ரூபாய் செலவில்லாமல் பார்வைத்திறன் மேம்படுத்தும் யோகா வழிமுறைகள்!

ரூபாய் செலவில்லாமல் பார்வைத்திறன் மேம்படுத்தும் யோகா வழிமுறைகள்!

சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் தாத்தா பாட்டி வரை, அனைவரையும் பாகுபாடு இல்லாமல் பாதிப்பது பார்வைக்குறைபாடு. எட்டு வயது குழந்தைகூட கண்ணாடி அணிந்திருப்பது கவலையளிக்கிறது. “சின்ன வயசுல ஆரம்பிச்சு நிறைய ட்ரீட்மென்ட் எடுத்துட்டேன். ஒண்ணும் பிரயோசனம் இல்லை. கண்ணாடி போட்டாத்தான் பார்வை தெளிவா தெரியுது’’ என்று இருபத்தி ஐந்து வயது இளைஞர்கள் கூறுவதையும் கேட்டிருப்போம். மருந்து, மாத்திரை வேண்டாம்; இயற்கையான வழிகளில் சில பயிற்சிகளைத் தொடர்ந்து மூன்று மாதங்களுக்குச் செய்தால் பார்வைத்திறன் மேம்படும்.

பார்வைத் திறன்

பார்வைக்குறைபாடு இரண்டுவிதம். ஒன்று, ஒளி விலகலில் தவறு (Refractive Error). மற்றொன்று, கண் அமைப்பிலேயே தவறு (Organic Error). பெரும்பாலான மக்களுக்கு ஒளி விலகலில் ஏற்படும் தவறால்தான் பார்வைக்குறைபாடு உண்டாகிறது. சரி… இனி இதனால் பிரச்னைகலையும் அதற்கான தீர்வுகளையும் காணலாம்.

எல்லாவிதமான ஒளி விலகல் தவற்றுக்கும் கண்களை வருத்திக்கொள்வதுதான் காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இப்படி வருத்திக்கொள்ளும் பளுவைக்குறைத்துவிட்டாலே, ஒளி விலகல் தவறு குறைந்து போய்விடும். இந்தக் குறையை மூன்று வகையாகப் பிரிக்கிறார்கள்.
1.கிட்டப் பார்வை
2. தூரப்பார்வை
3.வயோதிகத் தன்மையால் ஏற்படும் பார்வைக் கோளாறு.

1. கிட்டப் பார்வை:

கிட்டப்பார்வையில் சாதாரணமாக அருகில் இருப்பவற்றை நன்றாகப் பார்க்க முடியும். பத்து அடி தூரத்துக்கு அப்பால் உள்ளவை மங்கலாகவும் தெளிவற்றதாகவும் தெரியும். இதற்கு பரம்பரை, வயது, உயரம், வருத்திக்கொள்வது போன்ற பல காரணங்கள் உள்ளன. பொதுவாக பெற்றவர்கள் கிட்டப் பார்வையால் அவதிப்படுபவர்களாக இருந்தால், அவர்களது குழந்தைகளும் நிச்சயமாக இதனால் பாதிக்கப்படுவார்கள். கிட்டப்பார்வை வளர்ந்துக்கொண்டே போகும் என்பதால் கண் வலி, அசௌகரியங்கள், கடைசியாகப் பார்வை இழத்தல்கூட ஏற்படும்.

2. தூரப்பார்வை:

தூரப் பார்வை குறைந்த வயதிலேயே ஏற்படுகின்றது. இந்தக் குறையுள்ளவர்கள் தூரத்தில் உள்ள பொருட்களையோ, நபர்களையோ எளிதில் பார்த்துவிடுவார்கள். ஆனால் அருகில் இருப்பதைக் காண சிரமப்படுவார்கள். இதைச் சரிசெய்வதற்கும் கண் கண்ணாடி சிபாரிசு செய்யப்படுகிறது. இப்படிக் கொடுக்கப்பட்ட கண்ணாடியும்கூட சில நேரங்களில் பவர் கூடிக்கொண்டே போகும்.

தூரப் பார்வையையும் கிட்டப்பார்வையையும் சரிசெய்ய இயற்கையான பயிற்சிகளை நாம் மேற்கொள்ளலாம்.

3. வயோதிகப் பார்வை:

வயோதிகப் பார்வைக்கு தூரத்தில் உள்ளவற்றைக் காண்பதற்கு ஒரு கண்ணாடியும், அருகில் இருப்பதைக் காண்பதற்கு ஒரு கண்ணாடியும் தேவைப்படும். வயதும், கண்ணை வருத்திக்கொள்ளுவதும் அதிகரிக்க அதிகரிக்க, இந்தப் பிரச்னை அதிகமாகிக்கொண்டே போகும். கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சில பயிற்சிகளைச் செய்துவந்தால், பார்வைத்திறனை மேம்படுத்த முடியும்.

பயிற்சிகள்:

சூரிய ஒளி சிகிச்சை

பார்வைத்திறன்

காலையிலோ, மாலையிலோ இந்தப் பயிற்சியைச் செய்யலாம். மதிய நேரத்தில் செய்யக் கூடாது. முதலில் சூரியனைப் பார்த்தபடி வசதியாக உட்கார வேண்டும். பிறகு கண்களை லேசாக மூடிக்கொண்டு உடம்பை மட்டும் அங்கும் இங்குமாக பக்கவாட்டில் இரண்டில் இருந்து ஐந்து நிமிடங்கள் அசைக்க வேண்டும். தரையில் அமர முடியாதவர்கள் நின்றும் இந்தப் பயிற்சியைச் செய்யலாம்.
மேகங்கள் சூரியனை மூடியிருந்தாலோ, குளிர் பிரதேசத்திலோ இந்தப் பயிற்சியை வீட்டுக்குள் இருந்தும் செய்யலாம். 40 வாட்ஸ் பல்பை எரியவிட்டு, கண்களை மிதமாக மூடிக்கொண்டு, உடம்பை மட்டும் அங்கும் இங்குமாக அசைக்க வேண்டும். இப்படி இரண்டு முதல் ஐந்து நிமிடங்கள் வரை செய்தாலே போதுமானதாகும்.

இந்தப் பயிற்சியை கிட்டப்பார்வை, தூரப்பார்வை மற்றும் வயோதிகப்பார்வையால் அவதிப்படுபவர்களும் செய்யலாம்.

கண் குளியல்

சூரிய ஒளி சிகிச்சையை முடித்ததும், கண்களைச் சுத்தமான குளிர்ந்த நீரில் கழுவவும். இதனால் கண்களும் அதில் உள்ள திசுக்களும் சுத்தமாவதோடு, கண்களுக்கு ஓய்வையும் அளிக்கும், பார்வைத்திறன் மேம்படும். கைகளில் சிறிதளவு தண்ணீரை எடுத்துக்கொண்டு, அதில் கண்ணை மூழ்கவைக்க வேண்டும். நீரில் கண்ணை கீழ் நோக்கி வைத்து நீருக்குள் இமைக்க வேண்டும். அதிக நேரம் கண்ணை நீரில் வைக்கக் கூடாது. அப்படிச் செய்தால், கண் நீரை இழுத்துக்கொள்ளும் (Suction). ஒவ்வொரு கண்ணையும் அரை நிமிடம் இப்படிக் கழுவினாலே போதுமானதாது.

இந்தப் பயிற்சியை கிட்டப்பார்வை, தூரப்பார்வை மற்றும் வயோதிகப்பார்வை குறைபாட்டல் அவதிப்படுபவர்கள் செய்யலாம்.

உள்ளங்கைப் பயிற்சி

கண்கள் மிகவும் களைப்படையும் போது, சிறிது நேரம் கண்களை மூடிக்கொண்டால், கண்கள் தளர்வடையும். இருந்தாலும் கண் இமைகளின் ஓரமாக வெளிச்சம் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதனால், உள்ளங்கையையால் கண்களை மூடிக்கொள்ளலாம். உங்களுக்குப் பிடித்த ஒரு பொருளையோ, பூவையோ, பறவையையோ கற்பனைச் செய்துகொள்ளுங்கள். இந்த முறை, கண்களை மட்டுமில்லாமல், மூளையையும் தளர்வடையச் செய்யும். இந்தப் பயிற்சியை பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை செய்யலாம். கண் பார்வைத் தெளிவாக இருப்பவர்களும் செய்யலாம்; கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வயோதிகப்பார்வையால் அவதிப்படுபவர்களும் செய்யலாம்.

மெழுகுவர்த்தி ஒளியில் படித்தல்

மெழுகுவர்த்தி

இதை கிட்டப் பார்வை உள்ளவர்கள் செய்தால், நல்ல பலன் கிடைக்கும். சிறிய எழுத்துகளை மெழுகுவர்த்தி ஒளியில் படிக்க வேண்டும். கிட்டப் பார்வையுள்ளவர்கள் எழுத்துகளை எவ்வளவு தள்ளிவைத்துப் படிக்க முடியுமோ, அவ்வளவு தள்ளி வைத்துப் படிக்கலாம். சிரமப்படாமல் படிக்க, ஒரு வரிக்கு ஒரு முறை கண்களைச் சிமிட்டிக்கொள்ளலாம். பிறகு தலையை ஒரு புறத்திலிருந்து இன்னொரு புறத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இப்படி 2 முதல் 5 நிமிடங்கள் வரை படித்தாலே போதுமானது. இறுதியாக நல்ல வெளிச்சத்தில் அந்தச் சிறிய எழுத்துகள் கொண்ட வரியைப் படிக்க வேண்டும்.

இதேபோல நல்ல ஒளியிலும்,மெழுகுவர்த்தி ஒளியிலும் மாறி மாறிப் படிக்க வேண்டும். படிக்கும்போது தலைவலி, கண் வலி ஏற்பட்டால் பயிற்சியை அன்று நிறுத்திவிட வேண்டும்.

பந்து விளையாட்டுப் பயிற்சி

பந்து விளையாட்டுப் பயிற்சி

ஒரு சிறிய பந்தை எடுத்துக்கொள்ளவும். நின்றபடி பந்தை இடது கையால் தரையில் போட்டு, வலது கையால் பிடிக்க வேண்டும். பிறகு கண்களை லேசாக மூடி, திறக்கவும். மறுபடியும் பந்தை வலது கையால் தரையில் போட்டு, இடது கையால் அதைப் பிடிக்கவும். பிறகு கண்களை லேசாக மூடி, திறக்கவும். இப்படி தினமும் ஐந்து நிமிடங்கள் செய்து வந்தால், கண்கள் தளர்வடையும், பார்வை தெளிவாகும். இதை, கிட்டப் பார்வை மற்றும் வயோதிகப் பார்வையால் அவதிப்படுபவர்கள் செய்யலாம்.

ஆவி பிடித்தல், கண்களைக் குளிர்வித்தல்

ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் ஆவி வரும் வரை கொதிக்கவிடவும். அதில் இரண்டு சொட்டு நீலகிரி தைலம் விட்டு, கண்களைத் திறத்து வைத்துக்கொண்டே, ஆழ்ந்து சுவாசிக்க வேண்டும். இப்படி மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் வரை செய்யலாம். பிறகு தண்ணீரில் நனைத்த பஞ்சை கண்களின் மீது 5 நிமிடங்களுக்கு வைத்து கண்களைக் குளிர்விக்கலாம்.

Thanks to vikatan.com

Leave a Reply