மேட்டூர் அணை நீர்மட்டம் 119.40 அடியாக உயர்வு

இதற்கிடையே காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

ஒகேனக்கலில் நேற்று முன்தினம் 13 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 17 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் அமர்ந்து உற்சாகமாக படகு சவாரி சென்று அருவியின் அழகை பார்த்து ரசித்து வருகிறார்கள். இதையும் படியுங்கள்: 30-ந்தேதி தேவர் ஜெயந்தி: பிரதமர் மோடி பசும்பொன் வருகிறார் ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை 11 ஆயிரத்து 38 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை மீண்டும் அதிகரித்து 20 ஆயிரத்து 626 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் டெல்டா பாசனத்திற்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 900 கன அடி தண்ணீரும் என மொத்தம் 10 ஆயிரத்து 900 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. இதற்கிடையே இன்று காலை முதல் காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி காவிரியில் 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கால்வாயில் 900 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 750 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர தொடங்கி உள்ளது. நேற்று 118.71 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 119.40 அடியாக உள்ளது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் அதிகரித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்ட வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.