மோடியின் பிரதமர் கனவு மீண்டும் பலிக்காது: சித்தராமையா
கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சித்தராமையா நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது மீண்டும் பிரதமர் ஆவோம் என்ற மோடியின் கனவு பலிக்காது என்று கூறினார். இந்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது:-
முற்பட்ட வகுப்பினரில் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை அளிக்க வகை செய்யும் சட்ட திருத்தத்தை மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு கொண்டுவந்துள்ளது. இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை.
ஆனால் இந்த திட்டத்தை முன்பு காங்கிரஸ் கொண்டுவர ஆலோசித்தபோது, பா.ஜனதாவினர் கடுமையாக எதிர்த்தனர். ஆனால் தற்போது அவர்கள் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இந்த புதிய சட்ட திருத்தத்தை கொண்டுவந்துள்ளனர். இதன்மூலம் அவர்கள் தங்களுடைய வாக்கு வங்கியை பெருக்கிக் கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை கருத்தில் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி கடந்த 4 ஆண்டுகளில் கொண்டு வராத திட்டங்களை தற்போது கொண்டு வந்திருக்கிறார். இதன்மூலம் அவர் தேர்தலில் வெற்றிபெற்று விடலாம் என்று நினைக்கிறார். அதாவது அவர் தாழ்த்தப்பட்ட மக்கள் அல்லாத, ஏழை மக்களின் வாக்குகளை கவருவதற்காக இப்படியொரு திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்.
அவர் என்னதான் திட்டத்தை கொண்டு வந்தாலும், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியைத்தான் கொண்டுவர வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். அதனால் மீண்டும் பிரமராகி விடலாம் என்று நினைக்கும் நரேந்திர மோடியின் கனவு பலிக்காது.
முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசு அமல்படுத்தினால் அதன்பிறகு மாநில அரசும் அந்த திட்டத்தை அமல்படுத்தும். கடந்த 2 நாட்களாக நடந்த நாடு தழுவிய போராட்டத்திற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த முழுஅடைப்பு போராட்டத்தை காங்கிரஸ் நடத்தவில்லை. அகில இந்திய அளவில் பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்தி உள்ளன.
இந்த போராட்டத்தில் பா.ஜனதாவைத் தவிர அனைத்து கட்சிகளும், தொழிற்சங்கங்களும் கலந்து கொண்டன. நான் மைசூருவுக்கு ஏன் திடீரென வந்தேன் என்று நீங்கள்(நிருபர்கள்) கேட்கிறீர்கள். எனது சொந்த ஊரே மைசூருதான். நான் இங்கு வரக்கூடாதா?.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.