ரிட்ஸ் விற்பனை நிறுத்தம்: மாருதி சுசூகி அறிவிப்பு
சிறிய வகை காரான ரிட்ஸ் விற்பனையை நிறுத்துவதாக மாருதி சுசூகி அறிவித்துள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாட்டு சந்தையில் இந்த கார் விற்பனை நிறுத்தப்படுகிறது.
கடந்த 2009-ம் ஆண்டு இந்த மாடல் கார் அறிமுகம் செய்யப்பட்டது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் வடிவமைக்கப்பட்டது. இதுவரை 4 லட்சம் வாகனங்கள் விற்பனையாகி இருக்கும்.
நிறுவனத்தில் தொடர்ந்து புதுமைப்படுத்தியும் புதுப்புது மாடல் கார்களையும் அறிமுகம் செய்து வருகிறோம். சிறிய வகை காரில் ரிட்ஸ் முக்கிய பங்கு வகித்தது. புதிய மாடல் அறிமுகம் செய்வதற்காக இந்த மாடல் காரின் உற்பத்தி நிறுத்தப்படுகிறது. அதே சமயம் இந்த காரின் உதிரிபாகங்கள் அடுத்த 10 ஆண்டுகளுக்கு கிடைக்கும் எனவும் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறினார்.
சமீபத்தில் பிரீமியம் ரக காரான எஸ்-கிராஸ் மாடல் விற்பனையை மாருதி நிறுத்தியது. சந்தையில் தேவை குறைந்ததே இதற்கு காரணம் என முன்பு நிறுவனம் கூறியிருந்தது.