யூ-டியூப் கோ, இலவச வைஃபை.. கூகுளின் அடுத்த இலக்கு… இந்தியா! #GoogleForIndia
கூகுள் நிறுவனம் நேற்றுதான் தனது 18-வது பிறந்தநாளைக் கொண்டாடியது. அந்த சந்தோஷத்துடன் இந்தியாவில் தனது எல்லைகளை விரிவுபடுத்த புதுப்புது அறிவிப்புகளையும் நேற்று வெளியிட்டுள்ளது கூகுள் நிறுவனம். 2G நெட்வொர்க் கனெக்ஷன், இணைய வசதி இல்லாத ஊர்கள் போன்ற இந்தியாவின் இணைய சிக்கல்களை குறிவைத்து இந்தியாவிற்கென பிரத்யேக அப்டேட்ஸ்களை அறிவித்துள்ளது கூகுள். நேற்று டெல்லியில் நடைபெற்ற Google for India நிகழ்ச்சியில்தான் இந்த அறிவிப்புகள் வெளியானது. கூகுளின் டார்கெட் என்ன?
கூகுள் இந்த நிகழ்வில் YouTube Go எனப்படும் YouTube-ன் புதிய ஆண்ட்ராய்ட் ஆப், Google Station எனப்படும் இலவச Wi-Fi சேவை, 2g நெட்வொர்க்கில் சிறப்பாக இயங்கும் விதமாக Google Play Store, ஆஃப்லைன் வசதி கொண்ட Google Chrome,இந்தியில் வரவிருக்கும் Alloவின் கூகுள் அஸிஸ்டன்ட் போன்றவைதான் கூகுளின் நேற்றைய அறிவிப்புகள். இதில் என்ன விசேஷம்?
யூ-டியூப் கோ:
நேற்றைய அறிவிப்புகளில் அதிகம் லைக்ஸ் அள்ளியது, YouTube Go பற்றிய அறிவிப்பு தான். “ஒரு நொடிக்கு மூன்று இந்தியர்கள் புதிதாக, ஆன்லைன் வருகிறார்கள். ஒருமணி நேரத்திற்கு 10,000 இந்தியர்கள். அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் சேவை அளிப்பது எங்கள் கடமை என்று கருதுகிறோம், வருங்காலத்தில் இந்த உலகம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும்போகும் விதத்தை அறிந்தே, வளரும் தலைமுறைக்காக சேவைகளை உருவாக்குகின்றோம். இணையம் பயன்படுத்துவதில் இந்தியர்களுக்கு நிறைய தடைகள் இருக்கின்றன. அவற்றை மனதில் வைத்தே இந்த புதிய வசதிகளை உருவாக்கியுள்ளோம்.”என்றார் கூகுளின் நிர்வாகி சீசர் செங்குப்தா.
YouTube Go-வில் மிக மெதுவாக உள்ள நெட்வொர்க்கிலும் தடையின்றி வீடியோக்களை பார்க்கலாம். அதுதான் இதன் முதல் நோக்கம். Wi-Fi direct ஐ பயன்படுத்தி, இணையம் இல்லாமலே வீடியோக்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இன்னும் சில மாதங்களில் இந்தியாவில் இது அறிமுகமாகும் என கூகுள் தெரிவித்துள்ளது. இதன் இன்னொரு முக்கியமான சிறப்பம்சம் நீங்கள் பார்க்க விரும்பும் வீடியோவை க்ளிக் செய்தவுடன் மிகக் குறைந்த அளவிலான bandwidth-ல் அந்த வீடியோவின் preview-ஐ காணலாம், இது நம் டேட்டா பேலன்ஸை வெகுவாக மிச்சப்படுத்தும்.
கூகுள் ஸ்டேஷன்:
கூகுளின் மற்றொரு புது வரவான Google Station வருங்காலத்தில் இணையத்திற்கான பிம்பத்தை மாற்றியமைக்கப் போகின்றது.ஏற்கனவே 32 நகரங்களில் 50 ரயில் நிலையங்களில் தன் Wi-Fi சேவையை அளித்துவரும் கூகுள் தன் Google Station திட்டத்தின் மூலம் ஷாப்பிங் மால்கள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், காப்பி ஷாப்கள் போன்ற இடங்களிலும் தன் Wi-Fi சேவையை அளிக்கவுள்ளது.2020-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் இணையப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 650 மில்லியனை எட்டும் என்று கணிக்கப்படுகிறது,இதனை அறிந்தே கூகுள் இந்தியாவில் தன் இருப்பை இன்னும் வலுப்படுத்திக் கொள்ள விரும்புகிறது.தற்போது கூகுள் வைஃபை வசதியை 15,000 பேர் தினமும் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இதனை மேலும் அதிகரிக்க உள்ளது கூகுள்.
அலோ இந்தி அசிஸ்டன்ட்:
கூகுளின் புதிய செயலியான அலோவில் இருக்கும் கூகுள் அசிஸ்டன்ட் வசதி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே இயங்குகிறது. இந்த சேவையை இந்தி மொழியிலும் வழங்க உள்ளது கூகுள். விரைவில் மேலும் பல இந்திய மொழிகளை இதில் இணைக்கும் என நம்பலாம்.
கூகுள் ப்ளே மற்றும் குரோம் பிரவுசர்:
கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் குரோம் பிரவுசரை பெரும்பாலும் 2G கனெக்ஷனில் வேகமாக பயன்படுத்த முடியாது. குரோம் பிரவுசரில் டேட்டா சேவர் போன்ற ஆப்ஷன்கள் தற்போது, இருந்தாலும் இன்னும் ஸ்லோ இன்டர்நெட் இருக்கும் இடங்களில் சிறப்பாக செயல்படுவதில்லை. இதற்காக குறைவான இணைய வேகத்திலும் இயங்க கூகுள் ஏற்பாடு செய்யவுள்ளது. கூகுள் லைட் வெப் போன்ற வசதிகள், குரோம் பிரவுசரில் ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.
“இணையம் இல்லாமல், பயன்படுத்தும் கூகுள் மேப்ஸ் சேவையை உருவாக்க இந்தியாதான் தூண்டுதலாக இருந்தது. தற்போது அந்த சேவை அமெரிக்கா உட்பட வெளிநாடுகளில் மலைப்பகுதிகள், கிராமப்புறங்கள் போன்ற இணையம் இல்லாத இடங்களில் பயன்படுத்த சிறப்பாக இருக்கிறது. இதுபோல இந்தியா நாங்கள் சிறப்பாக செயல்பட எப்போதும் யோசனைகளை வழங்குகிறது” என்கிறது கூகுள்.
120 கோடி இந்தியர்கள். 120 கோடி வாடிக்கையாளர்கள். கூகுள் சும்மா இருக்குமா என்ன?