இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு பொலிவியா நாட்டின் அமைதி மற்றும் ஜனநாயகத்துக்கான உயரிய விருது வழங்கப்பட இருப்பதை அறிந்து, தமிழ் அமைப்புகள் தங்களது எதிர்ப்பை பொலிவியா அரசுக்கு கோரிக்கையாக அனுப்ப முடிவு செய்துள்ளது.
ஜூன் 14 மற்றும் 15 தேதிகளில் தென் அமெரிக்காவில் உள்ள சாண்டாக்ரூஸ் நகரில் ‘G77’ நாடுகளின் உச்சி மாநாடு வெகு சிறப்பாக நடக்க உள்ளது. இந்த மாநாட்டில் பல நாட்டின் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்த மாநாட்டிற்கு பொலிவியா நாட்டின் அதிபர் இவோ மோரெல்ஸ் தலைமை தாங்குகிறார். மேலும் ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன், மற்றும் ஐ.நா. பொதுச் சபை தலைவர் ஜான் ஆஷ், சீன அரசின் பிரதிநிதிகள் ஆகியோர்களுடன் இலங்கை அதிபர் ராஜபக்சேவும் கலந்துகொள்கிறார்.
இந்த மாநாட்டில் பங்குகொள்வதற்காக இன்று இலங்கையில் இருந்து அதிபர் ராஜபக்சே அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார். வரும் 15ஆம் தேதி இம்மாநாட்டில் ராஜபக்சே உரையாற்றுகிறார். அந்த சமயத்தில் அவருக்கு பொலிவியா நாட்டின் அமைதி மற்றும் ஜனநாயகத்துக்கான உயரிய விருது வழங்க பொலிவியா அதிபர் முடிவு செய்துள்ளார்.
இந்த தகவல் அறிந்த புலம்பெயர் தமிழ் அமைப்புகள் பொலிவிய அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளன. லட்சக்கணக்கான தமிழ் இன மக்களை கொலை செய்த ராஜபக்சேவுக்கு அமைதி விருது கொடுக்ககூடாது என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.