மோடி ஆட்சியில் மதக்கலவரம் நடந்தது உண்டா? மு.க.ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி
பாராளுமன்ற தேர்தல் நெருங்க நெருங்க பாஜக தலைவர்களும் திமுக தலைவர்களும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக திமுக தலைவர் ஸ்டாலின், பிரதமர் மோடி குறித்து காரசாரமாக விமர்சனம் செய்ய அதற்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் பதிலடி கொடுத்து வருகின்றார்.
அந்த வகையில் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை செளந்திரராஜன் கூறியதாவது:
பிரதமர் மோடியின் மதுரை வருகை தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும். தமிழகத்தில் இன்று பா.ஜனதா எதிர்ப்பு அரசியல் மட்டுமே நடந்து வருகிறது. மத்திய-மாநில அரசுகள் கொண்டுவரும் மக்கள் நல திட்டங்களை கருத்தில் கொள்ளாமல் எதிர்ப்பு ஒன்றே பிரதானம் என கருதி எதிர்க்கட்சிகள் அரசியல் நடத்துகிறார்கள். மு.க.ஸ்டாலின் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறுகிறார்.
மோடி ஆட்சியில் எங்கேயாவது மதக்கலவரம் நடந்தது உண்டா? இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பு உணர்வோடு வாழ்ந்து வருகிறார்கள். மதுரையில் எய்ம்ஸ் அமைய வேண்டும் என கடந்த 70 ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் செயல்வடிவம் கொடுத்தார். தற்போது பிரதமர் மோடி நிறைவேற்றி உள்ளார்.
காங்கிரஸ், தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது எய்ம்ஸ் பற்றி பேசியது உண்டா? தமிழகத்தில் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டை மாயமான் என மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மு.க.ஸ்டாலின் எப்போதும் ஏன் எதிர்மறை சிந்தனையுடன் பேசி வருகிறார். இதனை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும். நேர்மறை பார்வை அவருக்கு தேவை.