள் டிஎம்டி கம்பிகளா எனச் சரிபார்த்து வாங்க வேண்டும். அதுபோலக் கம்பிகள் எண்ணெய் பிசுபிசுப்போ, சேறோ படியாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் கான்கிரீட்டுடன் அவை பிணைப்பில்லாமல் போக இந்த எண்ணெய்ப் பிசுக்கு ஒரு காரணமாக இருக்கும்.

கட்டுமானக் கம்பிகள் தயாரிப்பில் இன்றைக்குப் பல நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. கட்டுமானக் கம்பிகளில் பல முறைகேடுகளும் நடக்கின்றன. கழிவு இரும்புகளை மூலப் பொருளாகக் கொண்டு கம்பிகள் தயாரிக்கப்படும்போது அதன் தாங்கு திறன் எதிர்பார்த்த அளவு இருக்காது. அதனால் வீட்டின் பாரம் தாங்க முடியாமல் கம்பிகள் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புள்ளது. அதனால் கம்பிகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை.

கட்டுமானக் கம்பிகளின் தாங்கு திறனைச் சோதனை செய்ய இப்போது யுனிவர்சல் டெஸ்டிங் மெஷின் என்ற ஒரு இயந்திரம் உள்ளது. அதில் ஒரு மாதிரிக் கம்பியை வைத்து அதன் தாங்கு திறனைச் சோதிக்க முடியும்.

Leave a Reply