ரியல் எஸ்டேட் : பத்திரத்தை அவசியம் படியுங்க!

ரியல் எஸ்டேட் : பத்திரத்தை அவசியம் படியுங்க!

real estate
நீங்க செலக்ட் பண்ணின மனைக்கு உண்டான கிரயப் பத்திரத்தை வாங்குங்க… சில பேர் பழுப்பேறிப்போன ஒரு ஜெராக்ஸ் காப்பியைக் காட்டி கதை பேசிக்கிட்டே இருப்பாங்க… அதையெல்லாம் வாங்காம ஒரிஜினல் பத்திரத்தைக் காட்டச் சொல்லிக் கேளுங்க. ஒருவேளை, அந்த மனையை அடமானம் வெச்சு பேங்க்கில் கடன் வாங்கியிருந்தா, ஒரிஜினல் இல்லாம இருக்கும். அந்த மாதிரி நேரத்தில் சிலர் ஜெராக்ஸைக் காட்டி ஏமாத்தப் பார்ப்பாங்க. நாம கொஞ்சம் ஸ்ட்ராங்கா நின்னுட்டா, ஆரம்பத்திலேயே சிக்கலைத் தவிர்த்துடலாம்.

அந்த ஒரிஜினலைக் கூட தெளிவா படிச்சுப் பாருங்க… எங்கயாவது பேங்க் பேரு இருக்கானு… ஒருவேளை முன்னால் அடமானம் இருந்து இப்போ மீட்டிருந்தா அதுக்கு பேங்க் ஒரு லெட்டர் கொடுத்திருக்கும். அதைக் காட்டச் சொல்லிக் கேளுங்க… ‘அவரு நல்லவரு… ஏமாத்த மாட்டாரு… அவருகிட்டே எப்படி இதையெல்லாம் கேக்குறது’னு யோசிக்காதீங்க… அவரை யாராவது நம்ப வெச்சிருக்கலாம். நாமும் ஏமாறணுமா என்ன? நல்லா சோதிச்சுப் பார்த்து வாங்குற உரிமை நமக்கு இருக்கு!

கிரயப் பத்திரம் கரெக்டா இருந்தா டோக்கன் அட்வான்ஸைக் கொடுத்திடலாம். எப்பவுமே அட்வான்ஸ்னு சொல்லி அதிக பணத்தைக் குடுக்காதீங்க. ஏன்னா, இந்த லெவலில்கூட பல டீலிங் நின்னுருக்கு. அப்போ அட்வான்ஸ் திரும்பக் கிடைக்க கொஞ்சம் தாமதமாகும். சில கேஸில் அட்வான்ஸ் திரும்பக் கிடைக்காது. அதனால டோக்கன் அட்வான்ஸைக் கொடுத்து பேப்பர்களை வாங்குங்க!

என்ன பேப்பரெல்லாம் வாங்கணும்?

கிரயப் பத்திரத்தை சார்பதிவாளர் அலுவலகத்துல கட்டணம் செலுத்தி பதிவு பண்ணி முத்திரை குத்தி வாங்கியிருப்பாங்க. அதோட நகல் முக்கியம்… அதுக்கு முன்னே அந்த சொத்து யாருகிட்டே இருந்ததுங்கறதுக்கான நகல் ஆதாரங்கள், பட்டா நகல் எல்லாம் வாங்கிக்கோங்க. இதுல பட்டாங்கறது முக்கியமான ஆவணம். ஏன்னா, சொத்து நம்மளுதுதான்னு சொல்றதுக்கான ஆதாரம் அது! அரசாங்கம் அந்த நிலத்தின் உரிமை யாருக்குனு முடிவு செய்யறதே அந்த பட்டாவை வெச்சுத்தான். இந்த ஆவணங்களின் நகல்களை எல்லாம் விக்கிறவர்கிட்டேயிருந்து வாங்கிக்கணும்.

சிட்டா அடங்கல்…

‘சிட்டா’ங்கறது ஒரு தனி நபருக்கு குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்குனு அரசாங்கம் வெச்சிருக்கும் பதிவேடு. இதில் சொத்தின் உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், நிலம் நஞ்செய் அல்லது புஞ்செய் பயன்பாடு, தீர்வை கட்டிய விவரம் எல்லாம் இருக்கும். பட்டாவுக்கு விண்ணப்பிக்கும்போது, இதில் உள்ள விவரங்களின் அடிப்படையில்தான் பட்டா தருவாங்க.

‘அடங்கல்’ங்கறது ஒரு கிராமத்தில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடு. இதிலே, குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது, அதோட பட்டா எண் என்ன, நிலத்தோட பயன்பாடு என்னங்கற மாதிரியான விவரங்கள் இருக்கும்.

வில்லங்கச் சான்றிதழ்…

ரொம்ப முக்கியமான ஆதாரம்… இதை நாமளே கூட சார் பதிவாளர் அலுவலகத்தில் பணம் கட்டி விண்ணப்பித்து வாங்கலாம். விக்கிறவர் நமக்குக் கொடுக்கறதைப் பாக்கிறதை விட, நாமளே வாங்கிப் பார்க்கிறது நல்லது. சொத்துல ஏதாவது வில்லங்கம் இருந்தா… அதுல தெரிசிடும். சொத்து யார் பேர்ல இருக்கு, இதுக்கு முன்னே யாருகிட்டே இருந்ததுங்கற விவரம் எல்லாம் அதுல வந்துடும். குறைஞ்சபட்சம் 30 வருஷத்துக்காவது வில்லங்கம் போட்டு சான்றிதழ் வாங்கிப் பார்த்துடறது நல்லது.

வக்கீல் வாக்கு முக்கியம்!

இந்த ஆவணங்களை மொத்தமாக் கொண்டு போய் நல்ல வக்கீல் ஒருத்தர்கிட்டே காட்டி, எல்லாம் கரெக்டா, சிக்கல் இல்லாம இருக்கானு பார்த்துக்கணும். வக்கீலுக்கு ஃபீஸ் குடுக்கணுமேனு கவலைப்பட்டா… சிக்கல் கண்ணுக்குத் தெரியாமப் போயிடும். பொதுவா நீங்க மனையைக் காட்டி கடன் வாங்கப் போனாலோ, வீடு கட்டப் போனாலோ, லீகல் ஒப்பீனியன் வாங்கறதுக்கு ஒரு வக்கீல்கிட்டே போகவேண்டி-யிருக்கும். அப்போ, அவர் கேட்கும் கேள்விகளை முதல்லயே ஒரு வக்கீல்கிட்டே கேட்டு தெளிவுபடுத்திக்கறது நல்லது.

ஆக, இந்த விஷயங்கள் எல்லாம் சரியா இருந்து, வக்கீல் வாங்கலாம்னு சொல்லிட்டாருன்னா, நீங்க மனையோட தொகையில கால்வாசியைக் கொடுத்து அக்ரிமென்ட் போட்டுறலாம். ஏன்னா, இந்த அக்ரிமென்டைக் காட்டித்தான் பேங்க்கில் கடன் வாங்கமுடியும். ஒருவேளை நீங்க மொத்தத் தொகையையும் கொடுத்திடப் போறீங்கன்னா, நேரடியா கிரயப் பத்திரமே ரெடி பண்ணிடலாம்.

Leave a Reply