யூட்யூபை பின்தள்ளுமா ஃபேஸ்புக்?
ஸ்டேட்டஸ், ஷேரிங் என்பதையெல்லாம் தாண்டி எங்கேயோ சென்றுகொண்டிருக்கிறது ஃபேஸ்புக். விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆக்மெண்டட் ரியாலிட்டி, ஆன்லைன் ஸ்ட்ரீமிங் என எதிர்கால டெக்னாலஜிகள்தான் அந்நிறுவனத்தின் தற்போதய குறி. அந்த வரிசையில் தற்போது ஃபேஸ்புக்கின் மொத்த கவனமும் வீடியோக்களின் மீதுதான். 2G நெட்வொர்க் காலத்தில் ஸ்டேட்டஸ் & லைக்ஸ் என்றால், 4G நெட்வொர்க் உலகில் வீடியோதான் மார்க்கெட் கிங். இதைக் கருத்தில் கொண்டுதான் கடந்த ஆண்டு முதல் வீடியோ ஃபர்ஸ்ட் என்ற கொள்கையை பின்பற்றிவருகிறது. ஃபேஸ்புக் லைவ் ஆப்ஷனை அறிமுகம் செய்தது, அமெரிக்காவில் மட்டும் ஃபேஸ்புக்கில் வீடியோவிற்கென தனி டேப்-ஐ உருவாக்கியது, ஃபேஸ்புக் பக்கங்களில் வீடியோக்களை மட்டும் அதிகம் பேரிடம் கொண்டு சேர்ப்பது போன்றவையெல்லாம் இதைத் தொடர்ந்து நடந்தவையே. வீடியோக்களில் குவிந்த விதவிதமான ரியாக்ஷன்களே இவற்றின் வெற்றிக்கு சாட்சி. தற்போது அதில் அடுத்த அடியை எடுத்து வைத்துள்ளது ஃபேஸ்புக்.
சமூக வலைதளம் என்றால் ஃபேஸ்புக்தான் மாஸ். ஆனால், வீடியோ என எடுத்துக்கொண்டால் யூடியூப்தான் சூப்பர்ஸ்டார். அந்த இடத்தைக் குறிவைத்துதான் தற்போது ‘Watch’ என்னும் பிளாட்ஃபார்மை அறிமுகம் செய்துள்ளது. ஏற்கெனவே ட்விட்டர், அமேசான், ஸ்னாப்சாட் போன்ற நிறுவனங்கள் எல்லாம் செய்தி நிறுவனங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள், விளையாட்டுப் போட்டிகளின் ஒளிபரப்புகள் என வீடியோக்களின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகின்றன. தற்போது ஃபேஸ்புக்கும் அந்த வரிசையில் இணைந்துள்ளது. அதாவது அமேசான், ஹாட்ஸ்டார் போலவே பிரத்யேக நிகழ்ச்சிகளை ஃபேஸ்புக் Watch-ல் மட்டும் ஒளிபரப்பவிருக்கிறது. மேலும், இந்த வாட்ச் வசதியை ஒரு குட்டி தியேட்டராக மாற்றும் முயற்சியிலும் இறங்கியுள்ளது ஃபேஸ்புக்.
எப்படி இயங்கும் இந்த ஃபேஸ்புக் வாட்ச்?
ஃபேஸ்புக் ஆப் மற்றும் ஃபேஸ்புக் டெஸ்க்டாப் வெர்ஷன் இரண்டிலும் இதனைப் பார்க்க முடியும். அவ்வப்போது நடக்கும் லைவ் நிகழ்ச்சிகள், ஸ்பெஷல் எபிசோட்கள் என எல்லா விதமான கன்டென்ட்களுக்கும் ஃபேஸ்புக் கியாரண்டி தருகிறது. எப்படி ஹாட்ஸ்டார், அமேசான் ப்ரைம் போன்றவற்றுக்கு தனி ஆப் இன்ஸ்டால் செய்து நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கிறோமோ, அதேபோல ஃபேஸ்புக் ஆப்பிலேயே இந்த நிகழ்ச்சிகளைக் காண முடியும். பார்க்க வேண்டிய நிகழ்ச்சிகளை ஃபேஸ்புக்கின் Save ஆப்ஷன் போல குறித்துவைத்துக்கொண்டு பின்னர் பார்த்துக்கொள்ளும் வசதியும் இருக்கும். ஃபேஸ்புக்கின் எமோஜிக்கள்போல, உங்களின் மனநிலையைப் பொறுத்தும் சில நிகழ்ச்சிகளை ஃபேஸ்புக் பரிந்துரைக்கும். வழக்கமான லைவ் வீடியோக்கள் போலவே ரியாக்ஷன், கமெண்ட்ஸ் என அத்தனையும் அப்படியே இருக்கும். சுருக்கமாகச் சொன்னால் ஃபேஸ்புக்கின் உள்ளேயே செயல்படும் ஒரு குட்டி சானல்தான் இந்த வாட்ச்.
யூட்யூபை பின்தள்ளுமா ஃபேஸ்புக்?
உலகின் மிகப்பெரிய வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் யூடியூப். எனவே, வீடியோக்களின் எண்ணிக்கை, தரம் போன்றவற்றில் அதனுடன் நேரடியாக ஃபேஸ்புக்கால் மோத முடியாது. ஆனால், வணிக ரீதியாக நிறைய சவால்களை அளிக்கலாம். இதற்காக மற்ற நிறுவனங்கள் போலவே ஃபேஸ்புக்கும் நிகழ்ச்சிகளைத் தயாரிக்க ஸ்பான்சர் செய்கிறது. மேலும், புதிய படைப்பாளிகள், கலைஞர்கள் ஆகியோரை நிகழ்ச்சிகள் தயாரிக்கவும் ஊக்குவிக்கிறது. எப்படி யூடியூபில் சானல் நடத்துகிறார்களோ அதுபோலவே ஃபேஸ்புக்கிலும் வீடியோ சீரிஸ்களை பலரும் வெளியிட முன்வரலாம். இந்த வாய்ப்புகளை அப்படியே ஃபேஸ்புக் விளம்பரம் மூலமாக, பணமாக மாற்றும். ஃபேஸ்புக்கில் இருக்கும் கோடிக்கணக்கான பயனர்கள்தான் அந்நிறுவனத்தின் பெரும்பலம். இத்துடன் வீடியோக்களை யார் பார்க்கிறார்கள், எத்தனை மணிநேரம் பார்க்கிறார்கள், எது மாதிரியான வீடியோக்களை பார்க்கிறார்கள் எனத் துல்லியமாக கணித்து வைத்திருக்கும் ஃபேஸ்புக்கின் டேட்டாவும் அதற்கு கைகொடுக்கும். எனவே, எந்த வீடியோவை யாரிடம் கொண்டு சென்று காட்டினால், அதன் வீச்சு அதிகமாகும் என்பது வரையிலும் ஃபேஸ்புக்கால் சிந்திக்க முடியும். இந்தக் கூர்மை அந்நிறுவனத்தின் மற்றொரு பலம்.
எப்படி இந்த வீடியோக்களை பார்ப்பது?
இன்னும் அமெரிக்காவிலேயே இந்த அப்டேட் முழுமையாக வரவில்லை. தற்போது சில இடங்களில் மட்டுமே இந்த வாட்ச் வசதியை ஃபேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் அமெரிக்கா முழுவதும் இந்த வசதி கிடைக்கும். பின்பு மெல்ல மெல்ல அனைத்து இடங்களுக்கும் இந்த சேவை விரிவுபடுத்தப்படும். உலகெங்கும் இந்த சேவை செல்லும்போது யூடியூப் போலவே ஃபேஸ்புக் வாட்ச்சிலும் நிறைய நிகழ்ச்சிகள் உருவெடுக்கலாம்.