ரிஷிகேஷ் மகான்: இரண்டறக் கலக்கும் போது பேரின்பம்

ரிஷிகேஷ் மகான்: இரண்டறக் கலக்கும் போது பேரின்பம்

4“எனக்கு முக்தி கிட்டாமல் போனாலும் போகட்டும். ஆனால் இந்த எளிய மனிதர்களுக்குத் தொண்டு புரிவதற்காக மீண்டும் மீண்டும் பிறப்பேன்” என்றவர் குருதேவர் சிவானந்தர். சேவை செய். நேசி. கொடு. பரிசுத்தமடை. தியானி. இறையுணர்வு பெறு. ஆகியவை அவர் உலகிற்குச் சொன்ன செய்திகள்.

உருகவைக்கும் அவர் வாழ்க்கை “நல்லவனாய் இரு நல்லதைச் செய்” என்று ஒலித்துக்கொண்டே இருக்கிறது. காலத்துக்குக் கட்டுப்பட்டவன் மனிதன். ஞானிக்குக் கட்டுப்பட்டுக் கிடப்பது காலம். தன் இறுதி நாளைப் பல நிகழ்வுகளில் உலகிற்கு உணர்த்தினார் இந்த இறை மனிதர்.

1962-ம் ஆண்டு. மே மாதத்தில் ஒருநாள். காலை வழிபாடு முடிந்தது. குருதேவர் காத்திருந்த பக்தருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பின் தனியே அமர்ந்திருந்தார். சட்டென்று அருகில் நின்ற சீடரிடம், “நானும் இல்லை, நீயும் இல்லை, உலக விவகாரம் மறைந்தது” என்றார். ஆடிப்போன சீடர் அதன் உட்பொருள் அறிந்துகொள்ளத் தடுமாறினார்.

ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் அடுத்த பிறந்தநாளுக்குப் பக்தர்களை அழைப்பது குருதேவர் வழக்கம். ஆனால் 8.9.1962 அன்று கொண்டாடப்பட்ட குருதேவர் பிறந்தநாளின்போது அப்படி அழைக்கவில்லை. ஆனால் 1963-ம் ஆண்டு இரவு வழிபாட்டின்பொழுது, துறவறம் மேற்கொள்ள விரும்புகிறவர்கள் இந்த ஆண்டு வரப்போகும் சிவராத்திரிக்குள் பெற்றுக்கொள்ளுங்கள் என்றார்.

குருதேவரின் இறுதிக் காலம்

தன் சீடரிடம் பலமுறை நாள்காட்டியைக் கொண்டுவரச் சொன்னார். ஒருமுறை சீடர், “ஆன்மிகக் குறிப்பு நாள்காட்டியா?” என்றார். இல்லை சாதாரண நாள்காட்டிதான் என்றார் குருதேவர்.

பின்னர் ஒருநாள் நாள்காட்டியைக் கொண்டுவரச் சொல்லி ஜூன் மாதத்தைத் தள்ளிவிட்டு ஜூலை மாதத்தைப் பார்த்தார். குறிப்பிட்ட நாளை மனதிற்குள் குறித்துக்கொண்டு நாள்காட்டியைத் திருப்பித் தந்தார். வியப்புத் தாளாத சீடர், “அது என்ன சுவாமிஜி” என்றார். “உனக்குத் தெரியாதப்பா” என்றார் குருதேவர். தான் இறைமையோடு கலக்கும் நாளைத் தானே தேர்ந்தெடுத்துக்கொண்டார் என்பது எவருக்குத் தெரியும்?

தன் இறுதி நிலையை நன்கறிந்த குருதேவர் எழுத முடியாத நிலையில் தன் பேச்சை ஒலிப்பதிவு செய்தார். நாள்தோறும் தவறாமல் ஐந்து நிமிடங்களுக்குப் பதிவு நடக்கும். சில நாள்களுக்கு ஒருமுறை ஒலிப்பதிவு செய்யும் சீடரிடம் எவ்வளவு செய்தி கொடுத்திருக்கிறேன் என்று கேட்டுக்கொள்வார். உடல் தளர்ந்தபோதும் உலக மக்களுக்குத் தொண்டாற்ற உள்ளம் துடித்த துடிப்பு அது.

1963-ம் ஆண்டு ஜூன் 21-ல் நடைபெற்ற காலை வழிபாட்டை முடித்துக்கொண்டு வெளியே வந்தார் குருதேவர். வேப்ப மர நிழலில் நின்றார். சுற்றிலும் நின்றிருந்த பக்தர்களைப் பார்த்தார். சிரித்துக்கொண்டே “பிரம்மலோகத்திலிருந்து பூவிமானம் வரப்போகிறது. யார் யார் வரப்போகிறீர்கள். கை தூக்குங்கள்” என்றார். உடனே “சுவாமிஜி நான் வருகிறேன்” என்றார் ஒருவர். குருதேவர் அவரிடம் புன்னகையோடு “கொஞ்சம் பொறுத்து வாருங்கள்” என்றார். இருபத்து மூன்று நாள்களுக்குப் பின் என்ன நடக்கப்போகிறது என்பதை அன்பில் கரைந்து கிடந்த உள்ளங்கள் எப்படி அறியும்?

நாள்தோறும் காலை இரண்டு மணிநேரங்கள் எழுதுவது குருதேவரின் முக்கியப் பணி. இறுதிக் கட்டத்தில் குருதேவர் சொல்லச் சொல்ல சீடர் சாந்தானந்தர் எழுதினார். ஒருநாள் எழுதிக்கொண்டிருந்த சீடரிடம், “மனிதன் இறைவனிடத்தில் இரண்டறக் கலக்கும் பொழுது பேரின்பம் சுரக்கிறது” என்று சொல்லிவிட்டு அமைதியானார். மெதுவாகச் சீடர் இன்னும் எழுதட்டுமா என்றார். குருதேவரோ “போதும்” என்றார். அதுவே குருதேவரின் கடைசி வாக்கியமானது. 14.7.1963 அன்று இரவு 11-15 குருதேவர் இறைவெளியில் கலந்தார்.

குருதேவரின் குடிலை விட்டு வெளியே வந்த சீடர் சுவாமி சிதானந்தர் உலக மக்களுக்குச் செய்தியைச் சொன்னார் “குருதேவரின் வாழ்க்கை அழகான வாழ்க்கை. பலருடைய வாழ்க்கையை அழகுபடுத்திய வாழ்க்கை.”

ஆராதனை நாள்

குருதேவர் சிவானந்தர் இறைவெளியில் கலந்த நாள் 14.7.1963. 8.9.1887-ல் பத்தமடையில் பிறந்து தஞ்சை மருத்துவகழகத்தில் மருத்துவம் பயின்றார். மலேயாவில் புகழ்பெற்ற மருத்துவராய்த் திகழ்ந்தார், பின் அனைத்தையும் துறந்து துறவு மேற்கொண்டு இமயப்பேரொளியாய் விளங்கி 14.7.1963-ல் இறைவெளியில் கலந்தார். அவருடைய 53-வது புண்ணியதிதி ஆராதனைநாள் 28.7.2016 கொண்டாடப்படுகிறது.

Leave a Reply