மேக்ஸ் லைப் இன்ஷூரன்ஸை வாங்க ஹெச்டிஎப்சி திட்டம்
மேக்ஸ் பைனான்ஸியல் சர்வீசஸ் மற்றும் அதன் துணை நிறுவனமான மேக்ஸ் லைப் இன்ஷூரன்ஸ் ஆகிய இரு நிறுவனங்களையும் வாங்க ஹெச்டிஎப்சி லைப் திட்டமிட்டிருக்கிறது. இதற்கான பேச்சு வார்த்தை தொடங்கப் பட்டிருப்பதாக இரு நிறுவனங் களும் தெரிவித்திருக்கின்றன. இந்த நிறுவனங்களின் இயக்குநர் குழு நேற்று கூடி இதற்கான முடிவை எடுத்தன.
முதலில் மேக்ஸ் லைப் இன்ஷூரன்ஸ் நிறுவனம் மேக்ஸ் பைனான்ஸியல் சர்வீசஸ் நிறுவனத்துடன் இணைய வேண்டும். அதன் பிறகு மேக்ஸ் பைனான்ஸியல் சர்வீசஸ் நிறுவனத்தை ஹெச்டிஎப்சி லைப் வாங்கும் என்று ஹெச்டிஎப்சி நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
இந்த இரு நிறுவனங்களும் இணையும் பட்சத்தில் ரூ.26,000 கோடி பிரீமியம் வசூல் செய்யும் நிறுவனமாக உயரும். இரு நிறுவனங்களும் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ. 1 லட்சம் கோடியை தாண்டும். ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் தற்போது ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைப் இன்ஷூரன்ஸ் நிறுவனம் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் சொத்துகளைக் கையாளுகிறது.
இந்த இணைப்பு நடக்கும் பட்சத்தில் இந்தியாவின் மிகப்பெரிய ஆயூள் காப்பீட்டு நிறுவனமாக புதிய நிறுவனம் இருக்கும். ஹெச்டிஎப்சி லைப் நிறுவனத்தில் ஹெச்டிஎப்சி 61.63 சதவீத பங்குகளை வைத்துள்ளது. ஸ்டாண்டர்ட் லைப் பிஎல்சி 35 சதவீத பங்குகளை வைத்துள்ளது.
மேக்ஸ் லைப் நிறுவனத்தில் மேக்ஸ் பைனான்ஸியல் சர்வீசஸ் 68 சதவீத பங்குகளையும், ஜப்பானை சேர்ந்த மிட்சூ சுமிடோமோ 26 சதவீத பங்குகளையும் வைத்துள்ளது.
ஆனால் இந்த இணைப்பு எப்போது நடைபெறும், கால இலக்கு, எவ்வளவு தொகைக்கு வாங்கப்படும் என எந்த தொகையும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் புதிய நிறுவனத்தில் ஹெச்டிஎப்சி குழுமத்துக்கு 65 சதவீதமும், மேக்ஸ் குழுமத்துக்கு 35 சதவீத பங்குகளும் இருக்கும் என்று தெரிகிறது.
மேலும் ஹெச்டிஎப்சி லைப் ஏற்கெனவே பொதுப்பங்கு வெளியீடு (ஐபிஓ) குறித்து அறிவித்திருப்பதால், இணைப்புக்கு பிறகு நேரடியாக ஐபிஓ வெளியிடப்படும் என்றும் தெரிகிறது.
இதன் காரணமாக இரு பங்குகளும் நேற்று உயர்ந்து முடிவடைந்தன. மேக்ஸ் பைனான்ஸியல் சர்வீசஸ் பங்கு வர்த்தகத்தின் தொடக்கத்தில் 20 சதவீதம் வரை உயர்ந்தது. வர்த்தகத்தின் முடிவில் 10.52 சதவீதம் உயர்ந்து 473 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது. அதேபோல ஹெச்டிஎப்சி பங்கு 2.19 சதவீதம் உயர்ந்து 1,227 ரூபாயில் முடிவடைந்தது.
தற்போது இந்திய காப்பீட்டு துறையில் 49 சதவீதம் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக் கப்படுகிறது.