ரஜினிக்கு அறிவுரை கூறிய ஜெ.தீபா கணவர்

ரஜினிக்கு அறிவுரை கூறிய ஜெ.தீபா கணவர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசியபோது, ‘அதிமுகவினர் நூற்றாண்டு விழா கொண்டாடும்போது எம்ஜிஆர் புகைப்படம் அருகே கருணாநிதியின் புகைப்படமும் வைக்க வேண்டும் என்றும் அதிமுக உருவாக கருணாநிதியும் ஒரு காரணம் என்றும் கூறியிருந்தார். இந்த கருத்துக்கு ஏற்கனவே அதிமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தற்போது ஜெ.தீபாவின் கணவர் மாதவன் ரஜினிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

“புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரும் கலைஞர் கருணாநிதியும் நல்ல நண்பர்கள். இதில் எந்த மாற்று கருத்தும் யாருக்கும் இருக்க முடியாது.

ஆனால் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் திமுகவிலிருந்து பிரிந்து அதிமுகவை துவங்கியதே அக்கட்சியில் அவர் சந்தித்த துரோகம் தான். அவர் இருந்து வளர்த்த கட்சியில் கணக்கு கேட்டதால் வெளியேற்றப்பட்டார். இது வரலாறு.

அதிமுக துவங்க காரணமாக இருந்தவர் திரு கருணாநிதி தான். உண்மை ஆனால் எதனாலெனில் துரோகத்தால். நிஜம் இவ்வாறிருக்க, அதிமுக விழாக்களில் எம்ஜிஆர் திருஉருவப்படத்துடன் திரு கருணாநிதியின் படத்தையும் வைக்கவேண்டும் என எப்படி சொல்வீர்கள்.

புரட்சி தலைவர் விட்டு சென்ற பணிகளை புரட்சி தலைவி அம்மா அவர்கள் செவ்வனே செய்து அவரும் இறைவனடி சேர்ந்து விட்டார்கள். அம்மா உயிருடன் இருந்திருந்தால் இவ்வாறு கூறி இருப்பீர்களா???

தயவு செய்து தனி கட்சி ஆரம்பித்து அதில் ஜெயித்து அனைத்து மக்களின் மனங்களையும் கொள்ளைகொண்ட, உயிர் மூச்சு உள்ளவரை முதலமைச்சராக வாழ்ந்த, ஏன் இறந்தும் இன்று வரை அனைவர் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிற எங்கள் தலைவரின் ஆன்மாவை நோகடிக்காதீர்கள். புரட்சி தலைவர் ஆரம்பித்து ஜெயம் கொண்ட கட்சி வேறு, அண்ணாவால் ஆரம்பிக்கப்பட்டு பின் அதனை வழிநடத்தின திரு. கருணாநிதியின் கட்சி வேறு. அவர்கள் உயிருடன் இருந்தபோதே இணையாதவர்கள். இறந்த பிறகு அவர்களது புகைப்படங்களை நீங்கள் ஏன் இணைக்கப்பார்க்கிறீர்கள்.

அண்ணா மறைந்த பின்னர், திரு கருணாநிதியை முதலமைச்சராக்க பெரும் பாடுபட்டவர் புரட்சி தலைவர் அவர்கள். திரு கருணாநிதி அரியணை ஏறுவதற்கு, அவரது குடும்பத்தினரை சம்மதிக்க வற்புறுத்தியவர் புரட்சி தலைவர் அவர்கள்.

வேண்டுமெனில் திமுக விழாக்களில் புரட்சி தலைவரின் படத்தை இணைத்து வைக்க கோரிக்கை வையுங்கள். ஏனெனில் ஆரம்ப காலங்களில் திமுகவில் அண்ணாவுடன் இணைந்து அதிகமாக உழைத்தவர் நம் புரட்சி தலைவரே ஆகும். உண்மையான அதிமுகவினரின் மனங்களை நோகடிக்காதீர்கள்

இவ்வாறு மாதவன் தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.

Leave a Reply