ராஜீவ் கொலையாளிகளை விடுவித்தால் சர்வதேச அளவில் பிரச்சனையா?
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையாளிகளான நளினி உட்பட 7 பேரை விடுவித்தால் அது சர்வதேச அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இவர்களை விடுதலை செய்தால் எதிர்காலத்தில் இந்த முடிவு தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்றும் மத்திய அரசு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது
முன்னதாக முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் நளினி, சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள், நன்னடத்தை விதியின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், என்னை இதுபோல முன்கூட்டியே விடுதலை செய்யவில்லை. இதற்கிடையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நான் உள்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் தீர்மானம் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந்தேதி இயற்றப்பட்டது
இந்த தீர்மானத்துக்கு இதுவரை தமிழக கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். எனவே என்னை விடுதலை செய்யாமல் சிறையில் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதால், ஐகோர்ட்டில் என்னை ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். என்னை விடுதலை செய்ய வேண்டும் என்று நளினி தனது மனுவில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது