ரோபோட் ஆடை அணிந்து தேன் எடுக்கும் மாணவர்கள்:

ரோபோட் ஆடை அணிந்து தேன் எடுக்கும் மாணவர்கள்:

மதுரை வேளாண்மை கல்லூரியில் தேனீக்கள் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், தற்போது தேனீக்களுக்கும், அவை கட்டிய கூடுகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் ரோபோட் ஆடை அணிந்து நவீன முறையில் தேன் எடுத்து விற்பனையைத் தொடங்கி உள்ளனர்.

தேனீக்கள் வளர்ப்பு காடுகளில் பழங்குடியினருக்கான தொழிலாக முன்பு பார்க்கப்பட்டது. தற்போது தேனுக்கு ஏற்பட்டுள்ள வரவேற்பால் நகரங்கள், கிராமங்களில் வசிக்கும் தொழில் முனைவோருக்கான பிரதான தொழிலாகி வருகிறது. ஆனால், விவசாயத்தில் இரட்டிப்பு மகசூலுக்கு ஊக்கி காரணியாக இருக்கும் தேனீக்களை வளர்க்க விவசாயிகள் ஆர்வம் இல்லாமல் உள்ளனர். அதற்கான விழிப்புணர்வும் இல்லை. அதனால், மதுரை வேளாண்மை கல்லூரி பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் சுரேஷ் தலைமையில் மாணவ, மாணவிகள் அங்குள்ள தோட்டக் கலை பண்ணையில் மலைத்தேனீ, இந்திய தேனீ, இத்தாலிய தேனீ, கொசு தேனீ, கொம்பு தேனீக்களை கடந்த மூன்று மாதங்களுக்கு முன் பரிசோதனை முறையில் வளர்க்க ஆரம்பித்தனர்.

ரோபட் கோட்

தற்போது அந்த தேனீக்கள் கூடு கட்டி, தேனை சேகரித்துள்ளன. இந்த தேனை சேகரிக்க, கல்லூரி மாணவர்கள் தேனீக்களுக்கும், அவை கட்டும் தேன் கூட்டுக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க ரோபோட் கோட் அணிந்து நவீன முறையில் தேன் எடுக்கிறார்கள். இவர்கள் தேனீக்களை வளர்க்க ஆரம்பித்த பிறகு, வேளாண் கல்லூரி வளாகத்தில் பயிர் மகசூலும் உயர்ந்துள்ளது. வெளியே தொழில் முறையாக வளர்த்து விற்போர் ஒரு கிலோ தேனை 500 ரூபாய், 600 ரூபாய்க்கு கொடுக்கின்றனர். ஆனால், வேளாண் கல்லூரியில் இவர்கள் தேனை கிலோ ரூ. 400-க்கு விற்கின்றனர். இவர்கள் விற்பது சுத்தமான தேன் என்பதால் சுற்றுவட்டார மக்கள், தேன் கேட்டு கல்லூரியில் மொய்க்க தொடங்கி விட்டனர்.

எந்திரம் மூலம் பிரித்தெடுக்கப்படும் தேன்.

பொதுமக்களுக்கு விற்பனை
ஆனால், தற்போது கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்களுக்கு மட்டும் விற்கின்றனர். 2-ம் கட்டமாக, கல்லூரி வளாகம் முழுவதும் தேனீ வளர்க்கத் திட்டமிட்டுள்ளனர். அதன்பிறகு, தொழில் முறையாக மக்களுக்கும் தேனை விற்க உள்ளதாக பூச்சியியல் உதவி பேராசிரியர் சுரேஷ் தெரிவித்தார்.

10 கிலோ தேன் எடுக்கலாம்

அவர் கூறியதாவது: மலைத்தேனீக்களை வளர்ப்பது கடினம். ஆனால், கல்லூரி வளாகத்தில் இயற்கையாகவே பாறை இடுக்குகளில் மலைத் தேனீக்கள் வளருகின்றன. அவற்றை கலைந்து போகவிடாமல் பாதுகாக்கிறோம். விவசாயிகள் தோட்டங்கள் உள்ள இடங்களில் பகுதி நேரமாக தேனீ வளர்க்கலாம். அவை மகரந்த சேர்க்கையை அதிகரித்து மகசூலை அதிகரிக்க உதவும்.

பூக்கள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் 60 நாட்கள் முதல் 3 மாதங்களுக்கு ஒருமுறை 10 கிலோ தேன் எடுக்கலாம். பூக்கள் குறையும்போது சேகரிக்கும் தேனை, தங்கள் தேவைக்கு தேனீக்கள் பயன்படுத்தி விடும். கூடுகளில் சேமிக்காது.

தேன் கூடுகளில் ஈக்களை கலைக்க புகை மூட்டுவார்கள். இதில் தேனீக்கள் இக்க வாய்ப்புள்ளது. மேலும், தேனும் புகை வாடை அடிக்கும். அந்த மணம் வந்தால் வாடிக்கையாளர்கள் விரும்ப மாட்டார்கள். அதனால், நாங்கள் ‘பி வெயில்’ (b.veil) என்ற ரோபோட் ஆடை அணிந்து தேன் எடுக்கிறோம். இதில் தேனீக்கள் சாகாது. மீண்டும் தேனை எடுத்து வந்து கூட்டில் சேகரிக்கும்.

விவசாயிகளுக்கும், எதிர்கால விவசாய அதிகாரிகளாகவும், தொழில் முனைவோராகவும் செல்ல வாய்ப்புள்ள இங்கு படிக்கும் மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த தேனீக்கள் வளர்ப்பை கல்லூரி வளாகத்தில் தொடங்கி உள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply