ரசிகர்களா? ரவுடிகளா? காவல்துறைக்கு இதுதான் வேலையா?

ரசிகர்களா? ரவுடிகளா? காவல்துறைக்கு இதுதான் வேலையா?

விஜய் நடித்த பிகில் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி பெரும் ஆதரவுட திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு விஜய் ரசிகர்களிடம் மிகப்பெரிய ஆதரவு கிடைத்து இருந்தபோதிலும் ஊடகங்கள் மத்தியில் இந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன

இந்த நிலையில் இந்த படம் நேற்று முன்தினம் இரவு வரை அதிகாலை சிறப்பு காட்சிக்கு அனுமதி தராமல் இருந்த தமிழக அரசு, அதன் பின் முதலமைச்சர் தலையிட்டு அனுமதி கொடுத்ததன் காரணமாக நேற்று அதிகாலை 4 மணிக்கு காட்சிகள் திரையிட தொடங்கினர்.

இருப்பினும் ஒரு சில இடங்களில் அதிகாலை காட்சிகள் திரையிடப்படவில்லை என தெரிகிறது. குறிப்பாக கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு திரையரங்கில் அதிகாலை காட்சி திரையிடவில்லை என்று திரையரங்க நிர்வாகம் எடுத்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்த விஜய் ரசிகர்கள் அந்த தியேட்டரை அடித்து நொறுக்கியதோடு அருகில் உள்ள கடைகள் பேனர்கள் மற்றும் காவலுக்கு நின்றிருந்த போலீஸ் வாகனங்களை அடித்து சேதப்படுத்தினர்

ஒரு திரைப்படம் அதிகாலை காட்சி திரையிடப்படவில்லை என்றால் என்ன குடியா முழுகிவிடும்? அடுத்த காட்சி பார்த்துக் கொள்ள வேண்டியது தானே! இதற்காக ரவுடிகள் போல் சாலையில் இறங்கி ரவுடித்தனம் செய்த ரசிகர்களை என்னவென்று சொல்வது?

இந்தியாவின் வருங்காலம் இளைஞர்களின் கையில் இருக்கிறது என்று நமது முன்னோர்கள் கூறியிருக்கும் நிலையில் அந்த இளைஞர்கள் இவ்வாறு பொறுப்பில்லாமல் வன்முறையில் ஈடுபடுவது எந்த வகையில் நியாயம்? அதுவும் ஒரு சரியான காரணமாக இருந்தால் கூட பரவாயில்லை ஒரு திரைப்படத்திற்காக வன்முறையில் ஈடு பொது சொத்துக்களை சேதப்படுத்துவது எப்படி நியாயப்படுத்த முடியும்?

ரசிகர்கள் என்றால் ஒரு திரைப்படத்தை ரசிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அந்த நடிகனை கடவுள் ரேஞ்சுக்கு கொண்டு செல்வது என்பது ஆபத்தில் தான் முடியும். ஒரு திரைப்படத்தை திரைப்படமாக மட்டும் பார்க்க வேண்டும். அதேபோல் அதில் நடித்த நடிகனையும் ஒரு நடிகனாக மட்டுமே பார்க்கவேண்டும். நடிகரை கடவுளுக்கு இணையாகவும், திரைப்படத்தை வாழ்க்கையில் முக்கியத்துவமாகவும் கருதும் இளைஞர்கள் நிச்சயம் மாறவேண்டும்.

அதிகாலை 4 மணி காட்சி திரையிடுவதற்கு காவல்துறையினர் பாதுகாப்புக்கு நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. காவல்துறைக்கு எத்தனையோ வேலைகள் பொறுப்புகள் இருக்கும்போது ஒரு திரையரங்கிற்கு பாதுகாப்பு கொடுப்பது தான் வேலையா? அவர்களுக்கு வேறு வேலையே இல்லையா?

ஏன் திரையரங்குகள் கோடிக்கணக்கில் சம்பாதித்து கொள்ளும் நிலையில் கூட்டத்தை கட்டுப்படுத்த தனியார் பாதுகாப்பு நிறுவனங்களை வைத்து பாதுகாப்புக்கு வைத்து கொள்ள வேண்டியதுதானே!

மேலும் அதிகாலை 3 மணிக்கும் இரண்டு மணிக்கும் தியேட்டர்கள் முன்பு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கூடியதை பார்க்கும்போது இந்த நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது என்ற கவலையும் ஏற்படுகிறது

ஒரு பொது சேவைக்கு கூப்பிட்டால் இதுமாதிரி 2 மணிக்கு வருவதற்கு எந்த இளைஞராது தயாராக இருப்பாரா? விவசாயிகள் போராட்டம், மீத்தேன் போராட்டம் உள்பட பலவித போராட்டங்கள் நடைபெற்ற போது எத்தனை இளைஞர்கள் கலந்து கொண்டார்கள்?

ஒரு திரைப்படத்தை பார்க்கும் ஆர்வத்தில் ஒரு சிறு பகுதியாவது சமூக சேவைகளை பயன்படுத்த இளைஞர்கள் தயாராக இருக்கிறார்களா? ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் மட்டும் ஆவேசமாக பேசி விட்டு வீட்டில் உட்கார்ந்து கொள்ளும் இளைஞர்கள் எப்போது சாலைக்கு வருவார்கள்? எப்போது ஆக்கபூர்வமாகச் இருப்பார்கள் என்பதே அனைவரின் கவலையாக உள்ளது

மொத்தத்தில் ரசிகர்கள் ரசிகர்கள் மட்டும் இருந்தால் போதும் ரவுடிகளாக மாறினால் அவர்களது எதிர்காலம் மட்டுமின்றி நாட்டின் எதிர்காலம் பாழடையும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்

Leave a Reply