ராஜபக்சேவை டெல்லிக்கு அழைத்து வந்து பேச வைத்தது யார்? மு.க.ஸ்டாலின் கேள்வி
இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே சமீபத்தில் டெல்லிக்கு வந்திருந்தபோது விடுதலைப்புலிகளுடனான போரில் வெற்றி பெற இந்தியா பெரும் உதவி செய்ததாக கூறினார். இந்த விவகாரம் காரணமாக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
இந்த நிலையில் இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கூறியபோது, ‘ஊழலில் கொழுத்துக் கொண்டிருக்கும் அதிமுக ஆட்சியாளர்கள் தி.மு.க வுக்கு எதிராக போராட்டம் நடத்தி நகைச்சுவை செய்து கொண்டிருக்கிறார்கள்! ராஜபக்சேவை அண்மையில் டெல்லிக்கு அழைத்து வந்து பிரதமரைச் சந்திக்க வைத்ததே உங்கள் எஜமானர் கட்சி தானே. அவர்களை எதிர்க்க உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் ‘வரலாற்றில் எதிர்க்கட்சியை பார்த்து அஞ்சி நடுங்கி போராட்டம் நடத்தும் ஒரே கட்சி துரோகமும், ஊழலும் கொண்ட அதிமுக மட்டுமே! இதுவரை ஒரு குற்றத்தை எங்கள் மீது சுமத்தி உங்களால் நிரூபிக்க முடிந்ததா? இனியும், எங்கள் மீது குற்றம் சுமத்த துணிவிருந்தால் வழக்கு போடுங்கள்! என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.