சோனி நிறுவனம் தயாரித்த ‘தி இண்டர்வியூ’ என்ற படத்தை ரிலீஸ் செய்ய மிரட்டல் விடுத்தல் வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வட கொரியாவில் உள்ள இணைய தளங்கள் சேவை முடங்கி போகும் அளவுக்கு ஹேக்கர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
வடகொரியாவின் இணையதளசேவை முடக்கப்பட்டுள்ளதற்குக் காரணம் தொழில் நுட்பக் கோளாறு என்று கூறப்பட்டு வந்தாலும் இது கண்டிப்பாக ஹேக்கர்களின் சதிதான் என்ற இணையதள சேவைகளை ஆய்வு செய்யும் நிறுவனமான டிஒய்என் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் சிறிய அளவில் தொடங்கிய இந்த முடக்கம், படிப்படியாக அதிகரித்து கிட்டதட்ட 90 சதவீதம் இணையதளங்கள் நேற்று முடங்கி போயுள்ளதாக கூறப்படுகிறது. இன்று வட கொரியாவில் உள்ள வெகு சிலரே இணையதளத்தை அணுக முடிவதாகவும் ஆர்பர் நெட்வொர்க்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.
சோனி நிறுவன கணினிகள் ஹேக் செய்யப்பட்டு, தகவல்கள் திருடப்பட்டதற்கு வடகொரியாவே காரணம் என்றும், இதற்கு சரியான நேரத்தில் தகுந்த பதிலடி வழங்கப்படும் என்றும் அமெரிக்கா ஏற்கனவே எச்சரித்திருந்த நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளதால் இது அமெரிக்க ஹேக்கர்களின் கைவரிசை என்று கூறப்படுகிறது.