ரூ.11,500 கோடி நிதி மோசடி: பொதுமக்களின் பணத்துக்கு யார் உத்தரவாதம்?

ரூ.11,500 கோடி நிதி மோசடி: பொதுமக்களின் பணத்துக்கு யார் உத்தரவாதம்?

டந்த வாரம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிகழ்ந்த ரூ. 11,500 கோடி மோசடிதான் ஹாட் டாபிக். வங்கியில் கடன் பெறாமலேயே, வங்கி அதிகாரிகள் உடந்தையோடு இந்த அளவுக்கு நிதி மோசடி நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியளிக்கும் விஷயம்.

ஆனால் வங்கிகளில் நிதி மோசடி நிகழ்வது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. காலம் காலமாக பல்வேறு கால கட்டங்களில் மோசடி நிகழ்ந்து வருகிறது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் மத்திய நிதித்துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் மிகுந்த கவலையோடு நாடாளுமன்றத்தில் தெரிவித்த விவரத்தை பார்த்தாலே இது புரியும். “பொதுத்துறை வங்கிகளில் நடைபெறும் மோசடியின் அளவு மிகவும் கவலையளிக்கிறது. 2016-17-ம் நிதி ஆண்டில் மட்டும் ரூ. 23,902.63 கோடி அளவுக்கு வங்கிகளில் மோசடி நடந்துள்ளன,’’ என்று எழுத்துபூர்வமாக பதிவு செய்துள்ளார்.

எப்படி நிகழ்ந்தது

கடந்த வாரம் வெளியான மோசடி, இன்று நேற்று நடந்ததல்ல. இது 2010-ம் ஆண்டிலிருந்தே நடந்ததாகத் தெரிகிறது. இந்த விவகாரத்தை முழுவதுமாக தெரிந்துகொள்ள மூன்று விஷயங்களை முக்கியமாக கவனிக்க வேண்டும். முதலாவது எல்ஓயு எனப்படும் உறுதியளிப்பு கடிதம். அடுத்து ஸ்விப்ட், மூன்றாவது சிபிஎஸ் எனப்படும் கோர் பேங்கிங் சிஸ்டம்.

எல்ஒயூ

ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனத்துக்கு வங்கிகள் அளிக்கும் உறுதியளிப்பு கடிதத்தை (Letter of Undertaking) அடிப்படையாக வைத்து இந்த மோசடி நிகழ்ந்துள்ளது. இந்த கடிதத்தை ஆதாரமாக வைத்து ஹாங்காங்கில் உள்ள அலாகாபாத் வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கிக் கிளைகள் கடன் வழங்கியுள்ளன. எல்ஓயு எனப்படும் உறுதியளிப்பு கடிதம் இருந்தால் ஒருவேளை கடன் பெறுவோர் தொகையை திரும்ப அளிக்கத் தவறினால் கடன் மற்றும் அதற்குரிய வட்டியை பஞ்சாப் நேஷனல் வங்கி அளிக்கும் என்ற உத்திரவாதத்தை இந்த உறுதியளிப்பு கடிதம் அளிக்கிறது.

ஸ்விப்ட்:

உலகம் முழுவதும் உள்ள வங்கிகளிடையே நிதிச் சேவை தொலைத் தொடர்பு இணைப்பு என்பதன் சுருக்கமே ஸ்விப்ட் எனப்படுகிறது. எல்ஓயு அளிக்கப்பட்டாலே அதில் குறிப்பிட்டுள்ள தொகைக்கான கடன் அளவு வெளிநாட்டில் உள்ள சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைக்கு ஸ்விப்ட் குறியீடு மூலம் வழங்கப்படும். பொதுவாக வெளிநாட்டு பணப் பரிவர்த்தனைகளுக்கு இம்முறையே பின்பற்றப்படுகிறது. இது மூன்றடுக்கு பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டது. இதை உருவாக்குபவர், அதை பரிசீலிப்பவர் அடுத்து இறுதிகட்டமாக ஆய்வு செய்பவர் ஒருவர் என மூன்றடுக்கு பாதுகாப்பை உள்ளடக்கியது.

சிபிஎஸ்:

இது கோர் பேங்கிங் சிஸ்டம் (சிபிஎஸ்) எனப்படும் வங்கிகளை ஒருங்கிணைக்கும் முறையாகும். இந்த முறையில் நடைபெறும் பரிவர்த்தனைகள் அனைவரும் பார்க்கும் வெளிப்படைத்தன்மை கொண்டவை. இதை பின்பற்றியிருந்தால் பல மோசடிகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட முடியும்.

பொதுவாக நிறுவனங்கள் எவ்வளவு தொகைக்கு பொருள்களை இறக்குமதி செய்கிறார்களோ அதே அளவிலான தொகையை அல்லது சற்று கூடுதலான தொகையை வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும். உதாரணமாக ரூ. 100 கோடிக்கு உறுதியளிப்பு கடிதம் தேவையெனில் அந்நிறுவனம் ரூ. 110 கோடியை வங்கியில் செலுத்தியிருக்க வேண்டும். அப்போதுதான் வங்கி இதுபோன்ற உறுதியளிப்பு கடிதத்தை (எல்ஓயு) அளிக்கும். இதுபோன்ற கடிதம் அளிக்கும் வங்கிக் கிளைகள் அதுபற்றிய விவரத்தை தங்களது தலைமையகத்துக்கு தெரிவிக்க வேண்டும்.

ஆனால் இதுபோன்ற கடிதத்தை 2010-ம் ஆண்டிலிருந்து பெற்று வந்த நீரவ் மோடி நிறுவனம், பஞ்சாப் நேஷனல் வங்கியில் அதற்கான தொகையை டெபாசிட் செய்திருக்கவில்லை. வங்கியின் கிளை மேலாளர் கோகுல்நாத் ஷெட்டி தலைமையகத்துக்கு தெரிவிக்காமல், கடித நகல் எதையும் வங்கி ஆவணங்களில் வைக்காமல் வழங்கியுள்ளார். ஸ்விப்ட் முறையில் உள்ள சங்கேத குறியீடுகளை அழித்துவிட்டு அதை அளித்துள்ளார். பணியிலிருந்து அவர் கடந்த ஜனவரி மாதம் ஓய்வு பெற்றார்.

இந்தக் கிளையில் பணியிலிருந்த 7 ஆண்டுகளும் அவர் கையாண்ட ஒரே கணக்கு நீரவ் மோடியுடையது மட்டுமே என்பது இன்னும் அதிர்ச்சியான விஷயமாகும்.

பொதுவாக ஒரு குறிப்பிட்ட பொறுப்பில் இருப்பவர் சுழற்சி அடிப்படையில் 6 மாதத்துக்கு ஒரு முறை வேறு கிளைக்கோ அல்லது வேறு பொறுப்புகளுக்கோ மாற்றப்படுவார். ஆனால் கோகுல்நாத் ஷெட்டி தொடர்ந்து அதே பொறுப்பில் இருந்தது புரியாத புதிராக உள்ளது.

ஜனவரி மாதம் இதுபோன்ற கடித்ததை அளிக்குமாறு நிறுவனம் கோரியது. அப்போது கிளையின் மேலாளராக பொறுப்பேற்றிருந்தவர், பணம் டெபாசிட் செய்யாமல் உறுதியளிப்பு கடிதம் வழங்க விதிமுறையில் இடமில்லை என்று கூறினார். ஆனால் இதுபோன்று கடந்த காலங்களில் கடிதம் பெற்றிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்தது. இது தொடர்பாக ஆய்வு செய்தபோது மோசடி வெளியே வந்தது.

இதைத் தொடர்ந்து இதுபோன்று கடிதம் வழங்கப்பட்டு ரூ. 11.500 கோடி அளவுக்கு நிதிமோசடி நடந்திருக்கலாம் என வங்கி நிர்வாகம் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையிடம் புகார் செய்தது.

புதிய மேலாளர் வந்ததால் மட்டுமே 7 ஆண்டுகளாக நடந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பொதுவாக தொழில் புரிபவர்கள் அவரவர்கள் தொழில் நிலைமைக்கேற்ப வங்கிகளில் கடன் பெறுவது, ஓவர் டிராஃப்ட் பெறுவது போன்ற நடவடிக்கை இயல்பானவை. குறைந்த வட்டியில் வங்கியில் கடன் பெற்று தொழில் நடத்தி அதை திரும்ப செலுத்தும் நடைமுறையைத்தான் பெரும்பாலான நிறுவனங்கள், அது சிறு தொழில் நிறுவனங்களும் செய்யும்.

ஆனால் வங்கியில் கடன் பெறாமல், வங்கியிலிருந்து ஒப்புதல் கடிதம் பெற்று தொழிலை நடத்தத் திட்டமிட்டதிலிருந்தே நீரவ் மோடியின் திட்டமிட்ட மோசடி புலனாகிறது. இதற்கு வங்கி அதிகாரிகள் உடந்தையாக இருந்தது வேதனையளிக்கும் விஷயம். தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில் அதிலுள்ள நுட்பமான குறையைப் பயன்படுத்தி மோசடி செய்துள்ளது வங்கி செயல்பாடுகளின் நம்பகத் தன்மையை சீர்குலைத்துள்ளது.

பிற வங்கிகளுக்கு எப்படி பாதிப்பு?

வெளிநாடுகளில் வங்கிக் கிளைகளை வைத்துள்ள வங்கிகள் பஞ்சாப் நேஷனல் வங்கி அளித்துள்ள ஒப்புதல் கடிதத்தின் அடிப்படையில் நீரவ் மோடி நிறுவனத்துக்கு கடன் வழங்கியுள்ளன. ஏறக்குறைய 10 வங்கிகள் இதில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அலாகாபாத் வங்கி (ரூ. 2,000 கோடி), ஆக்ஸிஸ் வங்கி (ரூ. 2,000 கோடி), யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா (ரூ. 23 கோடி), பாரத ஸ்டேட் வங்கி (ரூ. 960 கோடி), பாங்க் ஆப் இந்தியா (ரூ. 1,015 கோடி), கனரா வங்கி ரூ. 1,015 கோடி) என்ற அளவுக்கு கடன் வழங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு இது தொடர்பாக புகார் மனு அளித்துள்ள போதிலும் இந்த விவகாரம் தொடர்பாக நிர்வாக ரீதியில் விசாரணை நடத்தப்படும் என்றும், பாதிக்கப்பட்ட வங்கிகளுக்கு உரிய தொகை வழங்கப்படும் என்றும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சுநீல் மேத்தா தெரிவித்துள்ளார்.

தாராளமயமாக்கலும் வங்கி மோசடிகளும்

1991-ம் ஆண்டுக்குப் பிறகு தாராளமயமாக்கல் கொள்கையால் இந்தியாவின் வங்கித் துறை அபரிமித வளர்ச்சியை அடைந்தது. அதே அளவுக்கு வங்கிகளில் மோசடிகளும் அதிகரித்துள்ளன. வங்கிகளின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் உயரிய அமைப்பான ரிசர்வ் வங்கி, “வேண்டுமென்ற விடுபட்ட ஒரு செயல் அல்லது கமிஷன் பெற்று நிறைவேற்றப்படும் செயல், வங்கி பரிவர்த்தனையில் அல்லது வங்கி கணக்கு பதிவில் கையினாலோ அல்லது கம்ப்யூட்டர் பதிவுகளிலோ, சுய லாபமடைவதற்காக திருத்தம் செய்வது மோசடி,’’ என்று குறிப்பிட்டுள்ளது.

2013-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரையான காலத்தில் வங்கிகளில் நிகழ்ந்த மோசடியால் ஏற்பட்ட நஷ்டம் ரூ. 22,743 கோடி. மோசடிகளைக் குறைக்க ரிசர்வ் வங்கி கடுமையான நடவடிக்கைகளை எடுத்த போதிலும் வங்கிகளில் இடைநிலை, கடைநிலை பணியாளர்கள் செய்யும் மோசடிகளுக்கு இணையாக முதுநிலையில் பொறுப்பில் உள்ளவர்களே மோசடி செய்வது அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

மோசடிகள் பல வகை…

வங்கிகளில் பல வகையிலும் மோசடிகள் நடைபெறுகின்றன. திருட்டு முயற்சி மோசடி 6.6%, கண்டறியப்பட்ட திருட்டு மோசடி 18.5%, ஊழியர்கள் சார்ந்த மோசடி 5.4%, போன் உள்ளிட்ட பிற வழிகளில் நடைபெறும் மோசடி 9.7%, அரசு ஆவணம் மற்றும் அரசு சலுகை சார்ந்த மோசடி 46.4%, கடன் சார்ந்த மோசடி 2.4%, வங்கி மோசடி 6.4%, கடன் அட்டை சார்ந்த மோசடி 13.5% என வங்கிகளில் பல விதங்களில் மோசடிகள் நடந்து கொண்டுதானிருக்கின்றன.

கடந்த 10 ஆண்டுகளில் சைபர் கிரைம் எனப்படும் இணைய வழி மோசடிகள் வங்கிகளில் அதிகரித்துள்ளன. 2004-ம் ஆண்டு 23 வழக்குகளாக இருந்த இந்த எண்ணிக்கை 2014-ம் ஆண்டில் 72 ஆயிரம் வழக்குகளாக உயர்ந்துள்ளன.

தணிக்கை நடக்கிறதா?

வங்கிகளின் செயல்பாடுகளை ஆராய ஒவ்வொரு வங்கியிலும் தணிக்கை குழு உண்டு. இது தவிர தனியார் நிறுவனங்களும் சுயேச்சை தணிக்கைக்கு பணி அமர்த்தப்படுகின்றன. ஆனால் வங்கி மோசடிகள் எவ்விதம் தணிக்கையிலிருந்து தப்புகின்றன என்பது மர்மமாகவே உள்ளது.

தனியார் வங்கிகள் தொழில்நுட்பத்தில் முன்னோடியாகத் திகழ்கின்றன. ஆனால் பொதுத்துறை வங்கிகள் இதில் இன்னமும் பின்தங்கியிருக்கின்றன.

ஒரு வங்கி திவாலானால் அந்த வங்கியில் பொதுமக்கள் வைத்துள்ள சேமிப்புத் தொகையை பயன்படுத்தி வங்கியை மீட்கலாம் என்ற உத்தரவு மக்களை கலங்கடித்துக்கொண்டிருக்கிறது. வங்கிகளில் பொதுமக்களின் சேமிப்புத் தொகை மட்டுமே ரூ. 110 லட்சம் கோடி என்ற அளவில் உள்ளது.

வங்கிகளின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து ஒரே நாளில் அனைத்து வங்கிகளிலும் தாங்கள் போட்டுள்ள சேமிப்பை திரும்பப் பெற முயன்றால் அனைத்து வங்கிகளுமே திவாலாகிவிடும். வங்கிகளின் செயல்பாடு அந்த நிலைக்கு மக்களைத் தள்ளிவிடுமோ என்ற அச்சம் பரவலாக மேலோங்கியுள்ளது.

யார் இந்த நீரவ் மோடி?

“சோட்டா’’ மோடி என தொழில்துறையினர் வட்டாரத்தில் பிரபலமான நீரவ் மோடி பிரபல வைர வியாபாரி. பெல்ஜியத்தில் வளர்ந்தவர். வார்ட்டன் வணிகவியல் கல்வி மையத்தில் படிப்பை பாதியில் விட்டவர். மாமாவிடம் வைர நகை தொழில் நுணுக்கங்களைக் கற்று 2010-ல் ஃபயர்ஸ்டார் டயமண்ட் என்ற நிறுவனத்தை உருவாக்கியவர்.

நீரவ் பிராண்ட் என்ற பெயரில் 16 இடங்களில் விற்பனையகத்தை அமைத்துள்ளார். நியூயார்க், லண்டன், ஹாங்காங், சிங்கப்பூர், பீஜிங், மக்காவ் ஆகிய வெளிநாட்டு விற்பனையகங்களும் இதில் அடங்கும். 47 வயதாகும் நீரவ் இந்தியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் 85-வது இடத்தில் உள்ளார்.

கடந்த ஆண்டில் இவரது சொத்து மதிப்பு ரூ. 1,234 கோடி பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராதான் நீரவ் பிராண்ட் ஆபரணங்களுக்கு விளம்பர தூதர். 2016-ம் ஆண்டு ஆஸ்கர் விருது விழாவில் காதே வின்ஸ்லெட் அணிந்திருந்த நகை இவரது நிறுவனம் வடிவமைத்ததாகும். லிசா ஹைடன், அனுஷ்கா சர்மா, தீபிகா படுகோன், மீரா கபூர், சோனம் கபூர், டகோடா ஜான்சன், ஜாக்குலின் பெர்னாண்டஸ், ஷ்ரத்தா கபூர், நிம்ரத் கௌர் உள்ளிட்ட பிரபலங்களும் நீரவ் மோடி நகைகளை அணிந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளனர்.

பிரதமரின் நரேந்திர மோடியுடன் வெளிநாட்டு பயணங்களில் இடம்பெறும் தொழில்துறையினர் குழுவில் அதிக எண்ணிக்கையில் பறந்தவர் ‘சோட்டா’ மோடி.!

Thanks to Tamil.thehindu.com

Leave a Reply