மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் ஏன்? தமிழக அரசு விளக்கம்
வரும் உள்ளாட்சி தேர்தலில் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசரச் சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இந்த அவசரச் சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மூலம் மாநகராட்சி மேயர்கள், நகராட்சி தலைவர்கள் மற்றும் பேரூராட்சி தலைவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இதுகுறித்து தமிழக அரசு விளக்கமளித்தபோது, ‘மேயர் ஒரு கட்சியை சேர்ந்தவராகவும் கவுன்சிலர்கள் இன்னொரு கட்சியை சேர்ந்தவர்களாகவும் இருப்பதால் மாநகர, நகர மன்றக் கூட்டங்களை கூட்டுவதே சிக்கலாகி விடுவதாகவும், மறைமுக தேர்தலால் நிலையான அமைப்பு உருவாகும் என்றும், அதுமட்டுமின்றி அனைத்து உறுப்பினர்களுக்கும் கூடுதல் பொறுப்பு கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது
மேலும் மறைமுக தேர்தலால் உள்ளாட்சி அமைப்புகள் சுமூகமாக செயல்படவும், அதிகமான கவுன்சிலர்களை கொண்ட சென்னை, மதுரை போன்ற இடங்களில் சிறப்பாக பணியாற்ற வழிவகை செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது
இதுகுறித்து அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘சட்டப்படியே அவசர சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், எம்.எல்.ஏக்கள் தான் முதல்வரை தேர்ந்தெடுப்பது போல், எம்.பி.க்கள் பிரதமரை தேர்ந்தெடுப்பது போல் இனி கவுன்சிலர்கள் மேயரை தேர்ந்தெடுப்பார்கள் என்றும் தெரிவித்தார்.