வதந்தியை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறுவது ஏன்?
கடந்த சில நாட்களாக முதல்வர் உடல்நலமின்றி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருடைய உடல்நலம் குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகிறது. இதுவரை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் மட்டுமே அவ்வப்போது முதல்வரின் உடல்நலம் குறித்து அறிக்கைகளை வெளியிட்டு வந்தாலும் அரசின் செய்தித்துறை இதுவரை முதல்வர் உடல்நலம் குறித்து எந்தவித அறிவிப்பையும் செய்யவில்லை. இதுவே வதந்திகள் பரவ காரணமாக அமைகின்றன.
வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை என்று எச்சரிக்கும் அரசு, வதந்திகள் பரவாமல் இருக்க முதல்வர் உடல்நிலையின் உண்மை நிலையை அறிவிக்கலாமே. ஜெயலலிதாவுக்கு என்னதான் பிரச்னை என்பதை வெளிப்படையாக பகிராமல், ஏதோ ராணுவ ரகசியம் போல தமிழக அரசு கட்டிக்காப்பாற்றிக் கொண்டிருப்பது ஏன்?
மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வந்து முதல்வரை சந்தித்து உடல் நலம் விசாரித்தார் என்று ஒரு செய்தி வருகிறது. ஆனால், அவர் சந்தித்த போட்டோ எதுவுமே வரவில்லை. அப்போலோ அருகே அவரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, பதில் எதுவும் சொல்லாமே காரைக் கிளப்பிவிட்டார். அவர் ஒரு மக்கள் பிரதிநிதி… மத்திய அரசின் அங்கம். அவரே ஏன் வாய் திறக்க மறுக்கிறார்?
ஜெயலலிதாவைச் சந்தித்து அதிகாரிகள் பலவிஷயங்களை விவாதித்ததாக செய்திகள் வருகின்றன. அப்படி விவாதித்தபோது எடுக்கப்பட்ட போட்டோக்களையாவது போடலாமே. அல்லது விவாதித்த அதிகாரிகளில் முக்கியமான ஒரு அதிகாரியாவது வெளியில் பேசலாமே?! அ.தி.மு.க- அமைச்சர்கள் மட்டுமல்ல, தமிழக அரசின் உயர் அதிகாரிகள்கூட ஜெயலலிதாவின் உடல் நிலையைப் பற்றி துளிகூட அறிந்திருக்கவில்லை என்பதுதான் உண்மையாக இருக்கிறது.
எனவே உடனடியாக முதல்வர் உடல்நிலையின் உண்மைகள் அரசு வெளியிட்டு வதந்திகள் பரவாமல் தடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.