ரஜினி முதல்வராக சித்தரிடம் சிறப்பு பூஜை செய்த ரசிகர்கள்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ளது இடைக்காட்டூர் கிராமம். இங்கே இடைக்காட்டூர் சித்தர் சமாதி அமைத்துள்ளது. இந்த சமாதியில் நடிகர் ரஜினிக்காந்த் அரசியலுக்கு வர வேண்டும் அவருக்கான அரசியல் தொல்லைகள் நீங்க வேண்டும் என்பதற்காக முதன் முதலாக ரஜினி ரசிகர்கள் ரஜினி படத்தை வைத்து சிறப்பு வழிபாடு பூஜைகள் செய்து இரண்டாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கி வருகிறார்கள்.
இந்தச் சிறப்பு பூஜைக்கான வழிபாடுகள் குறித்து ரஜினி மன்ற நிர்வாகிகளிடம் பேசும் போது ”நாங்கள் இந்தச் சிறப்பு வழிபாடு இடைக்காட்டூர் சித்தர் சந்நிதியில் செய்து வருவதன் நோக்கமே ரஜினியும் அவரது குடும்பத்தாரும் எந்த இடையூறும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் அரசியல் பிரவேசம் எடுத்திருப்பதில் எந்தத் தடையும் தடங்கலும் வரக் கூடாது என்பதற்காவும் இப்படியொரு பூஜை அன்னதானம் ஏற்பாடுகளைச் செய்திருக்கிறோம். கலைஞர் இருக்கும் வரை அரசியலுக்கு வர மாட்டேன் என்று சொன்னார் ரஜினி.
1996-ம் ஆண்டு ரஜினி கொடுத்த வாய்ஸ் தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். கலைஞரும் அரசியலில் ஈடுபாட முடியாத நிலைக்கு அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டுவிட்டது. அ.தி.மு.க-வில் ஜெயலலிதா மறைந்துவிட்டார். விஜயகாந்த் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததையும் அவரது வாயால் கெடுத்துக்கொண்டார். ஆக இப்படி தமிழக அரசியலில் இன்றைக்கு நடக்கும் கூத்துகளை பார்த்துக்கொண்டு வேடிக்கை பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
தமிழகமே தலைகுனிந்து நிற்கிறது. பணத்துக்காக எம்.எல்.ஏ-க்கள் கூவத்தூருக்கும் குடகுமலைக்கும் தாவிக்கொண்டிருக்கிறார்கள். வாக்களித்த மக்களை தற்போதுள்ள எம்.எல்.ஏ-க்கள் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். பி.ஜே.பி ரஜினியை இழுக்க முயற்சி செய்தார்கள். ஆனால், ரஜினி தனிக்கட்சிதான் என்று உறுதியாக சொல்லிவிட்டார். திருச்சியில் தமிழருவி மணியன் நடத்திய மாநாட்டில் கலந்து கொள்ள தலைமை உத்தரவிட்டது. அதன்படி கலந்துகொண்டோம். இதுவும் எங்களுக்கான முன்னோட்டம்தான். ஆக தமிழகம் அடுத்த தலைவராக ரஜினியைத்தான் விரும்புகிறது. தமிழகத்தின் அடுத்த முதல்வர் ரஜினிதான்’ என்கிறார்கள்.