வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் அறிவிப்பு
பொருளாதார வல்லுநர்களின் கணிப்புக்கு ஏற்ப வட்டி விகிதத்தில் ரிசர்வ் வங்கி எந்தவிதமான மாற்றத்தையும் செய்யவில்லை. தற்போதைய நிலையிலேயே வட்டி விகிதங்கள் தொடரும் என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் அறிவித்தார்.
அதன்படி குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் (ரெபோ விகிதம்- குறுகிய காலத்தில் வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வாங்கும் கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டி) தற்போதைய 6.5 சதவீத நிலையிலேயே தொடரும். அதேபோல ரிவர்ஸ் ரெபோ விகிதம் 6 சதவீத நிலையிலும், ரொக்கக் கையிருப்பு விகிதம் 4 சதவீதம் என்கிற நிலையிலும் தொடரும் என்று ராஜன் அறிவித்தார்.
ரிசர்வ் வங்கியின் செய்திக் குறிப்பு மற்றும் செய்தியாளர்களின் சந்திப்பில் ராஜன் கூறியதாவது.
ஏப்ரல் மாத பணவீக்கம் அதிகரித்திருக்கிறது. பணவீக்கம் கட்டுக்குள் இருந்தாலும் இன்னும் பாதுகாப்பான நிலையில் பணவீக்கம் இல்லை. தவிர அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி இம்மாத இறுதியில் வட்டி விகிதம் உயர்த்துவதற்கான சூழல் இருக்கிறது. அதேபோல பருவமழை குறித்த தெளிவான தகவல்கள் இல்லை என்பதால் பணவீக்கம் குறித்து நிச்சயமற்ற சூழல் இருக்கிறது.
மேலும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஏழாவது சம்பளக் கமிஷனின் பரிந்துரைகள் அமல்படுத்தும் பட்சத்தில் பணவீக்கம் உயரலாம். இவற்றை கணக்கில் எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் ஏப்ரலில் இருந்த நிலையே இப்போதும் தொடரலாம்.
ஏப்ரல் மே மாதங்களில் வங்கிகள் எம்சிஎல்ஆர் முறையை பின்பற்ற தொடங்கி உள்ளன. இதன் காரணமாக வட்டி விகிதம் குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால் வங்கிகளுக்கு மேலும் அவகாசம் அளிக்க வேண்டும். ரிசர்வ் வங்கியிடம் போதுமான டாலர் கையிருப்பு உள்ளது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் எந்த விதமான இலக்கும் நிர்ணயம் செய்யப்படவில்லை. முன்னதாக நிர்ணயம் செய்யப்பட்ட பணவீக்க இலக்கு தொடர்கிறது. 2017 ஜனவரிக்குள் நுகர்வோர் பணவீக்கம் இலக்கு ஐந்து சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பேமென்ட் வங்கி
சில நிறுவனங்கள் பேமென்ட் வங்கிக்கான அனுமதியை வாங்கிய பிறகு அதனை ரத்து செய்தன. இது குறித்த கேள்விக்கு இது குறித்து நாங்கள் அதிகமாக கவலைப்பட வில்லை. அனுமதி கொடுப்பதை மாற்றி அமைக்கும் போது மேலும் பல நிறுவனங்கள் பேமென்ட் வங்கி தொடங்கும். நிறுவனங்கள் அனுமதி கோரி விண்ணப்பிக்கும் போது, அனுமதி ஒரு மதிப்புமிக்க ஒரு சொத்தாக மட்டும் பார்க்காமல், அந்த தொழிலில் ஈடுபவது குறித்தும் நிறுவனங்கள் ஈடுபட வேண்டும் என்றார்.
வாராக்கடனை கையாள மத்திய அரசு ஒரு நிறுவனத்தை உருவாக்க திட்டமிட்டு வருகிறது. இது குறித்த கேள்விக்கு புதிய நிறுவனத்தில் கடன் கொடுத்தவர்களே (வங்கிகள்) முக்கிய பங்குதாரர்களாக இருப்பது சரியான முடிவல்ல என்றும் கூறினார்.