ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க புதிய நிபந்தனை: பொதுமக்கள் அதிர்ச்சி
ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்கள் வாங்கும்போது கைவிரல் ரேகை கட்டாயம் என்பது குறித்து தமிழக உணவு வழங்கல்துறை பரிசீலனை செய்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்கள் வாங்க அரசு சார்பில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இந்த கார்டை வைத்து கொண்டு ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கினால், அங்குள்ள எலக்ட்ரானிக் கருவி மூலம் பொதுமக்கள் விவரம் மற்றும் வாங்கிய பொருட்கள் ஆகியவை பதிவேட்டில் ஏற்றப்பட்டு விடும்.
இதையடுத்து சம்பந்தப்பட்டவரின் செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்துவிடும். இந்நிலையில் உணவுப் பொருட்கள் வாங்காத நிலையிலும், தங்கள் செல்போனுக்கு குறுந்தகவல் வருவதாக புகார்கள் வந்து கொண்டிருக்கின்றாது.
ஆனால் அதிகாரிகளால் முறைகேடு குறித்து ஆதாரங்கள் திரட்ட இயலவில்லை. இந்த நிலையில் கார்டு உரிமையாளர்கள் நேரடியாக ரேஷன் கடைக்கு வந்து கைவிரல் ரேகை பதித்தால் தான் உணவுப் பொருள் வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த உணவு வழங்கல்துறை பரிசீலனை செய்து வருவதாக அதிகாரிகள் கூறினர்.
இதற்காக தனியார் நிறுவனங்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும் பொருட்கள் வாங்கியதற்கு எலக்ட்ரானிக் இயந்திரம் மூலம் ரசீது கொடுக்கும் முறையைக் கொண்டு வரவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையில் கோவையில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. நடப்பாண்டில் மட்டும் 110 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.