ரஷ்யாவின் அழைப்பை ஏற்ற தீவிரவாதிகள், நிராகரித்த ஆப்கன் அரசு

ரஷ்யாவின் அழைப்பை ஏற்ற தீவிரவாதிகள், நிராகரித்த ஆப்கன் அரசு

ஆப்கானிஸ்தானில் கடந்த பல ஆண்டுகளாக தலிபான் தீவிரவாதிகளுக்கும் ஆப்கன் அரசுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வரும் நிலையில் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா எடுத்த முயற்சி தோல்வி அடைந்துள்ளது. ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான் பயங்கரவாதிகளுக்கு இடையேயான அமைதி பேச்சுவார்த்தை குறித்து ரஷியா விடுத்த அழைப்பை தலிபான்கள் ஏற்றுக்கொண்ட நிலையில், ஆப்கானிஸ்தான் அரசு அழைப்பை நிராகரித்துள்ளதால் ரஷ்யா அதிருப்தி அடைந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் அரசு அறிவிக்கும் போர் நிறுத்தங்களுக்கு சம்மதிக்காமலும் ரத்த வெறியுடனே தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வந்தனர். சமீபத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மீண்டும் ஒரு இடைக்கால போர்நிறுத்தத்துக்கு அதிபர் அஷ்ரப் கானி கடந்த 19-ம் தேதி அழைப்பு விடுத்தார். ஆனால் அதை தலிபான்கள் நிராகரித்தனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தலிபான் அமைப்பினருக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்த தேவையான உதவிகளை ரஷியா செய்யும் என அறிவிப்பு வெளியானது. இதற்காக அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் தலிபான் அமைப்பை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தை கூட்டத்தை மாஸ்கோவில் நடத்தவுள்ளதாக ரஷியா அறிவித்தது.

ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க விருப்பம் இல்லை என ஆப்கானிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலிபான் மற்றும் ஆப்கானிஸ்தான் அரசுக்கு இடையிலான பிரச்சனைகளை இரண்டு தரப்புமே நேரடியாக பேசி தீர்த்துக்கொள்ளும் இதில், மூன்றாவது நபரின்(நாட்டின்) தலையீடு தேவையில்லை என அந்நாடு ரஷியாவிற்கு தெரிவித்துள்ளது.

Leave a Reply