மூலிகை பானம் – நலம் நம் கையில்!
`நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்றும், `வரும்முன் காப்போம்’ என்றும் ஆரோக்கியம் பேசும் பழமொழிகள் அதிகம் உள்ள நாம் நாட்டில்தான், இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கையும் பெருகிக்கொண்டே இருக்கிறது.
பெரும்பாலான வீடுகளின் பட்ஜெட்டில் கணிசமான தொகை மருத்துவச் செலவுகளுக்கே போய்விடுகிறது. நோய் வந்த பிறகு சிகிச்சை பெறுவதைவிட, நம் ஊரிலேயே விளையக்கூடிய, எளிதாகக் கிடைக்கும் சில அற்புத மூலிகை பானங்களை அன்றாடம் எடுத்துக்கொண்டாலே, நோயற்ற வாழ்வு நம் வசமாகும்.
கான்கிரீட் காடாகிவிட்ட நகரமயமாக்கல் வாழ்வில், அழகுச்செடி வளர்ப்பது ஃபேஷனாகிவிட்டது. இந்த அழகுச்செடிகளுடன் சில மூலிகைச் செடிகளையும் வீட்டிலேயே வளர்ப்பதன் மூலம், அழகுடன் ஆரோக்கியமும் கிடைக்கும்.
வீட்டைச் சுற்றி உள்ள நிலத்திலும் பால்கனியிலும் மூலிகைகளை வளர்க்கலாம். நமது வீட்டையே மூலிகை இல்லமாக்கலாம்.
இந்தச் செடிகளின் விலையும் குறைவுதான். சுமார், 100 ரூபாய்க்கும் கீழேயே மருத்துவக்குணம் நிறைந்த, எண்ணற்ற மூலிகைச் செடிகள் கிடைக்கின்றன. மாற்றத்துக்கான எளிமையான வழி மூலிகைகள்தான். இனி, அஞ்சறைப்பெட்டியில் மூலிகைகளையும் சேமித்துவைப்போம்.
நலம் தரும் மூலிகை பானங்களை எப்படித் தயாரிப்பது, அதன் பலன்கள் என்னென்ன என விளக்குகிறார் சித்த மருத்துவர் அமுதா தாமோதரன்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி?
நம் உடலில் தினமும் ஏராளமான கிருமித் தாக்குதல், புற்றுநோய் செல் தாக்குதல் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இவற்றை எல்லாம் தடுத்து, உடலைக் காக்கும் மிகப்பெரிய பணியைச் செய்வது நோய் எதிர்ப்பு மண்டலம்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவதுதான், நோய்கள் ஏற்படுவதற்கான முக்கியக் காரணம். நோய் எதிர்ப்பு சக்தியை மாத்திரை, மருந்துகளால் பெற முடியாது. சத்து உள்ள உணவுகளைச் சாப்பிடுவது, போதுமான அளவு தூங்குவது, சரியான வாழ்க்கைமுறையைப் பின்பற்றுவது, உடல் மற்றும் மூச்சுப் பயிற்சி செய்வது போன்றவற்றால் பெறலாம். இவை, இதயம், நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகளை உறுதிப்படுத்தி, உடலை பலப்படுத்தும். அதேபோல, அதிகாலை வெயில் நம் உடலில் வைட்டமின் டி சத்து உற்பத்தியாக உதவும்.
கோல்டன் டிரிங்க்
தேவையானவை: மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், பனை சர்க்கரை (Palm sugar) – சுவைக்கு ஏற்ப, பால் – 1 டம்ளர், திரிகடுகப் பொடி – 10 மி.கி (சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றும் சம அளவில் கலந்ததுதான் திரிகடுகப் பொடி.)
செய்முறை: பாலை காய்ச்சி, மஞ்சள் தூள், பனை சர்க்கரை, திரிகடுகப் பொடியைக் கலந்து, தினமும் அருந்தலாம்.
பலன்கள்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
சளி, காய்ச்சல் இருப்பவர்கள் குடித்துவர, காய்ச்சல் குணமாகும். சளித் தொல்லையில் இருந்தும் விடுபடலாம்.
சுக்கு, கெட்ட கொழுப்பை கரைக்கக்கூடியது. ரத்தம் கட்டியாகாமல் பார்த்துக்கொள்ளும்.
விஷத்தை முறிக்கும் சக்தி மிளகுக்கு உண்டு. உடலில் உள்ள தொற்றுகளை நீக்கும்.
திப்பிலி, நுரையீரலில் உள்ள சளியைப் போக்கும். இளைப்பு பிரச்னை (Wheezing) சரியாகும். வயிற்றில், பசிக்காக சுரக்கும் என்சைம்களை சீராக சுரக்கவைக்கும்.
கல்லீரல் பாதிப்பைச் சரியாக்கும்.
சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இந்தப் பாலை கொடுத்துவர, பசியைத் தூண்டி, உணவைச் சாப்பிடத் தூண்டும்.