ரிலையன்ஸ் ஜியோபோன் போட்டியாக புதிய போன் தயாரிக்கும் மைக்ரோமேக்ஸ்
இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான மைக்ரோமேக்ஸ் ரிலையன்ஸ் ஜியோபோனிற்கு போட்டியாக புதிய பீச்சர் போன் ஒன்றை தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி மைக்ரோமேக்ஸ் நிறுவனம் 4ஜி பீச்சர்போன் தயாரித்து வருவதாக கூறப்படுகிறது.
இதேபோல் லாவா நிறுவனமும் பீச்சர் போன் ஒன்றை தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டின் துவக்கத்தில் இந்தியாவில் 4ஜி வோல்ட்இ கொண்ட விலை குறைந்த போனினை லாவா நிறுவனம் முதலில் வெளியிட்டது. லாவா 4ஜி கனெக்ட் எம்1 என அழைக்கப்படும் பீச்சர்போன் விலை இந்தியாவில் ரூ.3,333 என நிர்ணயம் செய்யப்பட்டது.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில் ஜியோபோன் அறிமுகம் செய்யப்பட்டது. ஜியோபோன் அனைவருக்கும் இலவசமாக வழங்கும் நோக்கில் இதனை வாங்குவோர் திரும்ப செலுத்தக் கூடிய வகையில் ரூ.1500 செலுத்த வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு பின் இந்த தொகை திரும்ப வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்திய பீச்சர்போன் சந்தையில் ஜியோபோன் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் ஜியோபோன் வரவு மைக்ரோமேக்ஸ், இன்டெக்ஸ், லாவா, கார்பன் மற்றும் சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
சாம்சங், ஐடெல், மைக்ரோமேக்ஸ், லாவா மற்றும் இன்டெக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்திய பீச்சர்போன் சந்தையில் முன்னணி இடங்களில் உள்ளது. மேலும் இந்தியாவில் மொத்தம் 75 கோடி பேர் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல் வசதி மட்டும் கொண்டுள்ள சாதாரண போன்களையே பயன்படுத்தி வருகின்றனர்.