ரியல் எஸ்டேட்: வளம்பெறும் ஒரகடம்

ரியல் எஸ்டேட்: வளம்பெறும் ஒரகடம்

சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு வரை, ‘ஒரகடம்’ என்ற பகுதியை, அப்பகுதியைச் சேர்ந்தவர்களைத் தவிர தமிழ்நாட்டில் வேறு யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இன்று ஆசியாவின் ஆட்டோமொபைல் தயாரிப்பு மையமாகவும் தமிழகத்தின் பிரபலமான நகரங்களுள் ஒன்றாகவும் மாறியிருக்கிறது, சென்னைக்கு அருகில் 50 கிலோ மீட்டரில் அமைந்திருக்கிறது இந்நகரம்.

இந்திய அளவில் பெருநகரங்களுக்கு அருகே அமைந்துள்ள துணை நகரங்கள் பொருளாதார மண்டலங்களாக அறிமுகப்படுத்தப்பட்டு அவை மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றன. டெல்லி அருகே உருவான குர்கான், மும்பை அருகே உருவான பொவாய் போன்றவை இதற்குச் சரியான முன்னுதாரணங்கள் ஆகும். அந்த வகையில் தமிழகத்தில் மிக வேகமாக வளர்ந்துவரும் பொருளாதார மண்டலம் ஒரகடமாகும்.

மாநிலத்தின் முதலீடுகளைப் பெருக்கும் பொருட்டுத் தமிழக அரசு இங்கே தொழிற்சாலைகளை அமைக்க நிறுவனங்களுக்கு மானியம் வழங்கி ஊக்குவிப்பதாலும், உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பதாலும் ஆண்டுதோறும் தொழிற்சாலைகள் எண்ணிக்கையும் அங்கு பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. டெய்ம்லர், ரினால்ட்-நிஸான், ஃபோர்டு, டி.வி.எஸ்., அப்போல்லோ, மெர்ஸிடிஸ், சுந்தரம் ஆட்டோ, ராயல் என்ஃப்பீல்டு உள்ளிட்ட உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை இங்கு அமைத்துள்ளன.

உலகின் முன்னணி நிறுவனங்கள் எல்லாம் தங்கள் தொழிற்சாலையை இங்கே போட்டிபோட்டுக்கொண்டு நிறுவும் அதேவேளையில் தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் இங்கே தங்கள் புராஜெட்டுகளை ஆர்வத்துடன் அறிமுகப்படுத்திவருகின்றன. தொழிற்சாலைகள் தொடங்குவதற்கும் மக்கள் வசிப்பதற்கும் ஏற்ற உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பொருளாதார வளர்ச்சிகள் ஒருங்கே அமைந்துள்ளதே இதற்கு மிக முக்கியக் காரணமாகும்.

விஸ்தாரமான ஆறு வழிச் சாலை, சென்னை, பெங்களூர் மற்றும் பிற முக்கிய நகரங்களுடனான இணைப்புச் சாலைகள், மேம்பாலங்கள், புகழ்பெற்ற ஆலயங்கள், மக்களின் வாழ்வாதாரங்களுக்கான சூப்பர் மார்க்கெட்டுகள், போக்குவரத்து வசதிகள், அலுவலகங்கள் என ஒரு பெருநகரத்திற்குண்டான அத்தனை அம்சங்களும் அமைந்துள்ளதால் ஒரகடத்தின் ரியல் எஸ்டேட் வர்த்தகமும் மதிப்பும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.

இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று, ஒரகடத்தின் சிறப்புகளை ஆராய்ந்து தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக 400 ஏக்கரில் விண்ணை முட்டும் அடுக்குமாடிக் குடியிருப்பு மற்றும் வீட்டுமனைப் பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு குட்டி நகரத்தையே இங்கு உருவாக்கியிருப்பது ஒரகடத்தின் ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.

மேலும், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வீட்டுமனைப் பிரிவுகள் கணிசமாகக் குறைந்துவருவதால், எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு முதலீடுசெய்ய விரும்புபவர்களுக்கு ஒரகடம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. ஏனெனில், வருங்காலத்தில் வரவிருக்கும் இன்னும் பல்வேறு சிறப்பம்சங்கள் ஒரகடத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்லும் எனப் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

அவற்றில் சில:

# ஒரகடத்தையும் ஸ்ரீபெரும்புதூரையும் இணைத்துத் தொழில்துறை மண்டலத்தை விரிவாக்கிச் சென்னையின் பொருளாதார நகரமாக உருவாக்கத் தமிழக அரசு முயற்சிகள் எடுத்து வருகிறது.

# இதன் மூலம் 30,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும்.

# NH4 தேசிய நெடுஞ்சாலை, தாம்பரம், முடிச்சூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூரை இணைப்பதால் சுற்றுவட்டாரத்தில் ஒரகடம் ஒரு மிக முக்கிய நகரமாக மாறி வருகிறது.

# ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் மட்டுமல்லாது சாம்சங், DELL போன்ற எலக்ட்ரானிக் பொருள்கள் உற்பத்தித் தொழிற்சாலைகளும் தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனங்களும் தங்கள் கிளைகளைத் தொடங்கவிருக்கின்றன.

# சுமார் 300 ஏக்கரில் Aerospace பூங்கா ஒன்று அமையவிருக்கிறது. இதில் 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்கள் யூனிட்டுகளைக் கூடிய விரைவில் தொடங்கவிருக்கின்றன.

# சுமார் 25,000 ஏக்கர் பரப்பில் அரசு இந்தச் சிறப்பு பொருளாதார மண்டலத்தை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் எதிர்காலத்தில் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் இங்கே வரக் காத்திருக்கின்றன.

# சில வருடங்களுக்கு முன்பு வரை சென்னை நகருக்குச் சென்றுவர வெறும் 25 அடி சாலையை மட்டுமே கொண்டிருந்த ஒரகடம் இன்று 200 அடி சாலையுடன் அசுர வளர்ச்சி அடைந்திருப்பதே இது எதிர்காலத்தில் அடையவிருக்கும் வளர்ச்சிக்கு ஆதாரமாகும்.

Leave a Reply