ரூ.5.66 லட்சம் கோடிக்கு ஸ்பெக்ட்ரம் ஏலம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்துக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர்கள் (இடமிருந்து) ராம் விலாஸ் பாஸ்வான், நிதின் கட்கரி, ரவிசங்கர் பிரசாத்.
டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்துக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர்கள் (இடமிருந்து) ராம் விலாஸ் பாஸ்வான், நிதின் கட்கரி, ரவிசங்கர் பிரசாத்.
அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஏலத் துக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இதுவரை நடத்தப்பட்ட ஏலங்களை விட அதிக மதிப்புள்ளதாக இந்த ஏலம் அமை யும். இதன் மூலம் ரூ.5.66 லட்சம் கோடி கிடைக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஏலத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏலத்தில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 1-ம் தேதி வெளியாகும். இதைத் தொடர்ந்து ஏலம் கேட்பதற்கு முந்தைய ஆலோ சனைக் கூட்டம் ஜூலை 6-ம் தேதி நடத்தப்படும். இதற்கான ஏலம் செப் டம்பர் மாதம் 1-ம் தேதி நடத்தப்படும் என்று அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சகங்களுக்கு இடையி லான குழு, ஏலம் நடத்துவது தொடர் பான விதிகளை வகுத்துள்ளது. இதன்படி 700 மெகா ஹெர்ட்ஸ் அலைக் கற்றைக்கான குறைந்த பட்ச நிர்ணயிக்கபட்ட தொகை ஒரு மெகாஹெர்ட்ஸ் ரூ. 11,485 கோடி என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
2100 மெகா ஹெர்ட்ஸ் அலைக் கற்றை மூலம் அளிக்கப்படும் செல்போன் சேவைக்கு செலவாகும் தொகையைவிட 70 சதவீதம் இது குறைவாக இருக்கும். இது 3ஜி சேவைக்கு பயன்படுத்தப்படுகிறது.
இந்தியா முழுவதும் 700 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையில் சேவை அளிக்க விரும்பும் நிறுவனங் கள் இதற்காக குறைந்தபட்சம் ரூ. 57,425 கோடியை செலவிட வேண் டியிருக்கும். இதன் மூலம் 5 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை இந்தியா முழுவதும் முன்பதிவு செய்து வைக்க முடியும். இந்த அலைக்கற்றை ஏலம் மூலம் மட்டுமே ரூ. 4 லட்சம் கோடி கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2014-15-ம் நிதி ஆண்டின் ஒட்டுமொத்த தொலைத் தொடர்பு சேவைத்துறையின் வருமானம் ரூ. 2.54 லட்சம் கோடியாகும். ஆனால் அதைக் காட்டிலும் இரு மடங்கு அதாவது ரூ. 5.66 லட்சம் கோடிக்கு இம்முறை அலைக்கற்றை ஏலம் விடப்பட உள்ளது.
ஆனால் 700 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஏலம் தொடர்பாக முன்னணி செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்கள் மாறுபட்ட கருத்தைக் கொண்டுள்ளன. இந்த அளவுக்கு அதிக திறன் கொண்ட அலைக்கற்றை சேவையை அளிக்கும் அளவுக்கு இந்தியாவில் சூழல் மேம்படவில்லை என்று சிலர் கூறுகின்றனர். பல ஆண்டுகளாக ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முழு அளவில் பயன்படுத்தப்படாமல் உள்ளதாகவும், இத்துறையின் நிதி முடக்கப்பட்டுள்ளதாகவும் பலர் கருத்து கூறியுள்ளனர்.
ஏலத் தொகை செலுத்துவதில் கடுமையான விதிமுறைகளைக் கையாளுமாறு அமைச்சரவை குழு தெரிவித்துள்ளது. ஆனால் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) சிறிது விட்டுக் கொடுத்தல் நடவடிக்கைகளை பின்பற்றலாம் என்று தெரிவித்திருந்தது.
ஒரு ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் அதற்கு மேலான அலைக்கற்றை ஏலம் எடுக்கும் நிறுவனங்கள் ஏலத் தொகையில் 50 சதவீதத்தை உடனே செலுத்த வேண்டும். மீதித் தொகையை 10 ஆண்டுகளில் செலுத்தலாம். இதில் 2 ஆண்டுகள் சலுகைக் காலமாகும். முந்தைய ஏலங்களில் ஏலத் தொகையில் 33 சதவீதம் செலுத்தினால் போதும் என்றிருந்தது. ஆனால் தற்போது 50 சதவீதம் செலுத்த வேண்டும் என விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளது.
ஒரு ஜிகாஹெர்ட்ஸுக்கும் குறைவான 700 மெகா ஹெர்ட்ஸ், 800 மெகா ஹெர்ட்ஸ், 900 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை ஏலம் எடுக்கும் நிறுவனங்கள் ஏலத் தொகையில் 25 சதவீதம் உடனடியாக செலுத்த வேண்டும். மீதித் தொகையை 10 ஆண்டுகளில் செலுத்த வேண்டும். 2 ஆண்டுகள் சலுகைக் காலமாகும்.