ரஜினி வியந்த ஒரே் தலைவர் கருணாநிதி: பா.ரஞ்சித்
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட இயக்குனர் பா.ரஞ்சித் பேசியதாவது:
`சிறு வயதில் பெரியபாளையம் வழியாக கலைஞர் செல்கிறார் என்று சொல்லக் கேட்டு அவரை நான் பார்த்திருக்கிறேன். என்னுடைய அப்பா தி.மு.க.காரர். வீட்டு வாயிலை கூட உதயசூரியன் வடிவில் வடிவமைத்திருந்தார். அவர் வழியாக தான் எனக்கு கலைஞர் அறிமுகமானார். என்னுடைய தாத்தா தீவிர அதிமுககாரர். ஆனால் அவர் கலைஞரின் தீவிர ரசிகர். அவருடன் தான் கலைஞரின் பராசக்தி படத்தை பார்த்தேன். எனது பள்ளி நாட்கள் கல்லூரி நாட்கள் என பலமுறை பராசக்தி படத்தை ஒவ்வொரு காலகட்டத்திலும் பார்த்துள்ளேன். நான் திரைத்துறையில் படம் இயக்க முடிவு செய்த பின்பும் பராசக்தி படத்தை பார்த்துள்ளேன். பராசக்தி படம் எனக்கு முக்கியமான வழிகாட்டி என்றுதான் சொல்வேன்.
திராவிட முன்னேற்ற கழகம் பரவலாக மக்களிடம் செல்ல காரணம் என்ன அப்படின்னு நம்ம யோசிக்கும் போது அவங்க கலை, பண்பாடு சார்ந்த எல்லாவற்றையும் கைப்பற்றியிருக்காங்க. எடுத்தவுடனேயே ஆட்சியை பிடிக்க அவர்கள் நினைக்கவில்லை. கலையின் வாயிலாக மக்களின் பிரச்னைகளை பேசியிருக்கிறார்கள். திரைப்படங்களின் வாயிலாக தனது கொள்கைகளை பேசி ஆட்சியை பிடித்திருக்கிறார்கள். பெரியார் கடவுளே இல்லை என்று சொல்கிறார். திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கியதும் அண்ணா, ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று சொல்கிறார். ஆனால் கலைஞர் தனது ஒரே ரத்தம் படத்தில் ஒன்றே குலம், உண்மையே தெய்வம் என்று கூறுகிறார். மிகமுக்கியமான திரைப்படமாக நான் கலைஞரின் ஒரே ரத்ததை பார்க்கிறேன் . அன்றையை கால கட்டத்தில் சாதி, மத பிரிவினையை மிகத் தீவிரமாக பேசிய படம். அந்தப் படத்தின் வசனங்களை நான் கேட்கும் போது நான் எழுதும் வசனங்கள் ஒன்றுமே இல்லை.
பராசக்தி மிகப்பெரிய விளைவை தமிழ்சினிமாவில் ஏற்படுத்திய படம். அந்தப் படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை மிகமுக்கியமான அரசியல் பேசப்பட்டுள்ளது. அண்ணாவால் வளர்த்தெடுக்கப்பட்ட மிக முக்கியமான ஆயுதம் தான் கலைஞர். உண்மையிலேயே எனக்கு கலைஞர் மீது விமர்சனங்கள் இருக்கு. அதைப் பேசுவதற்கான மேடை இது அல்ல. ரஜினிகாந்த் என்னிடம் கூறும்போது, எனக்கு பிடித்த, நான் பார்த்து வியந்த தலைவர் கலைஞர்தான் என்று கூறியிருக்கிறார்.
நான் ஒரு மேடையில் பேசும்போது கூட கலைஞரின் சமத்துவபுரம் பற்றி கூறியுள்ளேன். ஊரும் சேரியும் தனித்தனியாக இருக்கையில் எப்படி நாம் தமிழகர்களாக ஒன்றிணைய முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளேன். சேரியையும், ஊரையும் உடைக்கிற ஒரு திட்டம் சமத்துவபுரம். மிக மிக்கியமான திட்டம். இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டபோது நான் காலேஜ் படிச்சிக்கிட்டு இருந்தேன். அந்தச் சமத்துவபுரங்கள் உருவாக்கப்படனும்னு ஆசைப்படுறேன்.
இன்னொரு முக்கியமான திட்டம், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பது. கோவில் கருவறை தங்களுக்கானது மட்டுமே அப்படின்னு நினைத்துக் கொண்டு இருந்தவங்க மத்தியில் எல்லோருக்கும் அங்கே உரிமை இருக்கிறது என உரக்கச் சொன்ன சட்டம் அது. இப்படி நிறைய விஷயங்களை கலைஞர் செய்திருக்கிறார். இங்கு சட்டம் இயற்றுவதில் பிரச்னை கிடையாது. அதை நடைமுறைப் படுத்துவதில்தான் பிரச்னை இருக்கிறது.சாதி முறைகளை ஒழிக்க கூடிய சக்தி கொண்ட கட்சிகளில் திமுகவும் ஒன்று என நான் நம்புகிறேன்.
மக்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற சட்டமும், சமத்துவபுரம் திட்டமும் கலைஞரின் கனவாகும், அதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னெடுக்க வேண்டும்.
இவ்வாறு இயக்குனர் ரஞ்சித் பேசினார்