ராவணன் பாடலுக்கு நடராஜர் ஆடிய தாண்டவம்!
நடராஜப் பெருமானின் நாட்டிய அசைவில் தான் உலகமே இயங்குகிறது என்பதும், பிரபஞ்ச அசைவே ஓர் ஒழுங்கான தாளகதியில் நடைபெறும் தாண்டவம்தான் என்பதும், நம் உடலில் இயங்கும் வாயுக்களின் அசைவும்கூட நாட்டியம்போலவே இருக்கிறது என்பதும் இந்துக்களின் நம்பிக்கை. நடராஜப் பெருமான் பல வகையான தாண்டவங் களை ஆடியிருக்கிறார். ஆனந்த தாண்டவம், சந்தியா தாண்டவம், உமா தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம், உன்மத்த தாண்டவம், காளிகா தாண்டவம் என்று பல தாண்டவங்களை நடராஜப் பெருமான் ஆடியிருக்கிறார். இப்படிப் பல்வேறு காலகட்டங்களில் பல காரணங் களுக்காகச் சிவபெருமான் ஆடிய தாண்டவங்களில் ராவணனுக்காகச் சிவபெருமான் ஆடிய தாண்டவம்தான் பஞ்ச சகார சண்ட நாட்டியம் என்னும் தாண்டவமாகும்.
துள்ளலான நாட்டியமான பஞ்ச சகார சண்ட தாண்டவம் ஆடிய வரலாற்றைப் பார்க்கலாமே…
ராவணன் மிகச் சிறந்த சிவபக்தன். மிகக் கடுமையாகத் தவமியற்றி எண்ணற்ற வரங்களைப் பெற்ற மாவீரன். பெற்ற வரத்தை நல்லமுறையில் பயன்படுத்தாமல், இந்திராதி தேவர்களையும் முனிவர்களையும் கொடுமைப்படுத்தினான். தன்னை வெல்ல யாருமே இல்லை என்ற செருக்குடன் திரிந்த ராவணனைக்கண்டு அனைவரும் பயந்து நடுங்கினர்.
ஒருமுறை அவன் தனது புஷ்பக விமானத்தில் ஏறி வடதிசை நோக்கிச் சென்றுகொண்டிருந்தான். ஓர் இடத்தில் விமானம் மேலே செல்லமுடியாமல் அப்படியே நின்றுவிட்டது. காரணம் புரியாமல் திகைத்த ராவணன் விமானத்தைவிட்டுக் கீழே இறங்கினான்.
அவனுக்கு எதிரில் தோன்றிய நந்திதேவர், ‘`ராவணா, எல்லா உயிர்களுக்கும் இறைவனாகிய சிவபெருமான் உறைகின்ற கயிலை மலையின் எதிரில் நீ நின்றுகொண்டிருக்கிறாய். தான் என்னும் அகந்தை கொண்ட உன்னால் இந்த மலையைத் தாண்டிச் செல்ல இயலாது. எனவே, நீ மலையைச் சுற்றிக்கொண்டு பறந்து போ’’ என்றார்.
தானே மிகச் சிறந்த சிவபக்தன் என்ற ஆணவத்தில், ‘`குரங்கினைப்போல் தோன்றும் நீயா என்னைத் தடுத்து நிறுத்துவது? சிறந்த சிவபக்தனான என் பராக்கிரமம் உனக்குத் தெரியாது. என்னை இழித்துப் பேசிய நீ யார்?’’ என்று கேட்டான்.
‘`ராவணா, என்னைக் குரங்கு என்று நீ இகழ்ந்து பேசியதால், நீயும் உன் இலங்கை நகரமும் அழிந்து போவதற்கு ஒரு குரங்குதான் காரணமாக இருக்கும்’’ என்று சாபம் கொடுத்தார்.
இதனால் மேலும் கோபம்கொண்ட ராவணன், தான் அனுதினமும் வழிபடும் ஈசன் உறையும் மலை என்றும் பாராமல், ‘`இந்த மலையையே நான் தூக்கிக்கொண்டு செல்கிறேன் பார்’’ என்று சபதம் செய்தவனாக, அந்த மலையை அடியோடு பெயர்த்தெடுக்க தன் ஒரு கையை மலையின் அடியில் கொடுத்து தூக்கத் தொடங்கினான்.
அவ்வளவுதான். இமயமே பூகம்பம் வந்ததுபோல் ஆடியது. அன்னை உமையவளே ஆடிப்போய்விட்டாள். இதைக்கண்ட சிவ பெருமான், தன்னுடைய பரம பக்தனாக இருந்தாலும், ராவணனின் அகந்தையை அடக்கத் நினைத்தார். தன் வலக்கால் பெருவிரலால் மலையின்மீது ஓர் அழுத்து அழுத்தினார். கயிலைச் சம நிலைக்கு வந்தது. ஆனால், சிவபெருமானின் கால் கட்டை விரல் வலிமைக்குக்கூட ஈடுகொடுக்க மாட்டாத ராவணன், மலையின் அடியில் சிக்கிக் கொண்டு வலி ஏற்படுத்திய துன்பம் தாங்க முடியாமல் கதறினான். இப்படியே அவனுடைய துன்ப நிலை ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்தது. அதன் பிறகே தான் இழைத்த பெரும் பிழையை உணர்ந்துகொண்ட ராவணன், தன் பத்து தலைகளில் ஒரு தலையைக் கிள்ளிக் குடமாக்கி, ஒரு கையைத் துண்டாக்கி, அதன் நரம்பை வீணைத் தந்தியாகக்கொண்டு இனிய இசையைச் சாமகானமாகப் பொழிந்தான். சாமகான பிரியரான ஈசனை சாமகானம் இசைத்தே வசப்படுத்திவிட்டான், வீணைக்கொடியுடை வேந்தனான ராவணன். ஆம், அவனுடைய சாமகான இசையில் மயங்கிய சிவபெருமான் ராவணனை மன்னித்து விடுவித்தார். அவனுடைய இசைக்குப் பரிசாக சந்திரஹாசம் என்னும் ஒளி பொருந்திய வாளையும் அளித்தார்.
சிவபெருமானின் அருளைப்பெற்ற ராவணன், ‘`ஐயனே, என் அகந்தை அடக்கி ஆட்கொண்ட பரமனே! நான் பாட, அதற்கேற்ப தாங்கள் திருநடனம் ஆடும் காட்சியை நான் தரிசிக்க வேண்டும்’’ என்று பிரார்த்தித்தான். ஐயனும் இசைவு தெரிவித்தார். மனம்மகிழ்ந்த ராவணன், ‘மஹா பரமேஸ்வரனின் தலைவழியே சிந்தும் புனித கங்கை பூமியைப் புனிதமாக்குகிறாள். அந்த புனித பூமியில் சிவன் ஆனந்தமயமான நாட்டியம் ஆடுகிறார். அப்போது அவரது கழுத்தில் உள்ள ராஜநாகம் மாலை போல சுழல்கிறது. சிவனின் கையில் இருக்கும் உடுக்கை எழுப்பும் `டமட் டமட் டமட்’ என்ற நாதத்தின் ஓசைக்கேற்ப ஈசனின் சகார சண்ட தாண்டவம் ஆடப்படுகிறது’ என்ற கருத்துடன் தொடங்கும் பாடலைப் பாட, அதன் தாளகதிக்கு ஏற்ப, சிவபெருமான் ‘பஞ்ச சகார சண்ட தாண்டவம்’ ஆடினார். ராவணன் பாடிய சிவதாண்டவ ஸ்தோத்திரப் பாடல்களை எவரொருவர் பக்தியுடன் பாடுகிறாரோ அவருக்கு சிவபெருமானின் அருளால் அனைத்து நன்மைகளும் உண்டாகும்.