ரகுராம் ராஜன் முடிவு… இந்திய பொருளாதாரத்துக்கு சாதகமா? பாதகமா?
ரிசர்வ் வங்கி கவர்னராக 2 வது முறையாக தொடர விரும்பவில்லை என்று ரகுராம் ராஜன் அறிவித்துள்ளது, இந்திய பொருளாதாரத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும், இந்திய ரூபாயின் மதிப்பில் மாற்றம் ஏற்படும், விலைவாசி கடுமையாக அதிகரிக்கும், வாரா கடன்கள் அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ரகுராம் ராஜன் முடிவு குறித்து பங்குச் சந்தை நிபுணர் வ. நாகப்பனிடம் கேட்டோம். அவர் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.
“பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வருவது என்பது மத்திய ரிசர்வ் வங்கியால் மட்டுமே முடியாது. மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உற்பத்தியை பெருக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்; தொழில் மற்றும் விவசாய உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இவையெல்லாம் அதிகரித்தால் பணவீக்கம் கட்டுக்குள் வரும். மத்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்து இதற்கான சூழலை உருவாக்கி வருகிறது.
சரியான நடவடிக்கை!
மத்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் வட்டி விகிதத்தை சரியாக குறைக்கவில்லை என தொழில்துறையினர் மத்தியில் ஒரு கருத்து இருக்கிறது. ஆனால், பணவீக்கம் குறையாமல் வட்டி விகிதத்தை குறைக்க மாட்டேன் என்பதில் ரகுராம் ராஜன் உறுதியாக இருந்தார். பணவீக்கம் குறைந்ததையடுத்துதான் வட்டி விகிதத்தை குறைக்க ஆரம்பித்தார். இதுதான் சரியான நடவடிக்கையும் கூட.
இதை செய்யாமல் வட்டி விகிதத்தை குறைத்து இருந்தால் உண்மையான வருமானம் (real rate of return) மிகவும் குறைந்து இருக்கும். உதாரணத்திற்கு பணவீக்கம் 7 சதவிகிதம். டெபாசிட் வட்டி 7 சதவிகிதம் என்றால் யாரும் வங்கியில் பணத்தை டெபாசிட் செய்ய மாட்டார்கள்.
தொழில்துறையினர்கூட ரகுராம் ராஜன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினாலும் அவர் சரியான நடவடிக்கையைத்தான் எடுத்து வந்தார். 3 ஆண்டு காலத்தில் ரகுராம் ராஜன் சிறு முதலீட்டாளர்களுக்கு பலனளிக்கும் வகையில் பல நல்ல விஷயத்தை செய்துள்ளார். வட்டி விகிதத்தைப் பொறுத்தவரை பல முறை வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் இருந்தாலும் அவர் அதை கண்டுக்கொள்ளவே இல்லை. மிகவும் நிதானமாகதான் வட்டி விகிதத்தை குறைத்தார்.
2.5 சதவிகிதம் லாபமே!
2 வருடங்களுக்கு முன்பாக 10 சதவிகிதம் வரை வட்டி இருந்தது என சிறு முதலீட்டாளர்கள் வருத்தப்படலாம். ஆனால், 2 வருடங்களுக்கு முன் பணவீக்கம் 10 சதவிகிதம் இருந்தது. இப்போது 5 சதவிகிதம்தான் இருக்கிறது. 10 சதவிகிதம் பணவீக்கம்,10 சதவிகிதம் வட்டி விகிதம் இருந்தால் உங்களுக்கு லாபமே கிடையாதே. ஆனால், இப்போது 5 சதவிகிதம் பணவீக்கம், 7.5 சதவிகிதம் வட்டி விகிதம் இருப்பதால் சிறு முதலீட்டாளர்களுக்கு 2.5 சதவிகிதம் லாபமே.
சர்வதேச அளவில் ஏற்றுமதி மந்தம், சர்வதேச அளவில் பொருளாதார சரிவு போன்ற காரணங்களால் வட்டி விகிதம் குறைக்கப்படவில்லை. வட்டி விகிதத்தை குறைப்பது என்பது முதலீட்டாளர்களுக்கு லாபம்தான். அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. ஆனால் வட்டி விகிதத்தை குறைத்தால் ஒரு நிறுவனம் லாபத்திற்கு வந்திடுமென்றால் அது கிடையாது.
திறமையானவர்களே..!
இதற்கு முந்தைய ரிசர்வ் வங்கி கவர்னர்களான ஒய்.வி. ரெட்டி, சுப்பாராவ் என எல்லாரும் திறமையானவர்கள், சாமர்த்தியசாலிகள்தான். இவர்கள் அனைவரும் இங்கேயே பிறந்து, வளர்ந்து அதன்பின் ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியை வகித்தவர்கள். ஆனால், ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவி வருவதற்கு முன்பே சர்வதேச அளவில் பெரிய ஆளாக இருந்தவர். சர்வதேச பத்திரிக்கைகள் இவரை கேள்வி கேட்டபோது அதற்கு பதில் சொல்லி பழக்கப்பட்டவர். இதில் இவர் சில விஷயம் சொன்னதில் சர்ச்சையானது. மற்றபடி ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி வகித்தவர்களில் அனைவரும் திறமையானவர்களே.
ஆனால், இவர் சில வித்தியாசமான முடிவுகளை எடுத்தார். வெறும் வட்டி விகிதத்தை குறைப்பது, அதிகரிப்பது என்பதில் மட்டும் கவனத்தை செலுத்தாமல் அதையும் தாண்டி பல விஷயங்களை செய்தார். வேறு சில புதுமையான யுக்திகளையும், முயற்சிகளையும் கையில் எடுத்தார்.
நான் குறைத்தால் வட்டி விகிதம் குறைந்தது என்று சொல்கிறீர்கள்; ஆனால், நான் குறைத்தால் மட்டும் வட்டி குறையாது; வங்கிகளும் வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என்று ஒப்பனாக கூறினார்.
பாதிப்பும் ஏற்படாது..!
ரகுராம் ராஜன் நடவடிக்கைகளில் மிக முக்கியமான சாதனைகள் உள்ளன. வங்கிகளின் உண்மையான நிலைமையை தோலுரித்து காண்பித்து அவர்களை வழிக்கு கொண்டுவர எல்லா விதமான நடவடிக்கைகளையும் எடுத்தார். பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு மத்திய ரிசர்வ் வங்கி என்னென்ன செய்ய வேண்டுமோ அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுத்தார். வங்கிகளின் வாராக்கடன் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. ரகுராம் ராஜன் எடுத்துள்ள நடவடிக்கைகளால் வாராக்கடன் கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியிலிருந்து விலகுவதால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. இந்தியாவில் பல கவர்னர்கள் மாறியுள்ளனர். எந்த ஒரு கவர்னர் போனதாலும் எந்த ஒரு மாற்றமும் ஏற்பட்டதில்லை. புதிதாக வரப்போகிற கவர்னர் என்ன செய்யப்போகிறார், என்ன சொல்லப்போகிறார் என்பதை பொறுத்துத்தான் உள்ளது. ஆனால், புதிதாக வருபவர் ரகுராம் ராஜன் செய்தது எல்லாம் போதும், என நினைத்து எல்லாம் இழுத்து மூடிவிட்டால் அதன்பின் இந்தியாவுக்கு பெரும் பிரச்னைதான்” என்றார்.
பிரச்னைகள் பெருகும்!
தொடர்ந்து ரகுராம் ராஜன் கவர்னர் பதவியிலிருந்து விலகுவதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து பொருளாதார நிபுணர் டி.பி. கபாலியிடம் கேட்டோம். அவர்
“ரகுராம் ராஜன் வட்டி விகிதத்தை மிகவும் அதிகம் ஆக்கிவிட்டார் என சுப்ரமணிய சுவாமி உட்பட பலர் குற்றம் சாட்டினர். ஆனால், வட்டி விகிதம் குறிப்பிட்டு சொல்லும் அளவில் மாறவில்லை. இது குறித்து பலர் விஷயம் தெரியாமல் பேசுகிறார்கள். வட்டி விகிதம் எல்லாம் பெரிதாக அதிகரிக்கவில்லை.
இந்திய பொருளாதாரம் அடுத்த 6 முதல் 8 மாதத்தில் பல சிக்கல்களை சந்திக்க உள்ளது. இதில், விலைவாசி ஏற்றம் திரும்பவும் கடுமையாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. அப்போது இந்திய ரூபாயின் மதிப்பும் கடும் சரிவை சந்திக்க வாய்ப்பு இருக்கிறது. அதுபோன்ற சூழ்நிலையில்தான் ரகுராம் ராஜன் வட்டி விகிதத்தை குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு மிகவும் அதிகரிக்கவில்லை என்பது புரிய வரும்.
விலைவாசி எகிறும்!
அடுத்த ரிசர்வ் வங்கி கவர்னர், மிக கடுமையாக வட்டி விகிதத்தை அதிகப்படுத்தினால் மட்டுமே விலைவாசி ஏற்றத்தை குறைக்க முடியும். கடந்த காலத்தில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி வீழ்ச்சி கண்டதற்கு பல காரணங்களில் கடும் விலைவாசி ஏற்றமும் ஒன்று. ஏனெனில் மன்மோகன் சிங் ஆட்சியில் கடும் விலைவாசி ஏற்றம் பல வருடங்களாக நீடித்தது. இதுபோன்ற கடுமையான விலைவாசி ஏற்றம் அடுத்த 8 மாதத்திற்குள் வர அதிக வாய்ப்புள்ளது. வங்கிகளின் வாராக்கடன் பிரச்னை இன்னும் பெரிதாக வெடிக்க வாய்ப்புள்ளது. இந்த பிரச்னை இன்னும் மோசமடைய வாய்ப்புள்ளது.
நாட்டில் விலைவாசி ஏற்றம் அதிகமாக இருந்தால் எந்த ஒரு விஷயமும் சரியாக இருக்காது. நிறுவனங்களின் நடவடிக்கை பாதிக்கப்படும், வேலைவாய்ப்பு குறையும் உட்பட பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். இந்திய பொருளாதாரம் இதுபோன்ற மோசமான நிலைமையை நோக்கித்தான் சென்று கொண்டு இருக்கிறது. மொத்தத்தில் ரகுராம் ராஜனின் முடிவு இந்திய பொருளாதாரத்திற்கு மிகவும் பாதகமான நிலையை ஏற்படுத்தும்” என்றார்.
அடுத்த கவர்னர் யார்..?
அடுத்த ரிசர்வ் வங்கி கவர்னராக யார் வருகிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், அரவிந்த் பனகாரியா, உர்ஜித் பட்டேல் மற்றும் அருந்ததி பட்டாச்சார்யா இந்த மூன்று பேரில் ஒருவருக்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதில் குறிப்பாக அரவிந்த் பனகாரியா மற்றும் உர்ஜித் பட்டேல் இருவரும் குஜராத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களுக்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதில் குறிப்பாக உர்ஜித் பட்டேல் ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக இருக்கிறார். ஏன் புதிதாக ஒருவரை வெளியிலிருந்து கொண்டு வர வேண்டும். அங்கேயே இருப்பவரை ரிசர்வ் வங்கியின் கவர்னராக நியமிக்கலாமா என்பது குறித்தும் மத்திய அரசு வட்டாரங்களில் ஆலோசனைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், யாரை கவர்னராக நியமித்தாலும் ரகுராம் ராஜனுக்கு அடுத்து வருபவருக்கு அதிக சிக்கல்கள் காத்திருக்கின்றன என்பது நிதர்சனமான உண்மை.
இந்திய பொருளாதாரம்!
ஏனெனில் உலகமே பொருளாதார மந்த நிலையை நோக்கி நகரும்போது இந்தியாவும் இதில் தப்பாது என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் சூழ்நிலை, வாராக் கடன்களை வசூலித்தல் நடவடிக்கைகள் நிறுத்தினால் வங்கிகளின் நிலைமை படுமோசமாகும் என கூறுகின்றனர். இதனால் இந்தியா பொருளாதாரம் கடும் சரிவைச் சந்திக்கும் நிலைமை ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆகையால் புதிதாக வரப்போகிற ரிசர்வ் வங்கி கவர்னர் என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.