மொத்த பெண்களையும் சரத்யாதவ் அவமானப்படுத்திவிட்டார்: முதல்வர் குற்றச்சாட்டு
ராஜஸ்தான் மாநில தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த சரத் யாதவ், ‘ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவுக்கு இப்போது உடல் எடை கூடிவிட்டது. இதற்கு முன்பு ஒல்லியாக இருந்தார். இப்போது சோர்வாகக் காணப்படுகிறார். அதனால் அவருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். அவர் எங்கள் மத்திய பிரதேசத்து மகள்’ என்று கூறியிருந்தார்.
சரத் யாதவ் இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்த வசுந்தரா ராஜே, ‘ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் முன்னாள் தலைவர் சரத் யாதவ், என் உடல் பற்றி பேசியிருக்கிறார். இதன் மூலம் என்னை அவமானப்படுத்தி இருக்கிறார்.
மொத்த பெண்களையுமே அவர் அவமானப்படுத்தி இருப்பதாக நினைக்கிறேன். எந்த தலைவருக்கு எதிராகவும் நாங்கள் தனிப்பட்ட தாக்குதலில் ஈடுபட்டதில்லை. அது நாகரிமானதும் அல்ல. வருங்காலத்தில் யாரும் இப்படி பேசாமல் இருக்க வேண்டியது அவசியம். அதற்காக தேர்தல் கமிஷன் அவர் மீது நடவடிக்கை எடுத்து முன்னுதாரணத்தை ஏற்படுத்த வேண்டும்’ என்று கூறினார்