லேட்டா வந்தாலும் கரெக்டா வரணும்: 2.0′ டிரைலர் விழாவில் ரஜினிகாந்த்
இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடந்த ‘2.0’ திரைப்படத்தின் டிரைலர் விழாவில் ரஜினிகாந்த், ஷங்கர், எமி ஜாக்சன், சுபாஷ்கரன், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது:
“என்னை தாய் தந்தையாக வளர்த்திருக்கும் எனது அண்ணன் சத்தியநாராயணராவ் கெய்க்வாட் வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி. இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட். இந்தப் படம் ரூ.600 கோடி முதலீட்டில் உருவாகியிருக்கிறது. இந்தியாவின் ‘ஸ்பீல் பெர்க்’ இயக்குநர் ஷங்கர். இந்த பெரிய முதலீட்டை படத்தின் தயாரிப்பாளர் நம்பி செலவிட்டதற்கு இயக்குநர் ஷங்கர் மட்டும் தான் காரணம்.
முதலில் இயக்குநர் ஷங்கர் என்னிடம் கதை செஒன்னார். நான் ஏற்கெனவே இரண்டு படங்களில் அவருடன் பணியாற்றியதால் என்னால் இந்தப் படத்தை பண்ண முடியுமா என்று கேட்கவில்லை. சிவாஜியின் வெற்றியை எந்திரன் கலெக்ட் செய்தது. எந்திரனின் வெற்றியை அடுத்து முதலில் ரூ.300 கோடி முதலீட்டில் எடுக்க திட்டமிட்டோம். அது தற்போது இரண்டு மடங்காக ரூ.600 கோடி அளவில் ஆகியிருக்கிறது.
இந்தப் படம் ஆரம்பிக்கப்பட்டபோது 14 முதல் 18 கிலோ வரையிலான எடையை மேக்கப் போட்டார்கள். அப்போது எனது உடல் தாங்காது. முடியவில்லை என்று கூறிவிட்டேன். பணத்தை திருப்பித் தருவதாகவும் இயக்குநர் ஷங்கரிடம் கூறிவிட்டேன். ஆனால் படத்தின் தயாரிப்பாளர் இந்த படத்திற்காக 4 வருடங்கள் கூட எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். நல்ல நண்பர் கிடைப்பது ஒரு ஹோகினூர் வைரம் மாதிரி.
இந்தப் படம் எப்போது வரும்? வருமா என்று சிலர் கேட்டனர் ஆனால் லேட்டா வந்தாலும் கரெக்டா வரணும். நான் படத்தைத் தான் கூறினேன். வந்தாச்சு, வெற்றி உறுதியாகிடுச்சு, ஹிட்டாக்க வேண்டியது தான் பாக்கி, மக்கள் முடிவு பண்ணிட்டாங்க. ஹிட்டாகிடும்” என்று கூறினார்