ரியல் எஸ்டேட் துறையைப் புதுப்பிக்க மத்திய அரசு செய்த முயற்சிகள்

ரியல் எஸ்டேட் துறையைப் புதுப்பிக்க மத்திய அரசு செய்த முயற்சிகள்

real estateரியல் எஸ்டேட் துறையைப் புதுப்பிக்க மத்திய அரசு நிறைய முயற்சிகளை எடுத்துவருகிறது. ஆனால், இன்னும் செய்ய வேண்டுபவையோ நிறைய இருக்கின்றன.

தொடர்ந்து மூன்று மோசமான ஆண்டுகளைக் கடந்து வந்திருக்கும் கட்டுநர்கள், வரவிருக்கும் மத்திய பட்ஜெட்டை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கின்றனர். இந்த பட்ஜெட்டில் துறையைப் புதுப்பிக்கும்படி வலுவான நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

திட்டத்துக்கான அனுமதிகளைச் சீராக்குவது, வரி விலக்குத் திட்டங்கள் கொண்டுவருவது போன்ற நீண்டகாலக் கோரிக்கைகள் இந்த பட்ஜெட்டிலாவது நிறைவேற்றப்படுமா என்று துறை நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். 70 ஆயிரம் ரூபாய் கோடி மதிப்பு கொண்ட இந்தத் துறை இந்த ஆண்டு அரசின் மீது முழு நம்பிக்கையையும் வைத்துக் காத்திருக்கிறது.

வெளிநாட்டு நேரடி முதலீடுகள், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை மசோதாவின் ஒப்புதல், REIT கட்டுப்பாடுகளில் திருத்தங்கள் என அரசு எடுத்த நடவடிக்கைகளுக்குப் பிறகும் ரியல் எஸ்டேட் கடினமான கட்டத்தையே சந்தித்துவருகிறது. இந்த பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகளை அத்துறைசார் நிபுணர்கள் பகிர்ந்துகொள்கிறார்கள்:

ஐசிஎஸ் கார்ப்ரேட் ஆலோசகர்களின் தலைவர் தீப் கன்ட்வாலா, “ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மெண்ட் ட்ரஸ்ட் (REIT) வெற்றியடைவதற்கு பெரிய அளவிலான பங்களிப்பு தேவைப்படுகிறது. அத்துடன், இது வெறும் நிறுவன முதலீட்டாளர்களை மட்டுமல்லாமல் உள்நாட்டு சில்லறை முதலீட்டாளர்களையும் உள்ளடக்கியிருக்க வேண்டும். அதற்கு இன்னும் சில தீவிரமான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. இந்திய ஒய்வூதிய நிதிகள், காப்பீட்டு நிறுவனங்கள் இரண்டையும் இதில் முதலீடு செய்வதற்கு அனுமதிக்கவும், ஊக்கப்படுத்தவும் வேண்டும்” என்கிறார்.

அத்தடன், தொழில் அந்தஸ்து வழங்கும் கோரிக்கையும் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கிறது. ஹவுஸ் ஆஃப் ஹிராநந்தானியின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான சுரேந்திரா ஹிராநந்தானி, “தொழில் அந்தஸ்து பெறுவது என்பது ரியல் எஸ்டேட் துறையில் நீண்ட காலக் கோரிக்கையாக இருந்துவருகிறது. ஏனென்றால், அப்போது நிதி நிறுவனங்களிடம் இருந்து கட்டுநர்களுக்கு நிதி குறைவான வட்டியில் கிடைக்கும். இது பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும். அத்துடன், வீட்டுக் காப்பீட்டு பிரிமியத்தில் வரி சலுகைகளை அறிமுகப்படுத்த முடியும். இது பயனாளிகளைத் தங்கள் வீடுகளைக் காப்பீடு செய்வதை ஊக்குவிக்கும்” என்று விளக்குகிறார். மலிவுவிலை வீடுகளுக்குக் கிடைக்கும் வரவேற்பு, கட்டுநர்களை இந்தத் திட்டங்களுக்கு வரிச்சலுகைகளை எதிர்ப்பார்க்க வைத்திருக்கிறது.

வீடு விற்பனை தேக்கநிலையில் இருந்தாலும், கடந்த ஆண்டு டிசம்பரில் மலிவு விலை வீடுகளின் விற்பனை ஏறுமுகத்தில் இருந்திருக்கின்றன. இதை ரியல் எஸ்டேட் ஆய்வு நிறுவனமான நைட் ஃபிரான்க் இந்தியாவின் சமீபத்திய ஆய்வு முடிவுகள் உறுதிசெய்கின்றன. காஜியாபாத்தில் தொடங்கப்பட்டிருக்கும் 97 சதவீத புதிய திட்டங்கள் மலிவுவிலை மற்றும் நடுத்தர வீடுகள்தான்.

‘தோஷி ஹவுசிங்’கின் இயக்குநர் மெஹுல் தோஷி, “மலிவுவிலை வீடுகளைச் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் சிறப்புக் குடியிருப்பு மண்டலப் பகுதிகளாக அறிமுகப்படுத்துவது வரிச்சலுகைகள் கிடைக்க உதவும். அத்துடன், கிட்டத்தட்ட வீட்டின் 25 சதவீத மதிப்பை இதனால் லாபமாகப் பெறமுடியும்” என்கிறார்.

நைட் ஃபிரான்க் இந்தியாவின் மேலாண்மை இயக்குநரான சிஷிர் பைஜல், “கடந்த பட்ஜெட் ‘அனைவருக்கும் வீடுகள்’ என்பதில் கவனம் செலுத்தியது. ஆனால், அதற்கான தெளிவான செயல் திட்டங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. வீடு வாங்குபவர்களுக்கான சலுகைகளும், விலக்குகளும் இந்த ஆண்டு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்” என்கிறார்.

அஜ்மேரா ரியல்டியின் இயக்குநர் தவல் அஜ்மேரா, “சேவை வரி, வாட் (VAT) போன்றவற்றிலும் கவனத்தைத் திருப்ப வேண்டும். ஏனென்றால், கட்டுநர்கள் இந்தச் சேவை வரிக்கான பணத்தை வீடு வாங்குவோரிடம் இருந்துதான் பெறுகிறார்கள். இது சரியானதில்லை என்பதை உணர்ந்திருக்கிறோம்” என்கிறார்.

ஆர்இ/மேக்ஸ் இந்தியாவின் தலைவர் சாம் சோப்ரா, “ரியல் எஸ்டேட் துறை தேவைக்கும் விநியோகத்திற்குமான பொருத்திமில்லாத சூழலில் சிக்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு, சொத்து விலை அதிகமாக இருப்பது முக்கியமான காரணம். அரசு, திட்டங்களை வேகமாக முடிப்பதற்கான ஒப்புதல்களை வழங்கினால் ரியல் எஸ்டேட்டின் இந்தத் தேக்கநிலை மாறும்” என்கிறார்.

ஜிஎஸ்டி அமலாக்கம்

எஸ்ஏஆர்இ (SARE) ஹோம்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் டேவிட் வாக்கர், , “ஜிஎஸ்டி மசோதா அமலாக்கப்பட்டால், பல தளங்களில் கட்டப்படும் வரிகள் குறையும். அத்துடன், ஒப்புதலுக்கு எடுத்துக்கொள்ளப்படும் நேரமும் குறையும். இது திட்டங்களை விரைந்து முடிக்க உதவும்” என்கிறார்.

ஜேஎல்எல் இந்தியாவின் தலைவர் அனுஜ் பூரி, “கட்டுமானம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சொத்துக்களை வாங்கும்போது, வீடு வாங்குபவர்களுக்கு வெறும் இரண்டு லட்சம் வரிச்சலுகைதான் கிடைக்கும். அதுவும் அந்தத் திட்டம் மூன்று ஆண்டுகளுக்குள் முடிக்கப்பட வேண்டும். ஒருவேளை, கட்டுநர் திட்டத்தை முடிப்பதற்குத் தாமதமாக்கினால், அந்த வரிச்சலுகையில் 30 ஆயிரன் ரூபாய் குறைந்துவிடும். இதனால், வட்டியும் அதிகம் செலுத்த நேரிடும். முதல் முறை வீடு வாங்குபவர்கள் தங்கள் தேவைக்கு கூடுதலாக வாடகை செலுத்தும் நிலையும் உருவாகிறது” என்கிறார்.

Leave a Reply