முழு அரசு மரியாதையுடன் பெரியபாண்டி உடல் நல்லடக்கம்
ராஜஸ்தான் கொள்ளையர்களால் சுடப்பட்டு வீரமரணம் அடைந்த சென்னை காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனின் உடல் நேற்று விமானம் மூலம் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது. நேர்மையான காவல் அதிகாரியை இழந்த அந்த ஊரின் மக்கள் சோகமே உருவாக இறுதியஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் பெரியபாண்டி உடலுக்கு அரசு சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் வளையம் வைத்து பெரியபாண்டியனின் உடலுக்கு மரியாதை செலுத்தினர். அதேபோல் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தினர்.
பெரியபாண்டியின் உடலுக்கு தலைவர்களும், பொதுமக்களும் சென்னையில் அஞ்சலி செலுத்திய பின்னர், அவரது உடல் விமானம் மூலம் மதுரை கொண்டு செல்லப்பட்டது. மதுரை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இறுதி அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து பெரியபாண்டியனின் உடல் அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டம் மூவிருந்தாளி சாலைப்புதூருக்கு கொண்டு செல்லப்பட்டது. பெரியபாண்டியனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பொதுமக்கள், அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது என்று கூறினர்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அருகில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பெரியபாண்டியனின் உடலுக்கு, 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. பெரியபாண்டியனின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. மயானத்தில் ஏராளமான மக்கள் கண்ணீர் மல்க வீரத்திருமகன் பெரியபாண்டியனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.