பெர்த் போட்டியின் மறு ஒளிபரப்பு போல் மீண்டும் ஆஸ்திரேலிய வெற்றியில் முடிந்தது பிரிஸ்பனில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டி. மீண்டும் ரோஹித் சதம், மீண்டும் சொதப்பலான பந்து வீச்சு, மீண்டும் செயலூக்கம் அற்ற கேப்டன்சி, மீண்டும் ஆஸ்திரேலியா வெற்றி.
ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அனைத்து வடிவங்களிலும் கடைசியாக விளையாடிய 10 போட்டிகளில் இந்தியா இன்னமும் வெற்றி பெறவில்லை.
இந்தியா 330 ரன்களை எடுத்திருக்க வேண்டும் ஆனால் 308 ரன்களையே எடுக்க ஆஸ்திரேலியா 49 ஓவர்களில் 309/3 என்று 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதாவது அயல்நாடுகளில் இந்திய பந்து வீச்சு மிகவும் சொத்தையாக உள்ளது என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்ட ஒன்றானது. அதாவது ஆஸ்திரேலிய பவுலர்கள் முதல் போட்டியில் செய்த தவற்றை அடுத்த போட்டியில் திருத்தி கொள்கின்றனர், ஆனால் இந்திய பவுலர்கள் எவ்வளவு அடி வாங்கினாலும் பந்து வீச்சை மாற்றுவதில்லை, லெக் திசையில் வீசுவது, ஷார்ட் பிட்ச் பந்துகளை பேட்ஸ்மென்களுக்கு அடிக்க வாகாக வீசுவது என்று எதிலும் மாற்றமில்லை. வீச்சாளர்கள் மாறலாம் ஆனால் வீச்சு மாறுவதில்லை என்பது இந்திய பந்துவீச்சின் அயல்நாட்டு மகாவாக்கியமாகவே மாறிவிட்டது.
அதே போல் எதிரணி பேட்ஸ்மென்கள் கூட்டு சேர்ந்து அடித்து நொறுக்கும் போது தோனி செயலூக்கமற்ற கேப்டன்சி முறையை கையாள்கிறார். அவர் தரப்பிலிருந்து எந்த ஒரு முயற்சியும் எடுக்கப்படுவதில்லை. அதாவது 309, 310 ரன்கள் இலக்கை மற்ற கேப்டன்கள் இவ்வளவு சுலபமாக எடுக்க அனுமதிக்க மாட்டார்கள் என்பதே சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டன்சி என்பது. தோனியின் செயலூக்கமற்ற கேப்டன்சிக்கு இந்தப் போட்டியின் எளிய உதாரணமாக ஒன்றைச் சுட்டலாம், அஸ்வின் 10 ஓவர்களில் 60 ரன்கள் கொடுத்தார். இதில் 3 பவுண்டரிகளே அடிக்கப்பட்டன. மீதி 48 ரன்கள் வெறும் ஒன்று, இரண்டு என்று எடுக்கப்பட்டுள்ளது என்றால் களவியூகத்தை ஊகிக்க முடிகிறது. அதே போல் ஜடேஜா 50 ரன்களை விட்டுக் கொடுத்ததில் 4 பவுண்டரிகள்தான் வந்துள்ளது. மீதி 34 ரன்கள் ஒன்று, இரண்டு என்றே வந்துள்ளது.
மொத்தமாக ஆஸ்திரேலிய இன்னிங்ஸில் 309 ரன்களில் 104 ரன்களே பவுண்டரி மற்றும் சிக்சர்; மீதி 205 ரன்கள் ஒன்று, இரண்டு என்று எடுக்கப்பட்டது என்றால் களவியூகம் அவர்கள் எளிதில் ரன் எடுக்க எவ்வளவு சாதகமாக இருந்தது என்பதையும் தோனியின் கற்பனை வளமற்ற வறட்டு கேப்டன்சியையும் பிரதிபலிக்கிறது. உடனே இந்தியா பேட் செய்யும் போது இது நடந்தது என்று கூறுவது பொருந்தாது, ஏனெனில் முதலில் பேட் செய்யும் அணியை பெரிய இலக்குகளை எட்டவிடக்கூடாது என்பதற்காக களவியூகத்தை தளர்வாக அமைத்து பவுண்டரி, சிக்சர்களை குறைக்கும் உத்தியாகும் அது. ஆனால் 309 ரன்கள் இலக்கை துரத்தும் போது 6 பந்துகளில் ரன் வரவில்லையெனில் அது எதிரணியினருக்கு நெருக்கடியை அதிகரிக்கும் அப்போதுதான் வித்தியாசமாக ஏதாவது செய்ய முயற்சி செய்வார்கள், நமக்கும் விக்கெட் வாய்ப்புகள் கிட்டும். ஆனால் விக்கெட்டுகளை வீழ்த்தும் எந்த வித உத்தியும் நம் கேப்டனிடம் இல்லாததால்தான் வங்கதேசத்திலிருந்து தொடங்கி, பிறகு டிவில்லியர்ஸ் சாத்துமுறையில் தென் ஆப்பிரிக்கா தற்போது ஆஸ்திரேலியா என்று உதை மேல் உதை வாங்கிக் கொண்டிருக்கிறது இந்திய அணி.
மைக்கேல் கிளார்க், ரிக்கி பாண்டிங், பிரெண்டன் மெக்கல்லம் ஆகியோரது கேப்டன்சியில் நாம் இத்தகைய தளர்வான போக்கைக் காண்பது அரிதிலும் அரிது.
எளிதாகிப் போன விரட்டல்:
பெர்த் போட்டியில் 21/2 என்ற பிறகு 310 ரன்கள் விரட்டப்பட்டது, ஆனால் பிரிஸ்பனில் தொடக்க வீரர்கள் ஏரோன் பிஞ்ச், ஷான் மார்ஷ் இணைந்து 145 ரன்களை 25 ஓவர்களில் எடுத்தனர். ஷான் மார்ஷ் 19 ரன்களில் இருந்த போது இசாந்த் சர்மா எளிதான கேட்சை கோட்டை விட்டார், ரன் அவுட் வாய்ப்பும் தவற விடப்பட்டது.
ஸரண் முதல் ஓவரிலேயே 2 பவுண்டரிகளை விட்டுக் கொடுத்தார். ஆனால் அதன் பிறகு கொஞ்சம் இறுக்கியதால் ஆஸ்திரேலியா 10 ஓவர்களில் 40 ரன்களையே எட்டியிருந்தது. 13-வது ஓவரில்தான் ஜடேஜா பந்தில் இசாந்த் சர்மா ஷான் மார்ஷ் கொடுத்த எளிதான கேட்சை லாங் ஆனில் கோட்டை விட்டார், ரசிகர்கள் கேலி ஒலி எழுப்பினர். பிறகு உமேஷ் யாதவ் கடுமையாக வாங்கிக் கட்டிக் கொண்டார். பிஞ்ச் ஒரே ஓவரில் 2 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 16 ரன்கள் விளாசினார். பிறகு ஜடேஜாவையும் இரண்டு பவுண்டரிகள் விளாசினார். 24-வது ஓவரில் மார்ஷ், யாதவ்வை புல் ஆட அது டீப்பில் ஸரணிடம் சென்றது, ஸரண் ஓடி வந்து டைவ் அடித்துப் பார்த்தார் ஆனால் கேட்ச் கையில் பட்டு சிதறியது, ஆனால் இது ஒரு அருமையான முயற்சி.
கடைசியில் 81 பந்துகளில் 7 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 71 ரன்கள் எடுத்த பிஞ்ச், ஜடேஜா பந்தை தூக்கி அடித்து லாங் ஆஃபில் ரஹானே கேட்சுக்கு பெவிலியன் திரும்பினார். மார்ஷ் தனது 67 ரன்களில் இருந்த போது இசாந்த் பந்தில் எட்ஜ் செய்ய மணீஷ் பாண்டே கேட்சை விட்டார், காரணம் அவர் சரியான ஸ்லிப் நிலையில் இல்லை. தள்ளி நின்றதால் கேட்ச் நழுவ விடப்பட்டது. ஆனால் அதன் பிறகு மார்ஷ் நீண்ட நேரம் நீடிக்கவில்லை இசாந்த் பந்த் ஒன்று கொஞ்சம் கூடுதலாக பவுன்ஸ் ஆக லெக் திசையில் திருப்ப முயன்ற மார்ஷ் மட்டையின் வெளிவிளிம்பில் பட்டு கோலியிடம் ஆஃப் திசையில் கேட்ச் ஆனது. மார்ஷ் 84 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு ஸ்மித் மீண்டும் ஒரு அலட்சியமாக 47 ரன்களை எடுத்து உமேஷ் பந்தை ஒதுங்கிக் கொண்டு அடிக்க முயன்று பவுல்டு ஆனார். ஆனால் ஸ்கோர் 41-வது ஓவர் முடிவில் 244 ரன்கள் என்று இருந்தது.
ஜார்ஜ் பெய்லி மீண்டும் அதிரடியாக ஆடி 58 பந்துகளில் 6 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 76 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ்ந்தார். மேக்ஸ்வெல் 26 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ 49 ஓவர்களில் 309/3 என்று ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
ஆட்ட நாயகனாக ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டதே இந்திய அணிக்கு ஒரே ஆறுதல். இந்திய அணியில் இசாந்த் சர்மா 10 ஓவர்களில் 60 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார். யாதவ், ஜடேஜா தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். யாதவ் 10 ஓவர்களில் 74 ரன்கள் வாங்கிக் கட்டிக் கொண்டார். ஸரண் 9 ஓவர்களில் 51 ரன்கள் விட்டுக் கொடுத்தார். மொத்தம் 11 வைடுகள் வீசப்பட்டது. நெருக்கடி கொடுக்க வேண்டிய தருணங்களில் வைடுகள் வீசப்பட்டது.
அடுத்த போட்டி மெல்பர்னில் நடைபெறுகிறது. அதில் இந்திய அணியின் அணுகுமுறையில் மாற்றம் வருமா என்பதை பார்க்க வேண்டும்.