லாலு கட்சியை ராஷ்ட்ரீய மந்திரவாத பயிற்சி கட்சி என மாற்றலாம். மோடி யோசனை

லாலு கட்சியை ராஷ்ட்ரீய மந்திரவாத பயிற்சி கட்சி என மாற்றலாம். மோடி யோசனை
modi
பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இரண்டு கட்ட தேர்தல் முடிவடைந்துவிட்ட நிலையில், இன்றுடன் மூன்றாவது கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் முடிகிறது. இந்நிலையில் நேற்று பீகார் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து பாஜக வேட்பாளர்களுக்கு வாக்குகளை திரட்டிய பிரதமர் மோடி, உலகிலேயே மிக சிறந்த மந்திரவாதியாக லாலு பிரசாத் யாதவ் ஆகலாம் என்று கூறி உள்ளார். இதற்கு லாலு என்ன பதிலடி கொடுக்க போகிறார் என்பதை பீகார் வாக்காளர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

பா.ஜனதா கூட்டணிக்கு ஆதரவாக பீகார் மாநிலத்தில் உள்ள சாப்ரா, நாலந்தா ஆகிய இடங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசியபோது, ”பீகார் மாநில இளைஞர்கள் பிழைப்புக்காக வெளிமாநிலங்களுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். லாலு பிரசாத் யாதவும், நிதிஷ்குமாரும் இரு தலைமுறை இளைஞர்களின் வாழ்க்கையை கடந்த 25 ஆண்டுகளாக பாழாக்கி வந்துள்ளனர். பீகாரில் இளைய தலைமுறை இளைஞர்கள் வருகின்ற தேர்தல்களில் சாதி, இனத்தை மறந்து வாக்களிப்பார்கள் என நம்புகிறேன்.

மந்திரவாதி ஒருவருடனான சந்திப்பை நிதிஷ்குமார் நியாயப்படுத்துகிறார். இது குறித்து கருத்து தெரிவித்த லாலு பிரசாத் யாதவ், தானும் ஒரு மந்திரவாதி தான் என்கிறார். எனவே லாலு பிரசாத் யாதவ் தன்னுடைய கட்சியை ராஷ்ட்ரீய ஜனதா தளம் என்பதற்கு பதிலாக ராஷ்ட்ரீய மந்திரவாத பயிற்சி கட்சி என மாற்றிக் கொள்ளலாம். இதன் மூலம் உலகிலேயே மிகச் சிறந்த மந்திரவாதியாகவும் அவர் ஆகலாம்.

மக்களாட்சி நடந்து வரும் நம் நாட்டில் மக்கள் மந்திர தந்திரங்களை நம்பி இல்லை. இந்த தலைவர்கள் 18-ம் நூற்றாண்டில் இருக்கிறார்களா? என மக்கள் கேள்வி எழுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற தலைவர்களை மக்கள் தேர்தலில் புறக்கணிக்க வேண்டும். பீகாரில் இதுவரை லாலு, நிதிஷ், சோனியா ஆகியோர் தான் கூட்டணியாக போட்டியிடுகின்றனர் என நினைத்தேன். தற்போது 4-வது வீரராக மந்திரவாதி ஒருவரும் இந்த மெகா கூட்டணியில் இணைந்து இருக்கிறார்.

பீகார் மாநிலம் கயாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் மைக் மெக்கானிக் ஒருவரை ஒரு தலைவர் (லாலு) சமீபத்தில் அடிப்பது போல மிரட்டி உள்ளார். இதை டி.வி.யில் கண்டு நான் அதிர்ச்சி அடைந்துவிட்டேன். இதேபோல் மற்றொரு தேர்தல் பிரசாரத்தில் அந்த தலைவர் பால்காரர் ஒருவரை இழிவுப்படுத்தி பேசியதுடன், அவரை தூக்கி எறிந்து விடுவேன் என்றும் கூறியுள்ளார்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பே ஏழை தொழிலாளி ஒருவரை தூக்கி எறிந்து விடுவதாக கூறுவது ஆணவத்தின் உச்சம். ஏழை மக்களை தூக்கி எறிந்து விடுவேன் என்று கூறுபவர்களை மக்கள் தூக்கி எறிவார்கள். இந்த மாநில மக்களுக்கு தற்போது அடிப்படை வசதி அத்தியாவசியமாக தேவைப்படுகிறது. பீகார் மக்களுக்கு மின்சாரம், சாலை, குடிநீர் வசதிகளை தேசிய ஜனநாயக கூட்டணி கண்டிப்பாக வழங்கும்.

லாலு தன்னுடைய 2 மகன்களின் முன்னேற்றத்துக்கு மட்டும் வழிவகை செய்துள்ளார். தங்கள் குடும்பத்தை தவிர வேறு யாரை பற்றியும் அவருக்கு கவலை இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இந்த பகுதியில் உள்ள சாக்லேட் தொழிற்சாலை மேம்படுத்தப்பட்டு பல பீகார் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். லாலுவும், நிதிசும் மாநில முன்னேற்றத்தை பற்றி கவலைப்படாமல் பீகாரை சீரழித்து விட்டனர்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசியுள்ளார்.

English Summary: Narendra Modi picks on ‘Loktantrik’ Nitish, Lalu’s ‘Rashtriya Jadu-tona Party

Leave a Reply