ரெடிமேட் வீடுகள் அதிகரிக்குமா?

ரெடிமேட் வீடுகள் அதிகரிக்குமா?

homeசென்னை வேளச்சேரி பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெரிய நிலப்பரப்பில் கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது. அஸ்திவாரம் பிரம்மாண்டமாகத் தோண்டப்பட்டிருந்தது. அடுத்து ஒரு மாதம் காலம்தான் இருக்கும். அதற்குள் கட்டிடத்தில் 4 மாடிகளைக் கட்டி முடித்துவிட்டார்கள். விசாரித்தபோதுதான் தெரிந்தது, ரெடிமேட் கட்டிடமாக அந்தப் பிரம்மாண்ட கட்டிடம் உருவாகி வருவது தெரியவந்தது. அடுத்த ஒரு மாதத்துக்குள் திறப்பு விழாவே நடத்தி முடித்துவிட்டார்கள். ரெடிமேட் ஆடைகள், ரெடிமேட் உணவுகள் போல இப்போது ரெடிமேட் கட்டிடங்களும் வந்துவிட்டன.

இந்தியாவுக்குள் அண்மைக் காலங்களில் வந்த ஒரு வடிவமைப்பு பாணிதான் ரெடிமேட் கட்டிடங்கள். ஆனால். மேலை நாடுகளில் இது சகஜமான வடிவமைப்பு பாணி. மக்கள்தொகைப் பெருக்கம், நகரப் பகுதிகளில் ஏற்படும் இட நெருக்கடி, நிலத்தின் மதிப்பு உயர்வு போன்ற பல காரணங்களால், ரெடிமேட் வீடுகளுக்கு மேலை நாடுகளில் வரவேற்பு கொஞ்சம் அதிகம். சுவர்கள், ஜன்னல்கள், சமையலறை, குடிநீர் குழாய் மற்றும் மின்சார இணைப்புகள் என அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு தொழிற்சாலைகளில் வடிவமைக்கப்படுகின்றன. இதன்பின்னர், அவற்றைக் கட்டுமானப் பகுதிக்குக் கொண்டுவந்து, இயந்திரத்தின் பாகங்களை ஒன்றிணைத்து உருவாக்குவது போல் வீட்டை உருவாக்குவதுதான் ரெடிமேட் வீடுகளின் (Pre Fabricated Houses) பின்னணி.

இந்த ரெடிமேட் வீடுகளை எப்படிக் கட்டுகிறார்கள்? காலியாக இருக்கும் ஒரு இடத்தில், சதுரமான இடத்தைத் தேர்வு செய்து அதன் 4 முனைகளிலும், சிறிய பள்ளம் தோண்டி, அஸ்திவாரம் அமைப்பார்கள். பின்னர் அதில் ரெடிமேட் வீடுகளின் எடையை தாங்கக் கூடிய அளவுக்கு, தரையிலிருந்து மிகக் குறைந்த உயரத்துக்கு ரெடிமேட் தூண்களை அமைக்கிறார்கள். அதன் மீது தரைத் தளத்தை உருவாக்குவார்கள். இதன் நீளம் மற்றும் அகலம் அனைத்தும் வீடு வாங்குபவரின் விருப்பத்துக்கும், செலவு செய்யும் சக்திக்கும் ஏற்ப தீர்மானிக்கப்படும். பின்னர் சுவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் ஸ்டீல் ராடுகளை ஒருங்கிணைத்து, வலுவான அமைப்பை ஏற்படுத்தி அதில் பிளாஸ்டர் போர்டுகளை நிரப்பி, வலுவான சுவரை உருவாக்குகிறார்கள். மேற்கூரை அமைப்பதற்காகத் தொழிற்சாலைகளில் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட வலுவான பிளாஸ்டிக் தகடுகளைப் பயன்படுத்துகிறார்கள்.

பொதுவாக ரெடிமேட் வீட்டை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்துமே, சிமெண்ட், செங்கல், மணலைவிட அதிக செலவு பிடிக்கும் விஷயங்கள்தான். இன்று வீடு கட்டுவதில் பெரும் செலவு கட்டுமானத் தொழிலார்களுக்கு வழங்கப்படும் ஊதியத்துக்காகச் செலவிடப்படுகிறது. பருவ நிலை, பண்டிகைகள் காலங்களில் வீடு கட்டும் பணி பாதிக்கப்பட்டு, வேலை இழுத்துச்செல்லலாம். ஆனால், கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், கட்டி முடிப்பதற்கான காலக்கெடு மிகவும் குறைவாக இருப்பதால் இந்தப் பாணியிலாலன கட்டிடங்களை எழுப்ப பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். குறிப்பாக வர்த்தக நிறுவங்கள், ஷாப்பிங் மால்கள், பிரம்மாண்டமான அடுக்குமாடிகள் போன்றவை இந்தப் பாணியில் கட்டப்படுகின்றன.

மேலை நாடுகளில் ரெடிமேட் கட்டிடங்களைப் பற்றி இப்படி நேர்மறையாகக் கூறப்படுகின்றன. இந்தியாவில் இப்போதுதான் அங்கொன்றும் இங்கொன்றுமாக இந்தப் பாணியில் கட்டிடங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. அதற்கு முக்கியக் காரணம், கலாச்சார ரீதியாக வீடுகளை இப்படி எழுப்ப இந்தியர்கள் யோசிக்கிறார்கள். இரண்டாவது எச்சரிக்கை உணர்வு. ஓராண்டு பார்த்துப்பார்த்து பாதுகாப்பாகக் கட்டப்படும் கட்டிடங்ளே சில சமயம் சிக்கலாக்கிவிடுகின்றன. இரண்டு மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும் ரெடிமேட் கட்டிடங்களின் பாதுகாப்பின் மேல் சந்தேகமும் இருக்கிறது என்று சொல்கிறார்கள் கட்டுமானத் துறையில் உள்ளவர்கள்.

மேலை நாடுகளில் பாரம்பரியமாகவும் கலை நயத்துடனும் கட்டப்பட்டு வந்த கட்டிடங்களுக்கு மாற்றாக ரெடிமேட் கட்டிடங்கள் அல்லது வீடுகள் பார்க்கப்படுகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, வீடு என்பது தலைமுறைகளைத் தாண்டி மனிதர்களுடன் ஒன்று கலந்துவிட்ட ஒரு தொடர்பு வீடுகள். பாரம்பரியமாகவும் கலாச்சாரத்துடன் ஒத்துப்போகக்கூடிய வீடுகளையே பெரும்பாலும் இந்தியர்கள் விரும்புகிறார்கள். ஆனால், விரைவான நகரமயமாக்கல் மற்றும் நகரத்தை நோக்கி இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பது, நுகர்வு கலாச்சாரம் பெருக்கம் போன்ற காரணங்களால், இன்னும் சில ஆண்டுகளில் அந்த நிலை மாறலாம். வீட்டுத் தேவை அதிகமுள்ள இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அந்தத் தேவையை விரைவாகப் பூர்த்தி செய்ய ரெடிமேட் வீடுகள் நல்ல தீர்வாகவும், மாற்றாகவும் அமையலாம் என்ற கருத்துகளும் ரியல் எஸ்டேட் துறையில் எதிரொலிக்கின்றன.

முன்பு, ஜன்னல், கதவு போன்றவற்றை வீட்டின் உரிமையாளரே தச்சர்களைக் கொண்டு தயாரித்த காலம் மாறி இன்று அனைத்துமே தயார் நிலையில், கடைகளில் கிடைக்கின்றன. சமையலறைக் கட்டுமானம் மாடுலர் கிச்சன் என்ற வரையறையை எட்டிப்பிடித்துள்ளது. அந்த வகையில், ரெடிமேட் வீடுகளும் விரைவில் பிரபலமடையும் எனக் கட்டுமானத்துறையினர் நம்புகின்றனர். எதிர்காலத்தில் ரெடிமேட் வீடுகள் அல்லது கட்டிடங்கள் வீதிகளையும் சாலைகளையும் அதிக அளவில் அலகரிக்கலாம்.

Leave a Reply